ஆதார் எச்சரிக்கை : திரும்பப்பெற்ற மத்திய அரசு!

ஆதார் அட்டையின் நகலை எந்த நிறுவனங்களிடமும் பகிர வேண்டாம் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியிருந்த நிலையில் அந்த அறிவிப்பு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
எந்தவொரு நிறுவனத்திடமும் ஆதார் அட்டையின் நகலைப் பகிர வேண்டாம் என்றும் அதனைத் தவறாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்திருந்தது.
ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்கள் மட்டுமே தெரியும் வகையிலான மாஸ்கட் எனப்படும் மறைக்கப்பட்ட ஆதாரை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டிருந்தது.
குறிப்பாக பிரவுசிங் சென்டர்கள் மற்றும் வெளியே செல்லும்போது பொதுக் கணினிகளில் ஆதார் கார்டை டவுன்லோட் செய்வதைத் தவிர்க்க வேண்டுமென்றும் அவ்வாறு டவுன்லோட் செய்ய அவசியம் ஏற்பட்டால் நகல் எடுத்த பிறகு உடனடியாக அதனை நீக்கிவிடுமாறும் அறிவுறுத்தியிருந்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில் #adhaar என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆனது. இதில் ஆதார் தகவல் திருட்டு தொடர்பாகப் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இவ்வளவு நாட்களாக பல இடங்களில் ஆதார் நகல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இப்படி ஒரு அறிவிப்பு வெளியானது பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்தது.
இந்நிலையில் இந்த அறிவிப்பைத் திரும்பப் பெறுவதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது
அதில், ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட ஆதார் அட்டையை தவறாகப் பயன்படுத்த முயன்ற பின்னணியில் பெங்களூரு பிராந்திய ஆதார் ஆணையத்தின் அலுவலகத்திலிருந்து நேற்று இந்த அறிவிப்பு வெளியானது.
இந்தப் பத்திரிகை செய்தியைத் தவறாகப் புரிந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில்கொண்டு, இந்த அறிவிப்பு உடனடியாக திரும்பப் பெறப்படுகிறது. ஆதார் ஆணையம் மூலம் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்களைப் பயன்படுத்துவதிலும் பகிர்வதில் சாதாரண எச்சரிக்கையுடன் வழக்கம்போல் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பிரியா