மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 மே 2022

அதிருப்தி அலைக்கு ஸ்டாலின் தந்த அதிர்ச்சி வைத்தியம்!

அதிருப்தி அலைக்கு ஸ்டாலின் தந்த அதிர்ச்சி வைத்தியம்!

நேற்று (மே 28) நடைபெற்ற தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில், அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியதே கட்சியின் தொண்டர்கள் மட்டம்வரை இப்போது பேசுபொருள் ஆகியிருக்கிறது. காரணம், கடந்த ஓராண்டாக கட்சிக்குள் அங்கும் இங்குமாக அப்படியும் இப்படியுமாக நிலவிவந்த விவகாரத்தை தலைவரே கவனித்து, அதற்கு ஒரு தீர்வையும் சொல்லிவிட்டார் என்பதே!

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் தி.மு.க. தரப்பில், உள்ளூர் மட்ட அளவில் கட்சியினர் மத்தியில் அவ்வளவு மகிழ்ச்சி இல்லையென்றே அனைத்து மாவட்டத்துக்காரர்களும் சொல்கிறார்கள்.

ஒப்பந்தப் பணிகள், அரசுப் பணி நியமனம் ஆகியவற்றில் கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே பல புதுப்புது முறைகள் வந்துவிட்டன. பெரும்பாலான அரசாங்க நடைமுறைகள் கணினிமயமாக மாற்றப்பட்டுள்ளன. இன்னும் பல துறைகளிலும் கணினிமயம் ஆக்குவதற்காக கணிசமான நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் கட்சியினர் தங்கள் கட்சியின் ஆட்சியில் பொதுவான எதிர்பார்ப்பாக வைத்திருப்பது, வேண்டியவர்களுக்கு உரிய இடத்தில் இடமாற்றம் வாங்குவது, வாங்கித்தருவதாக இருக்கிறது.

தி.மு.க.வைப் பொறுத்தவரை தொடக்க காலம் முதல் இப்போதுவரை அமைப்புமுறைப்படியே பெரும்பாலான செயல்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள நிர்வாகி தனக்கு வேண்டியவருக்கு இடமாற்றல் வேண்டும் என்றால், அந்த ஒன்றியச் செயலாளர் மூலமாக சட்டமன்ற உறுப்பினரை அணுகுகிறார்.

சட்டமன்ற உறுப்பினரோ தனக்கு பொறுப்புடைய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்தவர்களின் கோரிக்கைகளில், தன் கணக்கில் முன்னுரிமைப் படுத்திக்கொண்டு அவற்றை மாவட்ட அமைச்சர் மூலமாகவோ மாவட்டச்செயலாளர் மூலமாகவோ சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கோரிக்கையைக் கொண்டுசெல்கிறார்கள்.

சர்வசாதாரணமான இந்த நடைமுறையில், இப்போது, அமைச்சர் மட்டத்தில் மட்டுமல்ல, தங்கள் களப்பணியின் மூலம் சட்டமன்ற உறுப்பினரானவரே கோரிக்கையைக் கொண்டுபோனால் சிடுமூஞ்சியாக கோபம் காட்டுகிறார்கள்; அலட்சியமாக நடந்துகொள்கிறார்கள் என்பதே உள்ளூர் மட்டத்தில் கட்சிக்காகப் பாடுபட்ட தொண்டர்களின் ஆதங்கம்.

அனைத்து மாவட்டங்களிலும் காணப்படும் இந்த நிலைமையை, நீண்டகாலக் கட்சிக்காரர்கள், இது ஒரு நல்ல அறிகுறியாக இல்லையே என ஆங்காங்கே மேல்மட்டத் தூதுவர்களிடம் தெரியப்படுத்துகிறார்கள். ஆனாலும் பிரச்னை தீர்வதாக இல்லை.

சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேசிப் பார்த்தபோது, அவர்கள் தங்களின் குறைகளைக் கொட்டுகிறார்கள். ” அதிகபட்சம் ஆசிரியர், செவிலியர் போன்ற பணிகளுக்கான இடமாற்றல் கோரிக்கைகளை அமைச்சர்கள் அளவில் கொண்டுபோகிறோம். வேலை நடக்கிறதா இல்லையா என்பதை கீழ்மட்டத்தில் பார்க்கிறார்கள். ஆனால் எங்கள் பாடு அவர்களுக்குத் தெரியாது. பல அமைச்சர்களின் அலுவலகங்களில் உதவியாளர்கள் உட்கார்ந்துகொண்டே ரொம்பவும் மெனக்கெட்டு வேலை பார்க்கிறார்கள்போல... நாங்கள் காத்திருந்து நின்றபடி அவர்களிடம் மனுக்களைத் தந்து நாலு வார்த்தை பேசுவதற்குள் ஒருவழி ஆகிவிடுகிறோம். இந்த அளவில்தான் நிலவரம் இருக்கிறது.” என கதைகளைச் சொல்கிறார்கள்.

அமைச்சர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, வேறொரு சித்திரத்தை அவர்கள் காட்டுகிறார்கள்.

”அவரவர் பாடு அவர்களுக்கு... எல்லாவற்றையும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கமுடியுமா? எங்களுக்கென உள்ள கமிட்மெண்ட்டுகளை முடிக்கவேண்டாமா? அது முக்கியமா இது முக்கியமா என்றால், ரெண்டும்தான் முக்கியம்.. கொஞ்சம் முன்ன பின்ன ஆகத்தான் செய்யும்... சில மா.செ.கள்கூட கோபித்துக்கொள்கிறார்கள்... என்ன செய்ய..? அடுத்து தேர்தல் வருகிறது. கட்சி நிதி இருக்கிறது... “ என்பது அமைச்சர்கள் வட்டாரத்து வெதும்பலாக இருக்கிறது.

சங்கிலித் தொடரைப் போல கீழிருந்து மேல்மட்டம்வரை கட்சிக்காகப் பாடுபட்ட தொண்டர்களின் அதிருப்தி குறித்து, ஒன்றுக்கும் மேற்பட்ட பல குழுக்கள் மூலம் தலைமைக்குப் போய்ச்சேர்ந்திருக்கிறது. அதன் எதிரொலியாகத்தான், மா.செ.கள் கூட்டத்தில் முதலமைச்சர் உடைத்துப் பேசிவிட்டார்.

”தொண்டர்களின் உழைப்பின் காரணமாகவே முதலமைச்சராக நான் இருக்கிறேன். பலரும் அமைச்சர்களாக ஆக்கப்பட்டுள்ளீர்கள் . சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆகியிருக்கிறீர்கள். மாவட்டக் கழகச் செயலாளர்களாக ஆகி இருக்கிறீர்கள். உள்ளாட்சித் தேர்தலின் மூலமாக பலரும் பொறுப்புகளுக்கு வந்துள்ளார்கள்.

நீங்கள் அனைவரும்தானே கழகத் தொண்டர்களைக் கவனிக்க வேண்டும்? நீங்கள் தானே தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தாக வேண்டும்?

கடைக்கோடித் தொண்டனின் தேவையை அந்தப் பகுதியின் அமைச்சரோ - சட்டமன்ற உறுப்பினரோ தீர்க்க வேண்டுமா? அல்லது முதலமைச்சராக இருக்கிற நான் தீர்க்க வேண்டுமா?!

தொண்டன் உழைக்காமல் - நிர்வாகி வேலை பார்க்காமல் - யாரும் வெற்றி பெற்று வந்துவிடவில்லை. நாளைக்கே தேர்தல் வந்தால் - அதே தொண்டன் வீட்டுக்குத்தான் நீங்கள் போயாக வேண்டும். தொண்டர்கள் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

கழகத்தினரின் கோரிக்கைகளுக்கு உரிய முன்னுரிமை அளித்து அவற்றை நிறைவேற்றி, தேவையான உதவிகளைச் செய்து தந்திட வேண்டும் என்று கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்ற செய்தி தான் வர வேண்டும்.

அமைச்சர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் – பொறுப்பாளர்களும் முழுமையாக கவனம் செலுத்தி தொண்டர்களும், அவர்தம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும்.” என்று ஸ்டாலின் காட்டமாகவும் வேண்டுகோளாகவும் விலாவாரியாகப் பேசினார்.

ஏற்கெனவே, உள்கட்சித் தேர்தலில் தில்லுமுல்லு செய்த சில நிர்வாகிகள் மீதான நடவடிக்கை குறித்தும் அவர் மட்டத்தில் ஆலோசனை நடந்துவருவதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

ஞாயிறு 29 மே 2022