மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 மே 2022

மோடியின் எட்டு ஆண்டுக்கால ஆட்சி: காங்கிரஸின் விமர்சனமும் பதிலும்!

மோடியின் எட்டு ஆண்டுக்கால ஆட்சி: காங்கிரஸின் விமர்சனமும் பதிலும்!

குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த எட்டு ஆண்டுகளில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர் நரேந்திர மோடி , மகாத்மா காந்தி மற்றும் சர்தார் படேல் கனவு கண்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்காக பாஜக செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

மோடி கடந்த 2014ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி பிரதமராகப் பொறுப்பேற்றார். இரண்டாவது முறையாக 2019ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி பொறுப்பேற்றார். அதன்படி பாஜக ஆட்சி அமைத்து எட்டு ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பாஜகவும் தீவிர முனைப்புக் காட்டி வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி, மோடி அரசின் இந்த எட்டு ஆண்டுக்கால ஆட்சி பேரலையை ஏற்படுத்தியுள்ளதாக ட்விட்டரில் விமர்சித்தது. இதனால் #8 years of disaster என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது. பணமதிப்பழிப்பு, முன்னறிவிப்பில்லாத லாக்டவுன், பொருளாதாரம் சரிவு, வேலையின்மை அதிகரிப்பு, வெறுப்பு அரசியல், உயரும் பணவீக்கம், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், ரூபாய் மதிப்பு சரிவு, சமூக கட்டமைப்பில் பாதிப்பு ஆகியவை கடந்த எட்டு ஆண்டுக்காலத்தில் மோடி அரசு சந்தித்த தோல்வி என காங்கிரஸ் விமர்சித்தது.

இந்த நிலையில் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த எட்டு ஆண்டுகளில், நாட்டு மக்களுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய எதையும் செய்யவில்லை. இந்தக் காலகட்டத்தில், மக்களுக்கு 'சேவை', 'நல்லாட்சி' மற்றும் ஏழைகள் நலன் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம், அனைவரும் முயல்வோம் என்பது போன்ற தாரக மந்திரங்கள், தேச வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்துள்ளன.

தற்போது 3 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டிருப்பதுடன், 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள், திறந்தவெளி கழிப்பிடப் பழக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 9 கோடிக்கும் மேற்பட்ட சகோதரிகள், சமையலறை புகையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 2.5 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு, 6 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் இணைப்பு பெற்றிருப்பதோடு, 50 கோடி பயனாளிகள், ரூ.5 லட்சம் வரை மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றிருப்பதாகவும் கூறிய அவர், இவை அனைத்தும் வெறும் எண்ணிக்கையல்ல. ஆனால், ஏழைகளின் கண்ணியத்தை உறுதி செய்வது மற்றும் தேசப் பணியில் நமது அர்ப்பணிப்புக்கான ஆதாரம் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த எட்டு ஆண்டுகளில் மகாத்மா காந்தி, சர்தார் படேலின் கனவான இந்தியாவை உருவாக்க முயன்றோம். நல்லாட்சிக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறோம். பல்வேறு திட்டங்கள் மூலம் ஏழை மக்களுக்குச் சேவை செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சி செய்தோம் என்றும் கூறினார்.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

ஞாயிறு 29 மே 2022