மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மே 2022

அதிரடி ஆஃபரை அறிவித்த ஆருத்ரா நிறுவனத்தின் பின்னணி!

அதிரடி ஆஃபரை அறிவித்த ஆருத்ரா நிறுவனத்தின் பின்னணி!

நடிகர் சூர்யா நடித்த பிதாமகன் படத்தில் 100 ரூபாய் வைத்தால் 200, 200 ரூபாய்வைத்தால் 400 ரூபாய் எடுத்துக்கலாம் என ஒரு விளையாட்டு காட்சி வரும். அந்த பாணியில் ஆருத்ரா கோல்டு கம்பெனி, ஒரு லட்சம் டெபாசிட் செய்தால் மூன்று லட்சம் வட்டி வரும், மூன்று லட்சம் டெபாசிட் செய்தால் ஒன்பது லட்சம் வட்டி வரும்என அறிவிப்பு செய்து பொதுமக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தது.

தனியார் நிறுவனமான ஆருத்ரா கோல்டு கம்பெனிக்கு தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி என பல இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த கம்பெனி சார்பில் சமீப நாட்களாக பொது மக்களை ஈர்க்கும் வண்ணம் சிறப்பு ஆஃபர்களில், ஒரு லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் ரூ.30,000 வட்டி கிடைக்கும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றன. இந்த அறிவிப்புகளை நம்பி பொதுமக்கள் பலரும் ஆருத்ரா நிறுவனத்தில் பணத்தை டெபாசிட் செய்திருக்கின்றனர். இதுகுறித்து தகவலறிந்து பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர், ஆருத்ரா நிறுவன கிளைகள் மற்றும் அதற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி சீல் வைத்தனர்.

இதுதொடர்பாக ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்திருந்த சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சதீஷ் நம்மிடம் கூறுகையில், “சுமார் ஒன்றரை வருடத்துக்கு முன்பு இந்த கம்பெனி அறிமுகமானது. சமீபத்தில் சென்னை அமைந்தகரை மேத்தா நகரில் செயல்பட்டு வந்த அரூத்ரா கோல்டு நிறுவனத்தின் வாசலில் மக்கள் லட்சக்கணக்கில் பணத்தை வைத்துக்கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். நானும் எனது உறவினர் பெயரில் சில லட்சம் பணம் டெபாசிட் செய்துள்ளேன்.

ஒரு லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் 30 ஆயிரம் வீதம் பத்து மாதத்திற்கு வட்டி கொடுப்பார்கள். ஆனால் செலுத்திய அசல் தொகையான அந்த ஒரு லட்சம் கைக்கு வராது. இருந்தாலும் செலுத்திய தொகையை விட அதிக லாபம் கிடைக்கிறது என்று பலபேர் 25 லட்சம், 50 லட்சம் என்று ரொக்கம், ரொக்கமாக டெபாசிட் செய்தனர். இதுவரையில் பணம் டெபாசிட் செய்தவர்களுக்கு மாதம் தோறும் ஒரு லட்சத்துக்கு 30 ஆயிரம் வந்துகொண்டுதான் இருக்கிறது.

தற்போது புதிய ஆஃபர் அறிவித்தனர். ஒரு லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் ரூ.30 ஆயிரமும், கூடுதலாக இரண்டு கிராம் கோல்டு காயினும் கொடுப்பதாக தெரிவித்தனர். அதற்கு முன்பு அறிவித்த ஒரு ஆஃபரில் ஒரு லட்சத்துக்கு ரூ.25 ஆயிரம் பணமும் ஒரு கிராம் கோல்டு காயினும் வழங்கினார்கள். இது பணம் செலுத்திய தேதியிலிருந்து 10 மாதத்துக்கு வழங்கினார்கள்.

சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் பல்வேறு இடங்களிலும் 15க்கும் மேற்பட்ட கிளைகளைத் துவங்கி அசுர வேகத்தில் வளர்ந்தனர். இந்நிலையில் தான், எந்த விதமான புகார்களும் இல்லாமல் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி சுமார் ரூ. 3.41 கோடி பணமும் ஆவணங்களையும் கைப்பற்றிக்கொண்டு தற்காலிகமாக மூடியுள்ளார்கள்” என்றார்.

ஆரூத்ரா கோல்டு கம்பெனியின் பின்னணி என்ன என்று விசாரித்த போது, “திருவண்ணாமலை மாவட்டம் விளாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். துபாய் சென்று சில காலத்துக்கு பிறகு ஊர் திரும்பினார். சென்னையில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு ஏற்கனவே எம்.எல்.எம் குரூப்பில் தொடர்புள்ளது. பிட் காயின் மற்றும் ஷேர் மார்க்கட்டில் ஈடுபட்டு வருகிறார். ஆரூத்ரா கோல்டு கம்பெனியைத் துவங்கிக் கடந்த மூன்றரை வருடமாக ஒரு லட்சத்துக்கு மாதம் 25 ஆயிரம், 30 ஆயிரமும்ம் கோல்டு காயின் ஆகியவற்றை வழங்கி வந்தார்.

ராஜசேகருக்கு அரசியல் பிரமுகர்களுடன் நல்ல தொடர்புள்ளது. இந்நிறுவனத்தின் ஒரு கிளையை திமுக பிரமுகர் ஒருவரே திறந்து வைத்ததாகவும் சொல்கிறார்கள்” என்று அரூத்ரா கோல்டு நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்த பெயரி குறிப்பிட விரும்பாத கஸ்டமர்கள் சிலர் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக பொருளாதார குற்றப் பிரிவு போலீசாரிடம் விசாரித்தபோது, “சோஷியல் மீடியாக்களில் பலரும் உண்மை தெரியாமல் கம்பெனிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த கம்பெனி அறிவித்தபடி, மாதம்தோறும் பணம் கொடுத்து வந்தது. ஏன் சீல் வைத்து மூடினார்கள் என்றெல்லாம் கேட்கிறார்கள். அந்த கம்பெனியின் நோக்கம் வேறு. சின்ன மீன்களைப் போட்டு பல திமிங்கிலத்தைப் பிடிப்பதுதான் அவர்களது நோக்கமே. ஒரு லட்சம், ஐந்து லட்சம் போட்டவர்களுக்கு மாதம்தோறும் கை நிறையப் பணம் கொடுத்து ஆசைகாட்டி, மற்றவர்கள் கவனத்தையும் ஈர்த்துப் பல கோடிகளை அள்ளியுள்ளார்கள். இன்னும் கொஞ்சம் கஸ்டமர்களை சேர்த்து கோடிகளை அள்ளிக்கொண்டு தலைமறைவாகிவிடுவார்கள். அதன் பிறகு பணம் கொடுத்தவர்கள் போலீஸிடம் வந்து மல்லுக்கட்டுவார்கள். பணத்தை மீட்டுக் கொடுக்கச் சொல்லிப் போராடுவார்கள். மக்கள் யாரும் இதுபோன்ற அறிவிப்புகளை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்” என்று கூறினர்.

ஆருத்ரா கம்பெனி மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு குற்ற எண், 07/2022 u/s 420,406,120B, ஐபிசி v/w 3&5, கட்டுப்பாடற்ற வைப்புத் திட்டங்களைத் தடை செய்யும் சட்டம் மற்றும் ரிசர்வ் பேங்க் சட்டம் 1934 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதோடு பொதுமக்கள் யாரேனும் இந்த கம்பெனியில் பணம் கட்டி பாதிக்கப்பட்டிருந்தால், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், அசோக் நகர், சென்னை முகவரியை அணுகி புகார் மனு கொடுக்கலாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

பிதாமகன் படத்தில் வரும் அந்த காட்சியில் ஓரிடத்தில் ‘மொதல்ல கொடுக்கிற மாதிரி கொடுத்து அப்புறம் எல்லாத்தையும் பிடிங்கிருவாங்க’ என்ற வசனம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணங்காமுடி

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

வியாழன் 26 மே 2022