மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மே 2022

மு.க.ஸ்டாலின் தமிழ் இனத் தலைவரா?!

மு.க.ஸ்டாலின் தமிழ் இனத் தலைவரா?!

மே மூன்றாவது வாரத்தில் நடந்த நான்கு முக்கியமான நிகழ்வுகள் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் பற்றி சர்வதேச அளவில் பேச வைத்திருக்கின்றன.

பேரறிவாளனை கட்டியணைத்த ஸ்டாலின்

முதல் நிகழ்வு மே 18 ஆம் தேதி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தின் பேரில் விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கடுமையாக எதிர்த்த நிலையில்... தன்னை சந்திக்க வந்த பேரறிவாளனை கட்டியணைத்து தனது உடல் மொழி மூலம் தன் உணர்வை வெளிப்படுத்தினார் ஸ்டாலின்.

இந்த காட்சி உலகமெங்கும் உள்ள தமிழர்களால் பாராட்டும் விமர்சனமும் கலந்து பெற்ற நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

நாடு கடந்த தமிழீழ அரசின் நிகழ்வுக்கு தடை

இந்த நிலையில் மே 21-ஆம் தேதி நாடு கடந்த தமிழீழ அரசின் மூன்றாவது அரசவையின் எட்டாவது அமர்வு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஒரு தனியார் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு பிறகு... புலிகள் தங்கள் ஆயுதப் போராட்டத்தை முற்றுமுழுதாக கைவிட்ட நிலையில் ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களின் அரசியல் அமைப்பாக நாடு கடந்த தமிழீழ அரசு அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டது. 2010ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த அமைப்பு அனைத்து நாடுகளின் சட்டங்களை மதித்து ஜனநாயக ரீதியில் இலங்கை தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தொடங்கப்பட்டது.

இந்த அமைப்புக்கு தமிழக தோழமை மையப் பொறுப்பாளராக பேராசிரியர் சரஸ்வதி இருக்கிறார். கடந்த மே 21-ஆம் தேதி இந்த அமைப்பின் கருத்தரங்கு சென்னையில் ஒரு தனியார் ஹோட்டலில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் காணொளி வழியாகவும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பேராசிரியர் சரஸ்வதி, மலேசியாவின் பினாங்கு மாநில முன்னாள் முதல்வர் ராமசாமி, தியாகு உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்துக்கு கடைசி நேரத்தில் தமிழக காவல்துறை அனுமதி மறுக்க, திராவிடர் விடுதலை கழக அலுவலகத்தில் கூட்டம் உடனடியாக மாற்றப்பட்டு அங்கு நடந்தது.

இந்தக் கூட்டத்தின் மேடையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சின்னம் நடுவில் பொறிக்கப்பட்டு இருக்க ஒரு பக்கம் இந்திய தேசியக் கொடியும் இன்னொரு பக்கம் புலிகளின் கொடியும் வரையப்பட்டிருந்தன.

அங்கே கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே சென்னை மயிலாப்பூர் காவல்துறையினர் உள்ளே சென்று நிகழ்வை நிறுத்தினர். நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் பங்கேற்பாளர்கள் என 16 பேரை கைது செய்தனர். கைது செய்யப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்தேசிய செயல்பாட்டாளர் தியாகு, "விரிவான வகையில் இந்த நிகழ்வு தனியார் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலை திடீரென அனுமதி மறுக்கப்பட்டது என்று தகவல் வந்ததால் ஹோட்டலில் நிகழ்ச்சி நடத்த முடியாத சூழல் உருவானது. இதையடுத்து திராவிட விடுதலைக் கழக அலுவலகத்தில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றபோது மயிலாப்பூர் போலீசார் வந்து நிகழ்ச்சியை நிறுத்தியுள்ளார்கள். எங்களை கைது செய்கிறார்கள். சர்வதேச சமூகத்தின் பார்வையில் தமிழக அரசுக்கு இது அவப்பெயரை உண்டாக்கும்" என்று குறிப்பிட்டார்.

முதல்வரை அழைத்த உருத்திரகுமாரன்

இதைவிட இந்த நிகழ்ச்சியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திர குமாரன் பேசிய பேச்சு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது ‌‌

காணொளி வாயிலாக அவர் பேசியபோது..." இந்தக் கூட்டத்தை தமிழகத்தில் நடத்துவதற்கு ஒரு மாதம் முன்பு நாங்கள் முடிவெடுத்தோம். அதற்காக மூன்று வாரங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக ஒரு அழைப்பை நான் விடுத்திருந்தேன். இந்த கூட்டத்திற்கு தமிழக முதல்வரை தலைமை தாங்கி அல்லது சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு முதல்வருக்கு நாங்கள் கடிதம் அனுப்பி இருந்தோம்.

அதற்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து எங்களுக்கு கூறப்பட்ட மறுமொழியில், 'மே 18 முதல் 23 வரை முதல்வர் தமிழகத்தில் இருக்க மாட்டார். அதனால் இதில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எந்த நேரத்திலும் இந்த கூட்டம் சட்டவிரோதமான கூட்டம் என்று அப்போது எங்களுக்கு கூறப்படவில்லை. அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக நாங்கள் முதலமைச்சர் அலுவலகத்துடன் தொடர்பில் இருந்தோம். எந்த ஒரு கட்டத்திலும் இந்தக் கூட்டம் முறையற்ற கூட்டம் என்று எங்களுக்கு கூறப்படவில்லை.

நாங்கள் அமெரிக்காவில், ஐரோப்பாவில், கனடாவில் எங்கள் அமர்வுகளை நடத்தியிருக்கிறோம். எந்த நாட்டிலும் போலீஸ் அனுமதி தேவைப் பட்டது இல்லை. நாங்கள்

நடத்துகிற நிகழ்வு ஜனநாயக முறையிலானது. பேச்சுரிமை கருத்துச் சுதந்திரம் அடிப்படையிலானது. நாங்கள் பொது இடத்தில் ஒரு நிகழ்வை நடத்தினால் அதற்கு போலீசார் அனுமதி பெறுகின்றோம். அங்கு எத்தனை வாகனங்கள் வருகின்றன, போக்குவரத்துக்கு இடைஞ்சலாகுமா என்பதற்காகதான் போலீசிடம் அனுமதி பெறுகின்றோம்.

இந்த அடிப்படையில் தமிழகத்தில் எங்கள் தோழமை மையம் இந்த கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தது. இதற்காக எல்லா ஒழுங்குகளும் செய்து நடந்து வந்த நிலையில் இன்று காலை பேராசிரியை சரஸ்வதியிடம் போலீசார் சென்றிருக்கிறார்கள். வைகோவிடம் போலீசார் சென்றிருக்கிறார்கள். இந்த கூட்டத்தை நடத்த முடியாது என்று கூறியிருக்கிறார்கள். பிறகு, ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தினம் இன்று. இந்த தினத்தில் ஏன் நடத்துகிறீர்கள் என்று கேட்டார்கள். அடுத்தது பேரறிவாளன் விடுவிக்கப்பட்டதால் தமிழக அரசு அழுத்தத்தில் இருக்கிறது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசு முன்வைக்கும் கோட்பாடுகளும் அதன் செயற்பாடுகளும் வெளிப்படையானவை. நாங்கள் பதுங்கு குழிக்குள் இருந்து செயல்படவில்லை.

முதலமைச்சருக்கே அறிவித்து தான் இந்த நிகழ்வை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். ஆனால் இந்த நிகழ்வு இன்று அரைவாசியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நடத்தப்பட்டது குறித்து போலீசாரிடமிருந்து எழுத்துபூர்வமான கடிதம் எங்களுக்கு இன்னும் வரவில்லை. அப்படி வந்ததும் நாங்கள் இந்திய நீதிமன்றங்களில் சட்டபூர்வமாக முறையிடுவோம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெரிய நிகழ்வு ஒன்றை இந்தியாவில் விரைவில் நடத்துவோம்" என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று பேசியிருக்கிறார் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன்.

முதலமைச்சருக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பு தெரிவித்துவிட்டு, அவரை கலந்து கொள்வதற்கும் சம்மதம் கேட்டு அவரது தேதி கிடைக்காத நிலையில் இந்த கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் திடீரென போலீஸ் தடை விதித்துள்ளது.

சூட்டைக் கிளப்பிய ஊட்டி ஆலோசனை

கடந்த மே 21ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலின் அன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் என்பதால் அவரது உருவப்படத்திற்கு காலையில் மரியாதை செலுத்தினார். அன்று பிற்பகல் திடீரென காணொளி வழியாக ஓர் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் ஸ்டாலின். இந்தக் கூட்டத்தில் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுவித்த அடிப்படையில் இதே வழக்கில் சிறையில் இருக்கும் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட ரீதியான சாத்தியங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது என அரசு தகவல் வெளியிட்டது. இதுவும் உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழர்களிடம் ஆதரவும் எதிர்ப்பும் பெற்றது. இந்த ஆலோசனையை மே 21-ஆம் தேதி தான் நடத்த வேண்டுமா என்று காங்கிரஸ் கட்சியில் சிலரும் கேள்வி எழுப்பினார்கள்.

பெசன்ட் நகர் கடற்கரையை கொடுத்த போலீஸ்

இதைப்போலவே மே 22ம் தேதி இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது. மே 22ஆம் தேதி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியை மே 17 இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு முதலில் அனுமதி தந்த தமிழக காவல்துறை அந்த நிகழ்வுக்கு முதல் நாள் திடீரென சென்னை மாநகராட்சி அனுமதி மறுப்பை காரணம் காட்டி நிகழ்வை தடுத்து நிறுத்தியது.

இது குறித்து மே 17 இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பிலேயே சில உண்மைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

"அமைதியான முறையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி ஆண்டுதோறும் நடத்தி வந்த நினைவேந்தல் நிகழ்வு 2017ல் தடுக்கப்பட்டது.

கடந்த மே 2-ம் தேதி காவல்துறை உயர் அதிகாரிகளிடத்தில் நினைவேந்தல் நடத்த மெரினா, பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் நடத்த அனுமதி கோரினோம். நீண்ட ஆலோசனைக்கு பின் கடந்த வாரம் காவல்துறையே நினைவேந்தல் நடத்த பெசன்ட் நகர் கடற்கரையை தேர்ந்தெடுத்து ஒதுக்கிக் கொடுத்தது.

அனைத்துக் கட்சி தலைவர்கள், ஆளுமைகள் பங்கேற்பதாக அறிவித்த பின்னர், மே 21 2022 பின்னிரவில் அனுமதி கொடுப்பது இயலாது என காவல்துறை அறிவித்தது. இதற்கான அனுமதி மறுப்பு கடிதத்தை பின்பு அளித்தனர்" என்று மே 17 இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவனிக்கத் தக்க விஷயம்

நாடு கடந்த தமிழீழ அரசின் கருத்தரங்கு, பெசன்ட் நகர் கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வு இந்த இரு நிகழ்ச்சிகளிலும் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

கருத்தரங்கு நடத்துவதற்கு ஒரு மாதம் முன்பே தமிழக முதல்வருக்கு முறைப்படி தகவல் தெரிவித்து அவரை பங்கேற்கச் சொல்லியும் அழைத்ததாக கூறுகிறார் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன். அப்போது முதல்வர் அலுவலகம் முதல்வருக்கு தேதி இல்லை என்று தான் சொன்னதே தவிர இந்த கூட்டம் சட்டவிரோதம் என்று சொல்லவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதேபோல மே 17 இயக்கம் நடத்திய நினைவேந்தல் நிகழ்விலும் பெசன்ட் நகர் கடற்கரை என்ற இடத்தை சென்னை மாநகர போலீசார் தான் பரிந்துரைத்தனர் என்றும் அதன் பிறகு திடீரென முதல்நாள் அனுமதி மறுக்கப்பட்டது என்றும் இந்த இயக்கம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

ஆக இந்த இரு நிகழ்வுகளும் நடப்பதற்கு தமிழக அரசு முதலில் ஒப்புக்கொண்டு அதன் பிறகு கடைசி நேரத்தில் வேறு அழுத்தங்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டதும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதும் தெளிவாகின்றன.

இரண்டு பார்வை

இதை ஒட்டி இரு பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன.

ராஜீவ்காந்தி தமிழ்நாட்டு மண்ணில் கொல்லப்படுவதற்கு முன்பு புலிகளைப் பற்றி தமிழகத்தில் இருந்த பார்வை வேறு, அதற்குப் பிறகு புலிகள் மீதான தமிழக மக்களின் பார்வை வேறு.

இந்த அடிப்படையில் புலிகள் தொடர்பான, இலங்கை தொடர்பான நிகழ்வுகளை பார்க்கவேண்டியுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டபோது அவரை முதல்வர் ஸ்டாலின் கட்டிப்பிடித்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும் திமுக தயாராக இல்லை. அதேநேரம் புலிகள் பற்றிய பொதுமக்களுடைய பார்வைக்கும் மதிப்பு கொடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது. அதனால் எடுத்த எடுப்பிலேயே எதிர்க்காமல் கடைசி நேரத்தில் ரத்து செய்யும் உத்தியை திமுக அரசு கையாண்டு இருக்கலாம் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

தமிழின தலைவராக முயற்சிக்கும் ஸ்டாலின்

இன்னொரு பக்கம் முதல்வருக்கு நெருக்கமானவர்கள் முதல்வரின் குடும்பத்தினரிடையே வேறுவிதமான பார்வை இருக்கிறது.

"கலைஞர் உலகத் தமிழர்களின் தலைவராக அவரது காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டார். தமிழ்நாட்டில் ஈழ விடுதலை ஆதரவு என்ற கருத்துக்காகவே டெசோ என்ற அமைப்பை உருவாக்கினார். பல்வேறு அகில இந்திய தலைவர்களையும் தமிழகத்துக்கு வரவழைத்து டெசோ அமைப்பில் உரையாற்ற வைத்து இலங்கை பிரச்சனையை வட இந்தியர்களின் புரிதலுக்கு உள்ளாக்கினார்.

தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் உலகத் தமிழர்களின் தலைவர் என்ற அந்தஸ்துக்கு உயர வேண்டும் என்ற விருப்பம் அவரை சுற்றி உள்ளவர்களிடம் இருக்கிறது. அதற்கான செயல் திட்டங்கள் தொடர்ந்து வகுக்கப்பட்டு வருகின்றன. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழர் அல்லாதவர்களுக்கும் சேர்த்து

உணவுப் பொருட்களையும் நிதியையும் வழங்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் எம்பிக்களும் அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே தமிழக முதல்வர் ஸ்டாலின் பெயரை உச்சரித்து நன்றி கூறி யிருக்கிறார்கள்.

இந்த நிலையில் உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு பெயரை நிலை நிறுத்திட விரும்புகிறார் ஸ்டாலின். அதற்காகத்தான் நாடு கடந்த தமிழீழ அரசின் கருத்தரங்கு இங்கே நடத்த முதலில் அனுமதிக்கப்பட்டு

முதல்வர் அலுவலகத்தோடு அவர்கள் தொடர்பிலும் இருந்துள்ளார்கள். இதேபோல சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கும் முதலில் சென்னை போலீஸ் அனுமதி அளித்துள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளும் திட்டமிட்டபடி நன்கு நடந்திருந்தால் உலகத் தமிழர்கள் மத்தியில் ஸ்டாலின் பெயர் அழுத்தமாகப் பதிந்திருக்கும். ஆனால் அதற்குத் தடையாக தமிழக அரசை தாண்டி அதிகார சக்திகள் இருக்கின்றனவோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது" என்கிறார்கள் முதல்வர் ஸ்டாலினை சுற்றியுள்ளவர்கள்.

வேந்தன்.

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

வியாழன் 26 மே 2022