மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 மே 2022

ஓபிஎஸ் பேசினாரா?: சசிகலா பதில்!

ஓபிஎஸ் பேசினாரா?: சசிகலா பதில்!

அதிமுக எதிர்க்கட்சியாகச் செயல்படவில்லை என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிமுக நிர்வாகி குணசேகரன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் சசிகலா.

அப்போது, அதிமுகவில் தற்போது இருப்பவர்களை ஜெயலலிதாவுடன் ஒப்பிட முடியாது என்று தெரிவித்த அவர், ஒரு கட்சிக்கு, இயக்கத்துக்குத் தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிற தலைவர்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும். அந்த மாதிரியான நிலை அதிமுகவில் இல்லை.

எனது சுற்றுப் பயணத்தின் போது தொண்டர்களை மட்டுமின்றி, பொதுமக்களையும் சந்திக்கிறேன். ஓராண்டு ஆட்சிக் காலத்தில் திமுக எதுவும் செய்யவில்லை என்று மக்கள் கூறுகின்றனர். விரைவில் அம்மாவின் ஆட்சியை அமைப்பேன் என்று கூறியிருந்தேன். அதற்கு முதல் படியே மக்களின் இந்த கருத்துதான். அதிமுகவை இணைப்பது தொண்டர்கள் கையில் தான் இருக்கிறது. தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதுதான் வெற்றி பெறும்” என்றார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான கேள்விக்கு, “என்ன செய்தாலும் அவர்களால் ஒரு கருத்துக்கு வர முடியாது. ஏனென்றால் தொண்டர்கள் அவர்களிடம் இல்லை. எனக்கு எதிராக அதிமுகவில் எல்லோரும் பேசவில்லை. ஒருசிலர் தான் பேசுகின்றனர். எதாவது ஒரு பதவி கிடைக்கும் என்பதால் இப்படிப் பேசலாம் இல்லையா?

எம்ஜிஆர் இந்த கட்சியைத் தொடங்கும் போது தொண்டர்கள் தான் தலைவரை முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்படி தொண்டர்கள் தான் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். எதிலுமே அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. அதனால் நான் தலைமைக்கு வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்” எனக் கூறினார்.

தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்துப் பேசிய அவர், “நிறைய இடங்களில் கொலை குற்றங்கள் அதிகரித்திருக்கிறது. நிர்வாகயின்மைதான் இதற்குக் காரணம். தற்போது காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கிறதா எனச் சந்தேகமாக இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவரிடம், அதிமுகவை மீட்டெடுக்க நீங்கள் சட்ட ரீதியாக மேற்கொண்ட முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த சசிகலா, பின்னடைவு என்று எப்படிச் சொல்கிறீர்கள், இது சுப்ரீம் கோர்ட் முடிவா என்ன?. அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன். பொறுத்திருந்து பாருங்கள். என்னுடைய தலைமையில் அதிமுக ஒன்றிணைந்து செயல்படும் என 100 சதவிகிதம் நம்பிக்கை இருக்கிறது.” என கூறினார்.

“சாதாரண ஒரு தொண்டரைக் கூட அம்மா ராஜ்ய சபாவுக்கு அனுப்பியிருக்கிறார். கேள்விப் படாத ஆட்கள் கூட எம்.பி.யாக வந்திருக்கிறார்கள். அதுமாதிரி இப்போது நடைபெற வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. அதிமுகவை ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சியாக தான் அம்மாவும், எம்ஜிஆரும் வழி நடத்தினர். ஜாதி ரீதியாகச் செயல்பட்டால் அந்த இடத்தில் ஒரு நியாயத்தைப் பார்க்க முடியாது” என்று குறிப்பிட்டார்.

அப்போது தனிப்பட்ட முறையில் உங்கள் மீது மரியாதை இருக்கிறது என்று ஓபிஎஸ் கூறினார். அதன் பிறகு உங்களை தொடர்பு கொண்டு பேசினாரா என்ற கேள்விக்கு, “இத்தனை பேருக்கு மத்தியில் இதற்கு நான் எப்படி பதில் சொல்வேன் என்று கூறிய சசிகலா, எங்கள் கட்சியை பற்றியே என்னிடம் கேட்கிறீர்கள், அது உள் கட்சி பிரச்சினை. அரசாங்கம் என்ன செய்கிறது, எதேனும் தவறு நடக்கிறதா என நீங்கள் கேட்பதில்லை. எவ்வளவோ தவறு நடக்கிறது. அதை பற்றியெல்லாம் ஏன் பேசுவதில்லை. ஊடகங்களின் வாய்கள் அடைக்கப்பட்டிருக்கிறதா என்றும் எனக்குத் தெரியவில்லை. அதிகாரத்தை வைத்து ஊடகங்கள் வாயை வேண்டுமானால் அடைக்கலாம். ஆனால் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் ஓட்டுப் போட போகிறார்கள்” என கூறினார்.

பிரதமர் தமிழகம் வருகை குறித்துப் பேசிய அவர், “தேர்தல் சமயத்தில் எதிர்க்கட்சியாக இருந்து பேசலாம். சண்டை போடலாம், அதெல்லாம் தேர்தலின் போது 3 மாதம் வரை நடக்கலாம். ஆனால் வருடம் முழுவதும் சண்டை போட்டால் எப்படி? நம்பி ஓட்டுப் போட்ட மக்களுக்காக மத்திய அரசை அணுகிக் கேட்க வேண்டியதைக் கேட்க வேண்டும். மத்திய அரசுடன் சண்டை போட்டுக்கொண்டே இருந்தால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். ஆக்கப்பூர்வமாக அரசு செயல்பட வேண்டும்” என்றார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பாகப் பேசிய சசிகலா, பேரறிவாளனுக்கும், நடந்த நிகழ்வுக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார்கள். அவர் வெளியே வந்தது எனக்குத் தப்பாக படவில்லை” என பதிலளித்தார்.

-பிரியா

பன்னீர்,சசிகலா, பாஜகவுக்கு எடப்பாடியின் ’பொதுக்குழு’ மெசேஜ்! ...

5 நிமிட வாசிப்பு

பன்னீர்,சசிகலா, பாஜகவுக்கு  எடப்பாடியின் ’பொதுக்குழு’ மெசேஜ்!

அதிமுகவில் பதவி மோதல்: நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசிகலா ...

5 நிமிட வாசிப்பு

அதிமுகவில் பதவி மோதல்: நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசிகலா

பன்னீர் டெல்லி சென்றது ஏன்?

3 நிமிட வாசிப்பு

பன்னீர் டெல்லி சென்றது ஏன்?

புதன் 25 மே 2022