மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 மே 2022

சிறப்புக் கட்டுரை: பேரறிவாளன் விடுதலை: தர்மம் மறுபடி வெல்லும்!

சிறப்புக் கட்டுரை: பேரறிவாளன் விடுதலை: தர்மம் மறுபடி வெல்லும்!

ராஜன் குறை

பாரதியின் வரிகளாகிய “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்” என்பவை மிக அதிகமாக எதற்கெடுத்தாலும் பயன்படுத்தப்பட்டு பழகிப்போனவை. ஆனாலும் அந்த வரிகளுக்கு உண்மையான பொருள் தரும் தருணங்கள் உண்டு. கடந்த முப்பதாண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன் விடுதலையான தருணம் அதில் ஒன்று.

தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் இந்த விடுதலையை வரவேற்று மகிழ்பவர்களாக இருக்கிறார்கள் எனலாம். முதல்வர் ஸ்டாலின் ஒரு மூத்த சகோதரனின் வாஞ்சையுடன் பேரறிவாளனை அணைத்து வரவேற்ற காட்சி சமூக ஊடகங்களில் பரவலானது; பலரையும் நெகிழச் செய்தது. அதற்கு முக்கிய காரணம், பேரறிவாளனுக்கு முதலில் வழங்கப்பட்ட மரண தண்டனை அநீதியானது என்ற எண்ணமே. குறிப்பாக அவர் வாக்குமூலத்தைப் பதிவு செய்த அதிகாரியே அதை வேண்டுமென்றே தவறாகப் பதிவு செய்துவிட்டேன் என்று வருத்தம் தெரிவித்த பிறகும், அந்தப் பிழையான வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு முதலில் மரண தண்டனையிலிருந்து கருணை மனுவின் அடிப்படையில் விடுவிப்பு கிடைக்கவில்லை. பின்னர் 2014ஆம் ஆண்டு மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பிறகு ஏற்கனவே இருபத்து மூன்றாண்டு ஆண்டுகள் தண்டனை அனுபவித்திருந்தாலும் சிறை வாசத்திலிருந்து விடுதலை கிடைக்கவில்லை. அரசின் இத்தகைய கடும்போக்கு வழக்கின் விவரங்களை அறிந்த அனைவருக்கும் பெரிதும் மன வருத்தம் தருவதாக இருந்தது.

அதனால் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் இடையறாது நடத்திய சட்டப் போராட்டமும், பொதுமன்ற கவன ஈர்ப்பும், பல்வேறு மனித உரிமை அமைப்புகள், முற்போக்கு அமைப்புகளின் போராட்டங்களும், செங்கொடி போன்ற இளம் தமிழ் உணர்வாளரின் உயிர்த்தியாகமும் மக்களிடையே பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. திமுக, அஇஅதிமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளும் சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் ஏழு பேரும் முப்பதாண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து விட்டதால் விடுவிக்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்திலே தீர்மானம் இயற்றியும், அவர்களை விடுதலை செய்வோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தும் செயல்பட்டு வந்தன. அந்தக் கட்சிகள் வாக்குறுதியை நிறைவேற்ற மக்களுக்குக் கடமைப்பட்டவை.

ஆனால், இதற்கு மறுபுறம் ஒரு சிலர் இந்த விடுதலையை விமர்சிப்பவர்களாக இருக்கின்றனர். இந்த விமர்சனம் பல்வேறு கோணங்களில் எழுப்பப்படுகிறது. இவையெல்லாம் அறியாமையால் விளைகின்றனவா அல்லது அரசியல் காழ்ப்பால் விளைகின்றனவா, அல்லது மனங்கள் பண்படாததால் விளைகின்றனவா என்று புரியவில்லை. ஒன்று ராஜீவ் காந்தி கொலையால் பாதிக்கப்பட்டவர்கள், அவருடன் சேர்ந்து இறந்துபோனவர்கள் குடும்பத்தினர் ஆகியவர்களுக்கு இந்த விடுதலை நியாயம் செய்கிறதா என்ற வாதம். மற்றொன்று ராஜீவ் காந்தியுடன் சேர்ந்து 14 பேர் கொடூரமாக மரணமடைந்திருக்கையில் அந்தச் செயலுக்கு காரணமாயிருந்தவர்கள் விடுதலையாவதை கொண்டாடலாமா என்ற கேள்வி. இந்தக் கேள்விகளுக்கு பின்னால் உள்ள அரசியல் சார்பு மன ஓட்டங்களைத் தவிர்த்துவிட்டாலும் பல இளைஞர்களுக்கும் இந்தக் கேள்விகள் குழப்பத்தை விளைவிக்கலாம். அதனால் இந்தக் கட்டுரையில் ஏன் என்னைப் போன்றவர்கள் பேரறிவாளன் விடுதலையை, இன்னுமுள்ள அறுவரின் விடுதலையையும் கூட ”தர்மம் மறுபடி வெல்லும்” என்ற கூற்றின் ஆதாரமாகக் காண்கிறோம் என்பதை விளக்க வேண்டியுள்ளது. இருபத்து மூன்றாண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை எழுதிய நீதிபதியான கே.டி.தாமஸ் அவர்களே இந்த விடுதலையை வரவேற்றுள்ளதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

குற்றத்தைச் செய்தவர்கள் யார்?

அரசு விரிவான புலனாய்வுக்குப் பிறகு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கான சதி திட்டத்துக்கு மூல காரணமாக இருந்தவர்கள் என விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன், அகிலா ஆகியோரை குற்றம் சாட்டியிருந்தனர். இலங்கையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர்களைக் கைப்பற்றி விசாரணைக்குக் கூட்டி வரவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஆனால், இலங்கை உள்நாட்டுப் போரில் அவர்கள் பின்னாளில் இறந்துவிட்டனர்.

இந்தியாவில் ராஜீவ் காந்தியையும், அந்த இடத்தில் அவரை சுற்றியிருந்த பதினான்கு பேரையும் சேர்த்து கொன்றது தனு என்ற தற்கொலை போராளி அல்லது மனித வெடிகுண்டு. அவர் தன் உடலில் கட்டியிருந்த குண்டினை இயக்கி தன்னையே வெடித்து சிதறச் செய்து அருகிலிருந்த ராஜீவ் காந்தியையும், பிறரையும் கொன்று விட்டார். அவருடைய நோக்கமும், இந்தக் கொலையை திட்டமிட்ட அனைவரின் நோக்கமும் ராஜீவ் காந்தியைக் கொல்வதுதான்.

சுற்றியிருந்தவர்கள் தற்செயலாக சேர்ந்து இறந்து போனார்கள். இந்த நிகழ்வை படமெடுக்க குற்றவாளிகளே கூட்டிப்போன புகைப்படக் கலைஞர் ஹரிபாபுவும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தது குண்டு வெடிப்பு எத்தகையை விளைவை ஏற்படுத்தும் என்பதை அவர்களே சரியாக கணக்கிடவில்லையோ என்று தோன்ற வைக்கிறது. ஆனால், அவர் கையிலிருந்த கேமரா எந்த பாதிப்புமின்றி இருந்ததால் அவர் எடுத்திருந்த புகைப்படங்கள் மூலமாகவே குற்றவாளிகளை அடையாளம் காண முடிந்தது.

முக்கியக் குற்றவாளியான தற்கொலை கொலையாளி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். ஹரிபாபுவும் இறந்துவிட்டார். இந்தச் செயலை செய்ய முழு முயற்சியையும் மேற்கொண்ட, திட்டமிட்டு செயலாற்றிய குழுவின் தலைவர் சிவராசன் என்பவரும் இன்னொரு பத்து பேரும் தேடுதல் வேட்டையில் பிடிபடும் தருணங்களில் சயனைட் அருந்தியும், ஒருவர் தூக்கிட்டும் தற்கொலை செய்துகொண்டனர்.

கொலைச்செயலை செய்தவர், சதியில் ஈடுபட்டவர்கள் 10 பேர் இறந்துவிட்டனர். நன்றாக கவனியுங்கள். குற்றச்செயலை திட்டமிட்டு நிகழ்த்தியவர்கள் இறந்துவிட்டனர். சதியின் மூலாதாரமாகக் கூறப்பட்ட மூவர் இலங்கையில் கைப்பற்ற முடியாதபடி இருந்தனர். அப்படியானால் மீதமிருந்தவர்கள் யார்? மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் யார்? முப்பதாண்டுகளாக சிறையில் இருப்பவர்கள் யார்? இந்த மீதமிருந்த 26 பேரும் குற்றத்துடன் நேரடி தொடர்பு உள்ளவர்களா? அல்லது குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களா? இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம்தான் என்ன?

தடா நீதிமன்றம் வழங்கிய கூண்டோடு மரண தண்டனை தீர்ப்பு!

இலங்கையிலிருந்த விடுதலை புலிகள் இயக்க தலைவர்கள் மூவர், தற்கொலைக் கொலையாளி இருவர், செயலை திட்டமிட்டு நிகழ்த்திய 10 பேர் ஆகிய 15 பேரை தவிர, இன்னொரு 26 பேரை சதியுடன் தொடர்புடையவர்களாக அரசு வழக்கு தொடுத்தது. இந்த 26 பேரும் பல்வேறு தருணங்களில் சிவராசன் குழுவினருடன் தொடர்பில் இருந்தவர்கள். சிலர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்; சிலர் இந்திய நாட்டவர். பெரும்பாலோர் ஈழ விடுதலை அனுதாபிகள், விடுதலை புலிகள் அனுதாபிகள். அவர்கள் அரசியல் பார்வை காரணமாக தொடர்பில் இருந்தவர்கள். சிலர் வேறு வகைகளில் தொடர்புடையவர்கள். இந்த 26 பேர் மீதான வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் அனைவரும் சதிச்செயலில் பங்கேற்றவர்கள் என்று கூறி கூண்டோடு அனைவருக்கும் மரண தண்டனை விதித்து நாட்டை அதிர்ச்சியுற செய்தது.

மரண தண்டனை என்பதே அதர்மமானது என வாதிடுபவர் பலர். மரண தண்டனையை சட்டத்திலிருந்து நீக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் எனப் பல மனித உரிமை அமைப்புகள் வெகுகாலமாக போராடுகின்றன. நானும் நாற்பதாண்டுக் காலமாக சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் மரண தண்டனை ஒழிப்புக்காக குரல் கொடுத்து வந்திருப்பவன். மரண தண்டனை என்பது பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்னும் முதிரா சிந்தனை முறையை அடிப்படையாகக் கொண்டது. மன்னராட்சி காலத்தில் இது ஏற்புடையதாக இருந்தது. உதாரணமாக தமிழ் இலக்கியத்திலேயே மனு நீதிச் சோழன் பற்றிய குறிப்பு வருகிறது. அவனுடைய மகன் தேரோட்டும்போது பசுவின் கன்று அதில் அடிபட்டு இறந்து விடுகிறது. பசு அரசனின் மாளிகை வாயிலுள்ள ஆராய்ச்சி மணியை அடிக்கிறது. அதன் காரணத்தை அறிந்த அரசன் தன்னுடைய மகனையே தேரேற்றி கொன்று விடுகிறான். நடுநிலை தவறாத நீதிபரிபாலனத்துக்கு உதாரணமாகக் கூறப்பட்டாலும், இது பழிக்குப் பழி என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளது. இந்த நிகழ்வை பாண்டியன் அவையில் குறிப்பிடும் சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி, தன் கணவனுக்கு தவறாக கொலைத்தண்டனை அளித்த பாண்டிய மன்னனிடம் நீதி கேட்கிறாள். தவற்றை உணர்ந்த பாண்டிய மன்னன் குற்றவுணர்வில் உயிர் துறக்கிறான். அப்போதும் சினம் அடங்காத கண்ணகி மதுரை நகரையே எரிக்கிறாள். இதுவும் நீதி கேட்டு போராடிய பெண்ணின் தார்மீகக் கோபம் என்று கூறப்பட்டாலும் ஒரு தவற்றுக்கு, ஒரு பிழைக்கு மாற்றாக மீண்டும் வன்செயல் செய்யும், பிழை செய்யும் முதிரா தன்மையையே சுட்டி நிற்கிறது. பண்டைய காலத்து தர்மம் குறித்த சிந்தனை இப்படித்தான் இருந்தது.

ஆனால் நவீன காலத்தில் மரண தண்டனை என்பது தவறானது என்ற கருத்து வலுவடைந்துள்ளது. ஒரு மனித உயிர் இன்னொரு மனித உயிரை பறிக்கக் கூடாது என்பதுதான் தர்மம். அரசே அந்த தர்மத்தை மீறி தண்டனை என்ற பெயரில் ஓர் உயிரை பறிக்கக் கூடாது என்பது மானுடவாத சிந்தனை. உலகில் 108 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது (கீழேயுள்ள படத்தில் அடர்பச்சையில் குறிக்கப்பட்டுள்ளவை). ஏழு நாடுகள் போர்க்குற்றங்கள் போன்றவற்றுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கின்றன (பச்சை நிறம்). இன்னம் 26 நாடுகள் நடைமுறையில் மரண தண்டனை விதிப்பதை பத்தாண்டுகளுக்கு மேலாக தவிர்த்து வருகின்றன (பிரெளன்). மீதமுள்ள 54 நாடுகளில்தான் மரண தண்டனை வழங்கப்பட்டுகிறது (சிவப்பு).

இந்த நிலையில் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் எல்லோருமே சதிச்செயலில் ஈடுபட்டவர்கள் என்று கூறி 26 பேருக்கு தடா நீதிமன்றம் கூண்டோடு மரண தண்டனை விதித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தடா சிறப்பு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

உச்ச நீதிமன்றம் முதலில் ராஜீவ் காந்தி கொலையானது Terrorist and Disruptive Activities (Prevention) Act (1985) என்பதில் குறிக்கப்படும் பயங்கரவாத செயலோ, இந்திய அரசை நிலைகுலைய வைக்கும் செயலோ அல்ல என்று விரிவாக விளக்கியது. இது ராஜீவ் காந்தி என்ற அரசியல் தலைவரை கொல்வதற்கான சதி திட்டம் மட்டுமே என்றும், அதற்கு அவர் பிரதமராக இருந்தபோது இலங்கை உள்நாட்டுப் போரில் தலையிட்டு இந்திய ராணுவத்தை அமைதி காக்க அனுப்பியதும், அந்த ராணுவம் இலங்கை தமிழர்களுக்கு விளைவித்ததாகக் கூறப்பட்ட இன்னல்களும் காரணம் என்று கூறிவிட்டது. அதன்பின் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் சதிச்செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை பரிசீலித்தது. ஏழு பேர் மட்டுமே சதிச்செயலில் தொடர்புடையவர்கள் என்று கூறி, மற்ற 19 பேர் வேறு குற்றங்களைச் செய்திருந்தபோதும் அவர்கள் ஏற்கனவே எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டதால் அவர்களை 1999ஆம் விடுதலை செய்துவிட்டது. சதிச்செயலில் தொடர்புடையவர்கள் என்று கருதிய ஏழு பேரிலும், ஏ-9 ராபர்ட் பயஸ், ஏ-10-ஜெயகுமார், ஏ-16 ரவிச்சந்திரன் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கியது. ஆனால், ஏ-1 நளினி, ஏ-2 சாந்தன், ஏ-3 முருகன், ஏ-18 பேரறிவாளன் ஆகிய நால்வரும் தெரிந்தே சதிச்செயலில் ஈடுபட்டார்கள் என்று கூறி மரண தண்டனையை உறுதி செய்தது.

குற்றவாளிகளுக்கு உதவினார்களா அல்லது தெரிந்தே குற்றத்திற்கு உதவினார்களா, சதிச்செயலில் ஈடுபட்டார்களா என்பதை எப்படி ஐயத்துக்கு அப்பால் பிரித்தறிய முடியும் என்பது கேள்விக்குரியது. கே.டி.தாமஸ், வாத்வா, சையத் ஷா முகம்மது காத்ரி ஆகிய நீதிபதிகள் மூவரும் எவ்வாறு இதை விளக்கியுள்ளார்கள் என்பதெல்லாம் இணையத்தில் காணக் கிடைக்கிறது. ஆனால், மரண தண்டனை ஒழிப்பில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அந்த விளக்கங்கள் ஏற்புடையதாக இருக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக குற்றவாளிகளுடன் பழகியது, அவர்களுக்கு உதவியது ஆகியவற்றை வைத்து குற்றச்செயல் குறித்து இவர்கள் முழுமையாக அறிந்திருந்தனர் என்றோ, சதியில் ஈடுபட்டனர் என்றோ முடிவுக்கு வருவதும், அதன் அடிப்படையில் மரண தண்டனை என்ற உச்சபட்ச தண்டனை அளிப்பதும் நியாயமல்ல என்பதே தமிழ்நாட்டில் என் போன்ற பலருடைய உணர்வாக, கொந்தளிப்பாக இருந்தது.

இந்திய நீதிமன்றங்களே அபூர்வத்திலும் அபூர்வமான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற நியதியை பின்பற்றி வருகின்றன. ராஜீவ் காந்தி போன்ற ஒரு முக்கியமான தலைவரை, முன்னாள் பிரதமரைக் கொல்வது அபூர்வத்திலும் அபூர்வம் என்று நீதிபதிகள் கணித்ததில் தர்க்கம் இருக்கலாம். ஆனால், அவர்கள் மரண தண்டனை விதித்த நான்கு பேருக்கும் குற்றத்திற்குமான தொடர்பு என்ன என்பதில்தான் வலுவான விளக்கமில்லை. உதாரணமாக கே.டி.தாமஸ் நளினிக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கிறார். மற்ற இருவரும் அதில் மாறுபடுகிறார்கள். பின்னர் நளினிக்கு முதலில் கருணை மனுவின் அடிப்படையில் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகிறது. மற்ற மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர்கள் கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் ஆகியோர் இருவரும் நிராகரிக்காமல் வைத்துவிட்டார்கள். அதே சமயம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் அவர்கள் கருணை மனுக்களை ஏற்கவும் முடியாது. இறுதியில் பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவர் ஆன பின் கருணை மனுக்களை நிராகரிக்கிறார். ஆனால் அதற்குள் கணிசமான காலம் கடந்துவிட்டதால் இத்தனை காலம் மரண தண்டனையின் இருள் கவிந்த நிலையில் வாழ்ந்துவிட்டவர்களுக்கு அதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரப்படுகிறது. உச்ச நீதிமன்றமும் சட்டத்தின்படி அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஆயுள் தண்டனையாக மாற்றிவிடுகிறது. இது பொதுவாக மரண தண்டனைக்கு எதிராகவும், பேரறிவாளன் உள்ளிட்ட நால்வருக்கு போதிய அடிப்படை இல்லாமல் வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராகவும் போராடியவர்களுக்கு பெரும் ஆறுதலை தந்தது.

ஆயுள் தண்டனை காலம் எவ்வளவு?

அடுத்த ஆயுள் தண்டனை என்பதற்கு ஆயுட்காலம் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்பதுதான் பொருள் என்றாலும், பெரும்பாலும் நன்னடத்தையின் பேரில் அவர்கள் பதினான்கு ஆண்டுகள் கழித்து விடுவிக்கப்படுவார்கள். உதாரணமாக மகாத்மா காந்தி படுகொலையில் சதி செய்ததாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே, விஷ்ணு கர்காரே, மதன்லால் பஹ்வா உள்ளிட்டோர் பதினான்கு ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு புனே நகரில் பால கங்காதர திலகரின் பேரன் கேட்கரால் வரவேற்பு அளிக்கப்பட்டது. காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்று பாராட்டப்பட்டார். தொடர்ந்து பல்வேறு தருணங்களில் இந்துத்துவ இயக்கங்களை, கட்சியைச் சேர்ந்தவர்களால் கோட்சே தேசபக்தர் என்று பாராட்டப்படுகிறார்.

தேச தந்தை மகாத்மா காந்தியை சதி செய்து கொன்றவர்கள் ஆயுள் தண்டனை காலம் பதினான்கு ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என்றால், அவர்கள் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு வரவேற்பும் அளிக்கப்படும் என்றால், காந்தியைக் கொன்றவர் தேசபக்தர் என்று மீண்டும் மீண்டும் இந்துத்துவ சக்திகளால் கூறப்படுவார் என்றால், ராஜீவ் காந்தியை கொன்றவர்களுடன் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பழகிய காரணத்திற்காக ஏழு பேர் முப்பதாண்டுகள் சிறையில் இருந்தாலும் போதாது, வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று கோருவது வெறும் பழிவாங்கும் உணர்ச்சி என்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும் என்பதே கேள்வி.

அவர்கள் விடுதலை மகிழ்ச்சியை தரக் காரணம், பல்வேறு கட்சியினரால் கொண்டாடப்படுவதற்கு காரணம் அவர்கள் போதுமான அடிப்படைகள் இன்றி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டார்கள், பதினைந்து ஆண்டுகள் தூக்கு தண்டனை இருள்வெளியில் வாழ்ந்தார்கள், முப்பதாண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்கள் என்பதுதான். தமிழ்நாட்டு மக்களோ, அரசியல் தலைவர்களோ ராஜீவ் காந்தி கொலையை வன்மையாகக் கண்டிக்கவே செய்கிறார்கள். அந்த குற்றச்செயலால் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் பேரறிவாளனையும், மற்ற ஆறு பேரையும் பார்க்கிறார்கள். தமிழக மக்கள் பெருவாரியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள்தான் மாநில அரசுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி எழுவரையும் விடுவிக்க மீண்டும், மீண்டும் தீர்மானித்துள்ளன. அது சட்டத்துக்கும், தர்மத்துக்கும் ஏற்புடையதேயாகும். மாற்றுக் கருத்தாளர்கள் மனம் திறந்து சிந்திக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பது போல மன்னிப்பதன் தர்மத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்; கண்ணுக்குக் கண் என்றால் மொத்த உலகமும் குருடாகிவிடும் என்றார் மகாத்மா காந்தி. அதுவே நமது தர்மமாக இருக்க வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 23 மே 2022