மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 மே 2022

முள்ளிவாய்க்கால்: பெசன்ட் நகர் கடற்கரை நினைவேந்தலுக்கு திமுக அரசு தடை!

முள்ளிவாய்க்கால்: பெசன்ட் நகர் கடற்கரை நினைவேந்தலுக்கு திமுக அரசு தடை!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று மே 22 மாலை நடைபெற இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தமிழர் கடல் நிகழ்ச்சிக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போரில் 2009ஆம் ஆண்டு தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூறும் வகையிலும் இலங்கை அரசு மீது ஐ.நா.வில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி தீபம் ஏந்தி இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை நடந்து வந்தது. அப்போதே பல கெடுபிடிகளும் விதிக்கப்பட்டன.

மெரினா கடற்கரையில் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் பிறகு மெரினா கடற்கரையில் இந்த நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு போலீசாரிடம் மே பதினேழு இயக்கம் சார்பில் அணுகிய நிலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்த முதலில் காவல்துறையினர் வாய்மொழியாக அனுமதி வழங்கியுள்ளனர்.

அதன் படி மே 22ஆம் தேதி மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் கடற்கரையில் தமிழர் கடல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளையும் மே17 உள்ளிட்ட அமைப்புகள் செய்துவந்த நிலையில் நேற்று இரவு திடீரென பெசன்ட் நகர் கடற்கரையில் நினைவேந்தல் நடத்தக்கூடாது என சென்னை காவல்துறை செயல்முறை ஆணை பிறப்பித்துள்ளது.

அந்த ஆணையில், " மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மே 18 ஆம் தேதி கொடுத்த மனுவில் இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில்

நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார்.

மனுதாரரின் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எலியட்ஸ் கடற்கரையில் இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு சென்னை மாநகராட்சி ஒப்புதல் தராததாலும்... இந்த நிகழ்ச்சி நடத்த உத்தேசித்துள்ள தினத்தில் கடற்கரையில் பொதுமக்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால்... பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்கள் நலன், பொது அமைதி, சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய காரணங்களால் சென்னை எலியட்ஸ் கடற்கரையில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வந்த விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசனிடம் பேசினோம்.

"நீர் நிலைகளின் ஓரம் நின்று தங்கள் முன்னோர்களை நினைத்து அழுவதும் தொழுவதும் தமிழர்களின் பண்பாடு. தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்த கூட தமிழர்களுக்கு திமுக அரசு அனுமதிக்க மறுக்கிறது. இதையே முந்தைய எடப்பாடி அரசு நேரடியாக செய்தது. ஆனால் இப்போதைய திமுக அரசு சென்னை மாநகராட்சியின் மீது பழியை போட்டு தடை விதிக்கிறது. சென்னை மாநகர மேயர் முதல்வரின் வார்த்தைகளுக்கு கட்டுப்படாதவரா?

கொல்லப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு இரங்கல் தெரிவிப்பது பொது மக்களுக்கு எவ்வாறு இடையூறாகும்? இதுதான் திராவிட மாடல் அரசா? எங்களுக்கு கிடைத்த தகவல் படி ஒன்றிய உளவுத்துறையின் அழுத்தத்தின் பேரிலேயே எங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டது"என்கிறார் குடந்தை அரசன்.

இதுகுறித்து மே பதினேழு இயக்கம் வெளியிட்டுள்ள செய்தியில்,

"அமைதியான முறையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி ஆண்டுதோறும் நடத்தி வந்த நினைவேந்தல் நிகழ்வு 2017ல் தடுக்கப்பட்டது. தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு 17 தோழர்கள் சிறைப்பட்டனர். நான்கு தோழர்கள் குண்டர்சட்டத்தில் அடைக்கப்பட்டனர். தொடர்ச்சியாக 2018, 2019-லும் தடையை மீறி நினைவேந்த சென்ற காரணத்தினால் வழக்குகள் பதியப்பட்டன.

இந்நிலையில் கடந்த மே 2-ம் தேதி காவல்துறை உயர் அதிகாரிகளிடத்தில் நினைவேந்தல் நடத்த மெரினா, பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் நடத்த அனுமதி கோரினோம். நீண்ட ஆலோசனைக்கு பின் கடந்த வாரம் காவல்துறையே நினைவேந்தல் நடத்த பெசன்ட் நகர் கடற்கரையை தேர்ந்தெடுத்து ஒதுக்கிக் கொடுத்தது.

அனைத்துக் கட்சி தலைவர்கள், ஆளுமைகள் பங்கேற்பதாக அறிவித்த பின்னர், நேற்று மே 21 2022 பின்னிரவில் அனுமதி கொடுப்பது இயலாது என காவல்துறை அறிவித்தது. இதற்கான அனுமதி மறுப்பு கடிதத்தை பின்பு அளித்தனர்.

இறந்தவர்களுக்கு நினைவேந்துவது அடிப்படை உரிமை. இதை எந்த சட்டத்தின் மூலமாகவும் தடுக்க இயலாது. இந்நிலையில் இப்பண்பாட்டு நிகழ்வை நடப்பதற்கு அனுமதி மறுப்பது சனநாயக விரோதம் மட்டுமல்ல, தமிழின விரோத அடக்குமுறையாகும்.

மெரினா கடற்கரையில் மட்டுமல்லாமல் அனைத்து நீர் நிலைகளில் தமிழர்கள் இறந்தோருக்கு நினைவேந்துவது இன்றளவும் நடக்கும் நிலையில் எவ்வித அடிப்படையுமின்றி இந்நிகழ்வினை தடுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

திமுக அரசு இதற்கு முந்தைய அதிமுக அரசின் நிலையையே தொடர்வது ஜனநாயக விரோதமாகும். ஒன்றிய அரசின் உள்துறை, ஒன்றிய உளவுத்துறையின் அழுத்தத்தின் காரணமாகவும் நிகழ்வு தடை செய்யப்பட்டதாகவும் எமக்கு சொல்லப்பட்டது. எக்காரணமாயினும், தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்விற்கான உரிமையை தமிழக திமுக அரசு உறுதி செய்யாதது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழீழ இனப்படுகொலை மற்றும் அதற்கான நினைவேந்தல் நடத்துவது தொடர்பாக திமுக அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

அடக்குமுறையை மீறி தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும். எந்நிலையிலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என உறுதிபட தெரிவிக்கிறோம். அடக்குமுறையை சனநாயக ரீதியில் எதிர்கொண்டு அம்பலப்படுத்த அனைத்து ஜனநாயக ஆற்றல்களையும் அழைக்கிறோம். பெசன்ட் நகர் பேருந்து நிலையம் முன்பு மாலை 4 மணிக்கு அனைவரும் ஒன்றுகூடி, கடற்கரையை நோக்கி நினைவேந்த செல்வோம்!" என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே திமுக கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த மே 20 ஆம் தேதி, சென்னை பெசன்ட் நகரில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் பெருந்திரளாகப் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார்.

"கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில், சிங்களப் பெருந்திரளாக பேரினவாதம் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலை தாக்குதலில் கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்காக நீதி வேண்டி தமிழர்கள் நாம் 13 ஆண்டுகளாக பன்னாட்டுச் சமூகத்திடம் போராடி வருகின்றோம்.

இந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம், மே பதினேழு இயக்கம் சென்னையில் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தி வருகிறது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஆண்டுதோறும் தவறாது நான் கலந்துகொண்டு, கொல்லபட்ட பாலகன் பாலச்சந்திரன் உள்ளிட்ட ஈழத் தமிழர்கள், போராளிகள் நினைவாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகிறேன்.

தற்போது மெரினா கடற்கரையில் நிகழ்வுகள் நடத்த நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதால், இந்த ஆண்டிற்கான நினைவேந்தல் நிகழ்வினை நடத்திக்கொள்ள சென்னை பெசன்ட் நகர் கடற்கரையினை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. எனவே, தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் வரும் மே 22 ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதைப் போல, இந்தாண்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வான இதில் கழகத் தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக குடும்பத்தினருடன் கலந்துகொள்ள வேண்டுமென அன்புடன் அழைக்கிறேன்" என்று அழைத்திருந்தார்.

ஆனால் நேற்று இரவு சென்னை போலீசார் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்... மதிமுக வாட்ஸ்அப் குரூப்பில் அதன் செய்தி தொடர்பாளர்

நன்மாறன், "இன்று மாலை பெசன்ட்நகர் கடற்கரையில் மே17இயக்கம் ஏற்பாட்டில் நடைபெற இருக்கின்ற நினைவேந்தல் கூட்டத்தில் தலைவர் வைகோ அவர்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலையால் கலந்து கொள்ள இயலாது என்பதை தெரிவித்து கொள்ளப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

ஆரா

.

பன்னீர்,சசிகலா, பாஜகவுக்கு எடப்பாடியின் ’பொதுக்குழு’ மெசேஜ்! ...

5 நிமிட வாசிப்பு

பன்னீர்,சசிகலா, பாஜகவுக்கு  எடப்பாடியின் ’பொதுக்குழு’ மெசேஜ்!

அதிமுகவில் பதவி மோதல்: நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசிகலா ...

5 நிமிட வாசிப்பு

அதிமுகவில் பதவி மோதல்: நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசிகலா

பன்னீர் டெல்லி சென்றது ஏன்?

3 நிமிட வாசிப்பு

பன்னீர் டெல்லி சென்றது ஏன்?

ஞாயிறு 22 மே 2022