மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 மே 2022

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமினில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று (மே 18) விடுதலை செய்தது. இதையடுத்து, தனது விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன் என்று கூறியிருந்தார் பேரறிவாளன்.

அதன்படி நேற்று முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரைப் பேரறிவாளன் மற்றும் அவரது தயார் அற்புதம்மாள் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைப் பேரறிவாளனும், அற்புதம்மாளும் சென்னை அண்ணாநகரில் சந்தித்தனர். அப்போது வைகோவின் மகன் துரை வைகோவும் உடன் இருந்தார்.

பேரறிவாளனின் கைகளை பிடித்து வரவேற்றார் வைகோ. வந்திருந்தவர்களுக்குத் தேநீர் கொடுத்து உபசரித்தனர். விடுதலை வழக்கு தொடர்பாகப் பேரறிவாளனும், வைகோவும் பேசினர். பின்னர் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

வைகோ பேசுகையில், “பேரறிவாளன் நிரபராதி. எந்த குற்றமும் அற்றவர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அவருக்கு எந்த தொடர்பும் கிடையாது. இறுதியில் நீதி வென்றது. ஆளுநர் அரசாங்கத்தின் முடிவைச் செயல்படுத்தாமல் இருந்தார். கடைசியில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு 142ஆவது சட்டப்பிரிவின் கீழ் விடுதலை செய்தது. அவருக்கு தற்போது வாழ்வு கொடுத்திருந்தாலும் அவரது இளமை அழிந்துவிட்டது. வசந்த காலம் எல்லாம் போய்விட்டது. பேரறிவாளன் விடுதலைக்காக அற்புதம்மாள் வீராங்கனையாகப் போராடினார். யாராக இருந்தாலும் தளர்ந்துவிடுவார்கள், சோர்ந்துவிடுவார்கள். ஆனால் தொடர்ந்து போராடி அற்புதம்மாள், மகனை மீட்டு கொண்டு வந்துவிட்டார். மீதமுள்ள 6 பேரும் விடுதலையாகிவிடுவார்கள். ஆனால் அவர்களது வாழ்க்கையின் பெரும்பகுதி அழிந்துவிட்டதே” என்று வேதனை தெரிவித்தார்.

பேரறிவாளன் பேசுகையில், “சிறை செல்வதற்கு முன்னதாக அண்ணன் வீட்டுக்கு வந்திருக்கிறேன். அவரை சந்தித்திருக்கிறேன், சாப்பிட்டிருக்கிறேன். பொடா காலத்தில் சிறையிலிருந்துள்ளோம். அந்த காலம் அண்ணனுடன் இருந்த மகிழ்ச்சியான தருணமாகும்

எனக்குத் தூக்குத் தண்டனை விதித்த போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியிடம் சென்று எங்களுக்காக அண்ணன் மனு கொடுத்தார். அதன்பிறகு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களிடமும் மனு கொடுத்தார். மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டவர் மறைந்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. இவரால்தான் சட்ட அறிஞர்களின் பார்வை இந்த வழக்கின் பாதையில் திரும்பியது. இதற்குக் காரணமானவர் அண்ணன் வைகோதான். அண்ணன் இல்லை என்றால் அது சாத்தியமே ஆகியிருக்காது. அவருக்கு நன்றி தெரிவிக்க வந்தோம்” என்று கூறினார்.

-பிரியா

பன்னீர்,சசிகலா, பாஜகவுக்கு எடப்பாடியின் ’பொதுக்குழு’ மெசேஜ்! ...

5 நிமிட வாசிப்பு

பன்னீர்,சசிகலா, பாஜகவுக்கு  எடப்பாடியின் ’பொதுக்குழு’ மெசேஜ்!

அதிமுகவில் பதவி மோதல்: நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசிகலா ...

5 நிமிட வாசிப்பு

அதிமுகவில் பதவி மோதல்: நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசிகலா

பன்னீர் டெல்லி சென்றது ஏன்?

3 நிமிட வாசிப்பு

பன்னீர் டெல்லி சென்றது ஏன்?

வியாழன் 19 மே 2022