இடதுசாரிகள் -சிறுத்தைகள்: திமுக கூட்டணிக்குள் ஒரு கூட்டணி!

politics

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களான கே. பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் இன்று மே 17ஆம் தேதி சென்னை தி நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.

அதன் பிறகு இவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து தேசிய அளவில் நடத்தப்படும் பிரச்சார இயக்கத்தில் தமிழ்நாட்டில் இணைந்து செயல்படுவோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

மே 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இந்த பிரச்சார இயக்கம் நடைபெறும் என்றும்… இதன்படி மே 26, 27 தேதிகளில் ஒன்றிய, நகர, வட்ட அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், 25 முதல் 31 ஆம் தேதி வரை வீடுவீடாக ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படும் என்றும் முடிவெடுத்து கூட்டறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
இவர்களோடு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியும் இணைந்துள்ளது.

சமீப நாட்களாகவே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகளும், விடுதலை சிறுத்தைகளும் பல விஷயங்களில் கூட்டணி கட்சி தலைமையான திமுகவுக்கு அப்பாற்பட்டு சுயமாக முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வருகின்றனர். உதாரணத்துக்கு ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று தமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை மார்க்சிஸ்ட் கட்சியும் விடுதலை சிறுத்தைகளும் முதலில் புறக்கணித்து அறிவிப்பை வெளியிட்டார்கள். அதன் பிறகே திமுக ஆளுநர் விருந்தை புறக்கணித்தது.
இப்போது ஒன்றிய அரசை எதிர்த்து நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் திமுகவை எதிர்பார்க்காமல்… இந்த மூன்று தலைவர்களும் கொடுத்துள்ள கூட்டறிக்கை திமுக கூட்டணியில் ஒரு கவன ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணிக்குள்ளேயே கூட்டணி அமைக்கிறார்கள் என்ற சலசலப்பும் எழுந்துள்ளது.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *