மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 மே 2022

குவாரி கொடூரம்: பின்னணி முகம்!

குவாரி கொடூரம்: பின்னணி முகம்!

நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியுள்ள 3 பேரை தொடர்ந்து மீட்கும் பணி இரண்டாவது நாளாக நடந்து வருகிறது.

நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் நேற்று முன் தினம் ஏற்பட்ட விபத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கினர். இதில் 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

மீதமுள்ள 3 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அரக்கோணம் 4 ஆவது பட்டாலியனைச் சேர்ந்த 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை குழு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. பாறைகள் அவ்வப்போது சரிவதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. பாறை இடுக்குகளில் துளையிட்டு இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை கேமராக்கள் மூலம் அடையாளம் காணக்கூடிய கருவி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் இரண்டாவது நாளாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுபோன்று, கல்குவாரி உரிமம் பெற்ற சங்கர நாராயணனை காவல்துறையினர் கைது செய்தனர். சங்கர நாராயணன் உள்ளிட்ட 4 பேர் மீது 304, 304(ஏ), 336 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குவாரியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த சேம்பர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், குவாரி விபத்துக்கு திமுக அரசின் அலட்சியம் தான் காரணம், ஊழல் மற்றும் முறைகேடுகள் தான் காரணம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இருவரும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில், “பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை, பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று இந்த குவாரிக்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை மீண்டும் தலைதூக்கியுள்ளன. இதனால் இந்த குவாரி மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதற்குக் காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

தற்போது விபத்து நடந்த கல்குவாரியில் கல்வெட்ட 150 அடிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 350 அடி வரை வெட்டி எடுத்திருக்கின்றனர். குவாரிக்கான உரிமம் சங்கர நாராயணன் பெயரிலிருந்தாலும், இவரது பின்னணியில் காங்கிரஸ் பிரமுகர் சேம்பர் செல்வராஜ் இருப்பதாகவும், இவரது பின்னணியில் சபாநாயகர் அப்பாவு இருப்பதாகவும் நெல்லை அனைத்துக் கட்சி அரசியல் வட்டாரங்களிலும் சொல்லப்படுகிறது.

விபத்து தொடர்பாக நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “விதிமீறல் இருந்தால் குவாரி மூடப்படும். உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லையில் உள்ள குவாரிகளில் ஆய்வு செய்யப்படும்” என்றார்.

அப்போது சேம்பர் செல்வராஜை ஏன் கைது செய்யவில்லை, காங்கிரஸ் பிரமுகர் என்பதால் கைது செய்யவில்லையா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், “அப்படியெல்லாம் இல்லை. சட்டப்படி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிலளித்தார்.

கனிம வளத் துறை அமைச்சராக துரைமுருகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

பன்னீர்,சசிகலா, பாஜகவுக்கு எடப்பாடியின் ’பொதுக்குழு’ மெசேஜ்! ...

5 நிமிட வாசிப்பு

பன்னீர்,சசிகலா, பாஜகவுக்கு  எடப்பாடியின் ’பொதுக்குழு’ மெசேஜ்!

அதிமுகவில் பதவி மோதல்: நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசிகலா ...

5 நிமிட வாசிப்பு

அதிமுகவில் பதவி மோதல்: நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசிகலா

பன்னீர் டெல்லி சென்றது ஏன்?

3 நிமிட வாசிப்பு

பன்னீர் டெல்லி சென்றது ஏன்?

திங்கள் 16 மே 2022