மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 மே 2022

ஈழப்பிரச்சினையில் தீர்வை நோக்கி மோடி: முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அண்ணாமலை

ஈழப்பிரச்சினையில் தீர்வை நோக்கி மோடி: முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அண்ணாமலை

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கருத்தரங்கம் மே 14 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டதால் ஈழத்தமிழர் விவகாரங்களில் போராடிவரும் பல்வேறு அமைப்பினர் இக்கூட்டத்தை புறக்கணித்து விட்டனர்.

இருந்தபோதிலும் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் இந்த கூட்டம் நடந்தேறியது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நல்லதுரை பேசியபோது,

"இங்கிருக்கும் எதிரும் புதிருமான அரசியலை ஓரம் தள்ளிவிட்டு ஈழத்தமிழ் மக்களுக்கு தனி ஈழத்தை அமைத்து கொடுப்பதற்கு ஆதரவாக மத்திய அரசை ஆண்டு கொண்டிருக்கும் கட்சியையும் ஒருங்கிணப்பது, மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் கட்சிகளை ஒருங்கிணைப்பது என்ற வகையில்தான் இந்த ஏற்பாடு நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தானே முன் வந்து கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தார் என்று அறிந்தபோது மகிழ்ந்தோம். அதற்காக அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் அரசியல் இருக்கிறது. இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியை சேர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியலில் நீங்களும் நானும் எதிரும் புதிருமாக இருக்கலாம். ஆனால் ஈழ அரசியல் என்பது தமிழ்நாட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டது. எல்லோருக்குமான அரசியல் அது. எனக்கு மட்டும் உனக்கு மட்டும் இல்லை.

இந்த நிலைமை 2009க்கு முன்பு அல்லது 2009இல் ஏற்பட்டிருந்தால் இவ்வளவு தமிழ் உயிர்களை பறிகொடுத்து விட்டு பதைபதைத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

ஈழப்போராட்டத்தில் தொடக்கத்திலிருந்து எங்களோடு இருந்தவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. இந்த நிகழ்விலே அரசியல் பேச விரும்பவில்லை. தோழர் அண்ணாமலை கலந்து கொள்வதால் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டோம் என அவர்கள் தெரிவித்து விட்டு கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்காக ஒரே ஒரு கேள்வியை மட்டும் விட்டுச் செல்கிறேன். வருகிற நாட்களில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலையை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் திறந்து வைக்க இருக்கிறார். அந்த நிகழ்விலும் நீங்கள் எல்லாம் கலந்து கொள்ள மாட்டீர்களா?

இங்கே வந்திருக்கும் அண்ணாமலை தங்களது தேசியக்கட்சியின் தலைமைக்கு

எடுத்துச்சொல்லி முள்ளிவாய்க்கால் மக்களுக்கு ஈழ மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

பாமக சார்பாக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு பேசும்போது, "இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறோம். ஆனால் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி இரண்டு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் பார்க்கிறேன். ஒன்று ஈழத் தமிழர்களை கொன்று குவித்த அந்தக் கொடியவன் ராஜபக்சே பதுங்கு குழியில் இருக்கின்ற பொழுது நடக்கக்கூடிய முதல் நினைவேந்தல் நிகழ்ச்சி இது.

தமிழ் உறவுகளை கொன்று குவித்த அந்தக் கொடியவன் தன் மக்களாலேயே அடித்து விரட்டப்பட்டு பிரதமர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டு அங்கே பதுங்கு குழியில் பதுங்க கூடிய ஒரு நிலை. அந்த விதத்தில் இது மிக முக்கியமான ஒரு நிகழ்வு.

சகோதரர் அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சி தலைவராக இருக்கக் கூடிய இந்த சூழலில் எனக்கு தெரிந்து பாரதிய ஜனதா கட்சி கலந்துகொண்டு கூடிய முதல் நினைவேந்தல் நிகழ்ச்சியாக இதை நான் பார்க்கிறேன்.

ஐநா மன்றத்தில் இலங்கை மீதான போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் பற்றிய தீர்மானம் கொண்டுவரப்படும் போதெல்லாம் இதுவரை இந்தியா ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லாமல் நடுநிலை வகித்து வருகிறது. அந்த நிலை மாற வேண்டும்.

சமீபத்தில் இலங்கை சென்று தன்னுடைய ஆதரவை தெரிவித்து இன்றைக்கு இந்த நினைவேந்தலில் தானும் பங்கு கொண்டு அமர்ந்திருக்கக் கூடிய பாசத்திற்குரிய அண்ணாமலை அவர்கள் எத்தனையோ பேர் செய்த அரசியல் போன்று இல்லாமல் உள்ளபடியே நீங்கள் அங்கே ஈழம் மலர்வதற்கு உண்மையான குரலை ஓங்கி ஒலிக்கவேண்டும். இங்கிருந்து எழக்கூடிய இந்த குரல் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் காதுகளில் விழ வேண்டும். அதன் மூலமாக இலங்கை விவகாரத்தில் இந்தியா எடுக்கக்கூடிய சர்வதேச நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள ஒரு காரணமாக அமைய வேண்டும் என்று இந்த நேரத்திலேயே நான் பணிவோடு கேட்டுக் கொள்கின்றேன்.

இலங்கையிலே இன்று அரசாங்கம் நடத்த முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு சர்வதேச போர்க் குற்றத்திற்காக ராஜபக்சே அவருடைய கூட்டாளிகள் கொலையாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட வேண்டும்.

அங்கே தனிநாடு ஒன்று தமிழர்களுக்காக உருவாக வேண்டும். அந்த முயற்சியை இந்தியா மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான் இன்றைக்கு சீனா இலங்கையின் மூலமாக உள்ளே நுழைந்து அதன் மூலமாக இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முயற்சியை தடுத்து நிறுத்த முடியும். இதை இங்கு இருக்கக்கூடிய வெளியுறவுக் கொள்கை வகுப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வரும், பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரும். ஆனால் இங்கு இருக்கக்கூடிய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தான் இந்த முடிவுகளை எடுக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன். இந்தியாவின் நிலைப்பாடு மாற வேண்டும். அந்த மாற்றங்கள் நிகழ்வதற்கு அண்ணாமலை அவர்கள் அவருடைய முயற்சியை இந்த கூட்டத்தின் மூலமாக அவர் வெளிப்படுத்த வேண்டும்" என்று பேசினார்.

இந்த நிகழ்வில் பேசிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், "இலங்கைக்குள் எத்தனையோ ஒப்பந்தங்கள் செய்தாகிவிட்டது. அவை யாவற்றையும் சிங்களத் தலைவர்கள் கணக்கில் எடுக்கவில்லை.

இலங்கை இன்று பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் எமது ஈழத்தமிழர்கள் 30 ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறார்கள். ஒரு பாட்டில் பெட்ரோல் 1000 ரூபாய்க்கு நாங்கள் வாங்கி இருக்கிறோம் ‌‌‌.

அங்கே தமிழர்கள் நாங்கள் இன்று போராடி இருந்தால் மகிந்த கும்பல் கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்திய தாக்குதலை போல தமிழர்கள் மீதும் தாக்குதல் நடத்தி இருப்பார்கள்.

இப்போது இந்தியாவின் நடவடிக்கைகள் மிக சிறப்பாக இருக்கின்றன. அங்கே சீனாவின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. ஆனால் இவற்றுக்காக சிங்களர்கள் இந்தியாவுக்கு நம்பிக்கையாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் மீண்டும் சீனாவின் பக்கம் செல்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது.

ஈழத் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ கூடிய நிலைமையை இந்தியா உருவாக்க வேண்டும். அதுதான் இந்தியாவுக்கு பாதுகாப்பு.

சர்வதேச நீதிமன்றத்தில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்று கூறினார்.

இந்த நிகழ்வில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பேசியபோது, "ஈழத்துடைய சிக்கல் தீர வேண்டுமென்றால்... அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று தான் கேட்கிறார்கள்.

இந்தியா இந்திய பெருங்கடல் பகுதியில் பெரும் உரிமை கொண்ட பெரும் அதிகாரம் கொண்ட ஒரு நாடாக விளங்குகிறது. இந்தியா என்பது ஒரு பெரிய வலிமை ஒரு பெரிய வல்லமை. ஈழத்தின் சிக்கல் பற்றி நாம் சிந்திக்கும்போது இந்தியாவை மறந்து சிந்திக்க முடியாது. தலைவர் பிரபாகரன் தனது கடைசி மாவீரர் தின உரையில் இந்தியாவுடன் என்றென்றும் நட்போடு இருப்போம் என்று கூறினார்.

இதைக் கூறினால் இங்கிருக்கும் சிலர் உங்களை போன்றவர்களோடு உங்களுக்கென்ன நட்புறவு என்று கேட்கிறார்கள். இன்னும் சிலர் காசி ஆனந்தன் பெயரை காவி ஆனந்தன் என்று மாற்றிக் கொள்ளலாம் என்று சொன்னார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சி தலைவர்களோடும் எனக்கு நெருக்கமான உறவு இருக்கிறது. எல்லா கட்சிக் கூட்டங்களுக்கும் நான் செல்வேன். அங்கே மத்திய உளவுத்துறையினர் வருவார்கள். என்னை பக்கத்தில் வைத்துக்கொண்டே இங்கிருக்கும் கட்சிகளில் சிலர் தமிழ்நாட்டை நாங்கள் பிரிப்போம் என்று பேசுவார்கள். அவர்களின் பேச்சிற்கு ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தான் அடி வாங்க வேண்டும். அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அத்தோடு அத்தகைய கூட்டங்களில் கலந்துகொள்வது நான் நிறுத்திவிட்டேன்.

என்னை முன்பு கிண்டல் செய்த பலர் இன்று இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி ஜிக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்" என்று பேசினார் காசி ஆனந்தன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த கூட்டத்தில் பேசும்போது,

"ஈழப்பிரச்சனை பற்றி தமிழ்நாட்டில் எப்போது விவாதம் வந்தாலும் பாரதிய ஜனதா கட்சியை ஏதோ வேண்டாத சக்தி போல ஒரு நிலை ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதை உடைப்பதற்காக தான் இந்தக் கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.

2007, 2010 காலகட்டங்களில் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இருந்திருந்தால் இலங்கை பிரச்சனையை கையாண்ட விதம் வேறு மாதிரி இருந்திருக்கும். 2009 மே 17, 18 தேதிகளில் இலங்கையின் வட பகுதியில் நடந்தது கொடுமை சரித்திரப் பிழை. அதை இந்தியா ஆதரித்திருக்கக் கூடாது.

நான் சமீபத்தில் இலங்கைக்கு பயணம் செய்த போது அங்கே வடக்கு மாகாண தமிழர்கள் மலையகத் தமிழர்களையும் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிட்டியது. அவர்கள் இங்கே இருக்கும் தலைவர்களைப் பற்றி மிகச் சிறப்பான அபிப்பிராயத்தை கொண்டிருக்கிறார்கள். நமது பழநெடுமாறன் ஐயா அவர்கள் ஒருவேளை இலங்கையில் பிறந்து இருந்தால் அவர் இன்று இலங்கையின் மகாத்மா காந்தியாக இருந்திருப்பார்.

இலங்கை இன்று இருக்கும் நிலையில் தேர்தல் நடத்த பேலட் பேப்பர் வாங்க கூட அவர்களுக்கு வசதி இல்லை. முதலில் அங்கிருக்கும் மாகாணங்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். காவல்துறை, நில அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

ஈழப்பிரச்சனை பற்றி நரம்பு துடிக்க பேசலாம் கத்தி பேசலாம். ஆனால் தீர்வு வரவேண்டும். அந்த தீர்வை நோக்கி தான் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை நகர்த்திக் கொண்டிருக்கிறார். மோடியை நான் பாராட்டுவதில் அர்த்தம் இல்லை. அவரை நீங்கள் எல்லாம் புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பழ நெடுமாறன் பேசும்போது,

"இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றியிருப்பது இந்தியாவிற்கு ஆபத்து . அண்ணாமலை இந்த பிரச்சனை தொடர்பாக தெளிவாகவும், ஆழமாகவும் புரிந்து எப்படி சொல்லவேண்டுமோ அப்படி பேசினார். இது மகிழ்ச்சியை தருகிறது. ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறார் அண்ணாமலை. பிரதமர் நரேந்திர மோடி ராஜதந்திரம் மிக்க தலைவர். அவரிடமிருந்து ஈழ மக்கள் இன்னும் எதிர்பார்க்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

வேந்தன்

டெல்லி பயணம்: பன்னீரின் அடுத்த திட்டம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி பயணம்:  பன்னீரின் அடுத்த திட்டம்!

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட ...

7 நிமிட வாசிப்பு

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட அறப்போர்!

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ...

3 நிமிட வாசிப்பு

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ட்விஸ்ட்!

ஞாயிறு 15 மே 2022