வேதா இல்லம்: ஓபிஎஸ் உருக்கம்!

politics

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் இன்று பொன்விழா காண்கிறது. தமிழக அரசியலின் மையப்புள்ளியாக இருந்தது வேதா இல்லம். தேசிய அரசியல்வாதிகள் முதல் ஊடகங்கள் வரை பலரும் வந்து செல்லும் முக்கியத்துவத்தையும், அதிகாரத்தையும் பெற்றிருந்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தற்போது அவரது அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் 50 ஆண்டுகள் பழமையான வேதா இல்லம் இன்று பொன் விழா காண்கிறது. இதனை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ், “அதிமுக கழகத் தொண்டர்கள் எல்லாம் கோயிலாகப் பூஜித்த வேதா நிலையத்திற்கு இன்று பொன் விழா என்பதைபுரிந்து என் மனம் பூரிப்படைகிறது.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்களின் இல்லங்களுக்குப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வந்து சென்றிருக்கலாம். ஆனால், கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வந்து சென்ற இல்லம் ஒன்று தமிழ்நாட்டில் உண்டென்றால் அது போயஸ் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதா அவர்களின் வேதா நிலையம் தான். 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டு அரசியலின் மையப் புள்ளியாக விளங்கிய இடம் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம்.

தமிழ்நாட்டில் அரசியல் திருப்பம் ஏற்படுவதற்குப் பல முறை காரணமாக இருந்த இடம் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த வேதா நிலையத்திற்குப் பல முறை செல்லக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை என் வாழ்நாளில் கிடைத்த வரப் பிரசாதமாக நான் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் பட்டியலிட்டுள்ள ஓபிஎஸ், “பல ஏழை எளிய மக்கள்‌ பயன்பெறும்‌ திட்டங்கள்‌ தோன்றிய இடமாக, தமிழ்நாடு முன்னேற்றப்‌ பாதையில்‌ செல்வதற்கான அடித்தளமாக வேதா நிலையம்‌ விளங்கியது. மக்கள்‌ நலன்‌ ஒன்றையே குறிக்கோளாகக்‌ கொண்டு செயல்பட்ட வேதா நிலையம்‌ என்னும்‌ கோயிலுக்குச்‌ சென்று ஜெயலலிதா அவர்களை காணும்‌ வாய்ப்பை பல முறை பெற்றிருப்பதை எனக்குக் கிடைத்த பெரும்‌ பாக்கியமாக நான்‌ கருதுகிறேன்‌.

சராசரிகள் தான்‌ சக்கரவர்த்தி ஆகிறார்கள்‌, சாதாரணமானவர்களில்‌ இருந்துதான்‌ அசாதாரணர்கள்‌ தோன்றுகிறார்கள்‌ என்றெல்லாம்‌ கூறுவது உண்டு. சராசரிகளைச் சக்கரவர்த்திகளாக்கிய இடம்‌ இந்த வேதா நிலையம்‌ என்று சொன்னால்‌ அது மிகையாகாது. சாமான்யனும்‌ அமைச்சராகலாம்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ ஆகலாம்‌, நாடாளுமன்ற உறுப்பினர்‌ ஆகலாம்‌ என்பதை தன்‌ செயல்கள்‌ மூலம்‌ இந்த உலகிற்கு, இந்திய நாட்டிற்கு எடுத்துக்‌ காட்டியவர்‌ ஜெயலலிதா. இன்னும்‌ சொல்லப்போனால்‌ நானே இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இன்று நான்‌ தமிழக மக்களால்‌ நன்கு பேசப்படுகிறேன்‌, இந்திய மக்களால்‌ நன்கு அறியப்படுகிறேன்‌ என்றால்‌ அதற்கு மூலக்‌ காரணம்‌ அவர் தான்.என்‌ வாழ்நாளில்‌ மறக்க முடியாத இடம்‌ வேதா நிலையம்‌.

என்னை இந்த நாட்டிற்கு அடையாளம்‌ காட்டிய ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்திற்கு நான்‌ பலமுறை சென்று வந்ததையும்‌; அங்கேயிருந்து ஜெயலலிதா அவர்களிடமிருந்து அறிவுரைகளையும்‌, ஆலோசனைகளையும்‌ பெற்று வந்ததையும்‌; என்மீது ஜெயலலிதா அவர்கள்‌ காட்டிய அன்பையும்‌, பாசத்தையும்‌, நேசத்தையும்‌; நான்‌ ஜெயலலிதா அவர்கள் மீது வைத்திருந்த பக்தியையும்‌, விசுவாசத்தையும்‌, நம்பிக்கையையும்‌ வேதா நிலையத்தின்‌ பொன்‌ விழா நாளான இன்று நினைத்துப்‌ பார்க்கிறேன்‌. என்‌ கண்கள்‌ கலங்குகின்றன. வார்த்தைகள்‌ வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *