மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 மே 2022

டிஜிட்டல் திண்ணை: உட்கட்சி தேர்தல் மோசடி: ஸ்டாலின் எடுத்த முடிவு!

டிஜிட்டல் திண்ணை: உட்கட்சி தேர்தல் மோசடி: ஸ்டாலின் எடுத்த முடிவு!

வைஃபை ஆன் செய்த போது ஆன்லைனில் வந்தது இன்ஸ்டாகிராம்.

"திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. வரும் ஜூன் 3 கலைஞர் பிறந்த தினத்துக்குள் அனைத்து நிலைகளிலும் அமைப்பு தேர்தலை நடத்தி முடித்து தேர்தல் ஆணையத்திற்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என திமுக தலைமை அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் உட்கட்சி தேர்தல் பற்றி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்று கொண்டிருக்கும் பல்வேறு புகார்கள் அவரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றன" என்று இன்ஸ்டாகிராம் ஒரு சிறு குறிப்பை அனுப்பி வைத்தது.

இதற்கான காரண காரியங்களோடு வாட்ஸ்அப் தனது மெசேஜை விரிவாக டைப் செய்ய தொடங்கியது.

"திமுகவில் உட்கட்சி தேர்தல் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே கிளைக் கழக தேர்தல்கள் முடிந்து விட்டன. அவற்றில் சுமார் 60 முதல் 70 சதவிகிதம் பேருக்கு

தேர்வு சான்றிதழ்களும் அளிக்கப்பட்டுவிட்டன. அதன் அடிப்படையில் பேரூர், நகர செயலாளர்களுக்கான மனுக்கள் பெறப்பட்டு விட்டன. ஆனால் அதன் முடிவுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தற்போது மாநகர வட்ட செயலாளர் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இது முடிந்ததும் மாநகரப் பகுதி செயலாளர் களுக்கும், ஒன்றிய செயலாளர்களுக்குமான தேர்தல் நடைபெறும். பேரூர், நகர, ஒன்றிய, பகுதி செயலாளர்கள் தேர்தல் முழுமை அடைந்ததும் அதன் அடுத்த கட்டமாக மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நடைபெறும்.

மாவட்ட செயலாளர்கள் தேர்தலுக்குப் பிறகு திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும். பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்று தேர்தல் ஆணையத்திற்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை அனுப்ப வேண்டும். இதுதான் திமுகவின் தேர்தல் நடைமுறை.

இந்த நிலையில்தான் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உட்கட்சித் தேர்தல் மோசடி பற்றிய புகார்கள் சரமாரியாக சென்றுள்ளன.

இந்தப் பஞ்சாயத்துகளை பேசி முடித்து ஜூன் 3ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க முடியுமா என்ற சந்தேகம் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.

கிளைக் கழக தேர்தல்களில் வெற்றிபெற்ற கிளைச் செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதாவது மீண்டும் தானே மாவட்ட செயலாளர் ஆவதற்காக தங்களுக்கு ஆதரவான பேரூர், நகர செயலாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு கிளை செயலாளர்களை 'மாவட்டங்கள்' வற்புறுத்தி வருகிறார்கள். இதை ஏற்காத கிளை செயலாளர்களை அவர்கள் வெற்றி பெற்ற போதும் கூட, தேர்தல் பார்வையாளர்களை கையில் போட்டுக்கொண்டு வெற்றி பெறாதவர்களாக மாற்றி எழுதி தலைமையையே ஏமாற்றுகிறார்கள். கிளைச் செயலாளர் தேர்தலில் வெற்றிபெற்று அது பற்றிய கடிதம் தலைமைக்கும் அனுப்பப் பட்டு விட்ட நிலையில், மாவட்ட செயலாளர்கள் அழுத்தத்தால் வெற்றிபெற்ற கிளைச் செயலாளர்கள் கூட தோல்வி அடைந்தவர்களாக மாற்றப்படுகிறார்கள்.

பேரூர், நகரச் செயலாளர் பதவி களுக்கான மனுக்கள் வாங்கப்பட்டுவிட்ட நிலையில் முடிந்தவரை போட்டியின்றி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கு தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில் கிளை செயலாளர்களிடம் மாவட்ட செயலாளர்கள், தங்களுக்கு வேண்டிய குறிப்பிட்ட பேரூர், நகர செயலாளர்களை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் தங்களுக்குப் பிடிக்காத பேரூர் நகர செயலாளர்களை மீண்டும் கொண்டுவரக் கூடாது என்றும் அழுத்தம் கொடுக்கிறார்கள்.

தங்களுக்கு ஆதரவான பேரூர், நகர, ஒன்றிய செயலாளர்களை கொண்டுவந்து மாவட்ட செயலாளர் தேர்தலில்

தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ளத்தான் இவ்வளவு அரும்பாடு படுகிறார்கள் மாவட்டச் செயலாளர்கள்.

தேர்தல் என்றால் அப்படி இப்படி சில தவறு நடக்கலாம். ஆனால் மாவட்ட செயலாளர்கள் வைத்ததுதான் சட்டம், அவர்கள் இஷ்டப்படி தான் தேர்தல் நடக்கிறது என்ற தகவல்களை அறிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார் ஸ்டாலின்.

மேலும்... மாவட்ட, ஒன்றிய அமைப்புகளின் எல்லை வரையறை பற்றி முடிவு செய்வதற்கு ஸ்டாலின் நான்கு பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்திருந்தார். முதன்மை செயலாளர் கே. என். நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா, மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு, திமுக சட்ட ஆலோசகர் என். ஆர். இளங்கோ ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள்தான் மாவட்ட அமைப்புகள் ஏற்கனவே எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன, இப்போது அவை எவ்வாறு மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்று ஆய்வு செய்து தலைமையிடம் ரிப்போர்ட் தந்துள்ளார்கள்..

இன்னொரு பக்கம் ஸ்டாலினுடைய மருமகன் சபரீசன் பெனின்சுலா என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் பணியாற்றிய பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்தில் பணியாற்றிய பலரும் இப்போது பெனின்சுலா நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். அந்த நிறுவனமும் தமிழகம் முழுவதும் திமுகவில் ஒன்றிய, மாவட்ட எல்லை அமைப்பு குறித்து தனியாக ஒரு ஆய்வு நடத்தி ஒரு ரிப்போர்ட் தயார் செய்திருக்கிறது. இந்த டீமில் சபரீசனோடு உதயநிதியின் பங்கும் இருக்கிறது.

சபரீசன், உதயநிதி ஆகியோர் ஒப்புதலுடன் ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட அந்த ஆய்வு அறிக்கை நான்கு பேர் கொண்ட குழுவிடம் அளிக்கப்பட்டது. இவற்றையும் சேர்த்து தான் அந்தக் குழு ஆய்வு செய்து தலைமையிடம் ரிப்போர்ட் தந்துள்ளது.

மாவட்ட, ஒன்றிய எல்லை வரையறை விவகாரங்களில் தலைமை கழக நிர்வாகி ஒருவர் ஏற்கனவே பல தவறுகளை செய்திருப்பதாகவும்... இப்போது அந்தத் தவறுகளை நியாயப்படுத்த முயற்சித்து அதன் அடிப்படையிலேயே உட்கட்சித் தேர்தலில் மேலும் தவறுகள் செய்வதாகவும் ஸ்டாலினுக்கு புகார் மேல் புகார்கள் சென்றிருக்கின்றன. சபரீசனும் ஸ்டாலினிடம் புகார் அளித்திருக்கிறாராம்.

இதையடுத்து தான் இந்த மோசடிகளை சீர்படுத்தி முறைப்படி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அதன்பிறகு பொதுக்குழுவைக் கூட்டலாம் என ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறார். ஸ்டாலினுடைய கோபத்தின் விளைவு புதிய தலைமை கழக நிர்வாகிகள் நியமனத்தில் வெளிப்படும் என்கிறார்கள் அறிவாலயத்தில்" என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

ஞாயிறு 15 மே 2022