மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 மே 2022

ஆளும்கட்சி மிரட்டுவதை போலீஸ் வேடிக்கை பார்க்கிறது: ஈபிஎஸ்

ஆளும்கட்சி மிரட்டுவதை போலீஸ் வேடிக்கை பார்க்கிறது: ஈபிஎஸ்

தமிழகத்தில் நடைபெற்ற இரு சம்பவங்களைக் குறிப்பிட்டு, ஆளும்கட்சி அரசு ஊழியர்களை மிரட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு எல்லாபாளையம் முல்லை நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். நூல் வியாபாரியான இவர் நேற்று முன்தினம் இரவு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், “கருங்கல்பாளையம் கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர் செந்தில் லாட்டரி ஏஜென்சி நடத்தி வருகிறார். நான் இறப்பதற்கு அவர்தான் காரணம். லாட்டரியால் 62 லட்சம் ரூபாய் இழந்துவிட்டேன். நான் உயிரோடு இருந்தால் இன்னும் லாட்டரியை வாங்கிக் கொண்டுதான் இருப்பேன். பைத்தியமாக இருப்பேன்.

என் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக செந்திலிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் பெற்றுத் தர வேண்டும். என் மகளுக்கு அரசு வேலை வாங்கித் தர வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. எப்படியாவது லாட்டரி சீட்டை ஒழித்து விடுங்கள். எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும். என்னால் தாங்க முடியவில்லை” என்று பேசியிருந்தார். ராதாகிருஷ்ணனின் தற்கொலை தொடர்பாக ஈரோடு மாவட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதுபோன்று வேலூர் மாவட்டம் ராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜசேகர் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதி வைத்த கடிதத்தில், எனது இந்த முடிவுக்கு திமுக ஒன்றிய கவுன்சிலர் அரி தான் காரணம். ஊராட்சிக்கு வரும் நிதி முழுவதையும் தனக்குத்தான் வழங்க வேண்டும் என்று அரி தொடர்ந்து வற்புறுத்துவதாகவும் மிரட்டுவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். தனது தம்பிக்கு ரேஷன் கடையில் வேலை வாங்கித் தருவதாகப் பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் கவுன்சிலர் இதனை அழித்து மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தங்கள் தற்கொலைக்கு திமுக கவுன்சிலர்கள் தான் காரணம் என்று வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டு, 2 அப்பாவிகள் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் சமூக விரோதிகள் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பணத்தை இழந்து தவிக்கின்ற நிகழ்வுகளையும், அரசு ஊழியர்களை ஆளும் கட்சியினர் மிரட்டுவதையும் திமுக அரசின் காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டு வருகிறது.

எங்களது ஆட்சியில் பெண்கள் மற்றும் முதியவர்களின் நண்பனாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த காவலன் செயலி, திமுக அரசில் காவல் செயலியாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தனது செயல்பாட்டையும் நிறுத்தியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

காவல் துறையின் மீதே பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கும் அளவுக்குக் கொள்ளைக் கும்பல் திமுக அரசில் பலம் பெற்றுள்ளதைப் பார்க்கும்போது, திமுக அரசின் விளம்பர ஆட்சி இன்னும் எத்தனை நாள் நிலைக்கும் என்ற கேள்வியும் தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. இதற்கு என்ன பதில் அளிக்கப் போகிறார் முதல்வர்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

-பிரியா

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா? ...

4 நிமிட வாசிப்பு

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா?  ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கேள்வி

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

4 நிமிட வாசிப்பு

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

ஞாயிறு 15 மே 2022