மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 மே 2022

சிறப்புக் கட்டுரை: பாஜக ஆட்சியில் மதக் கலவரங்கள் நடக்கவில்லையா?

சிறப்புக் கட்டுரை: பாஜக ஆட்சியில் மதக் கலவரங்கள் நடக்கவில்லையா?

நிதி ஜேக்கப்

இந்தியாவுக்கு வருகை புரிந்த ஐரோப்பியக் குழுவினரிடையே 28.4.2022 அன்று பேசிய ஒன்றிய சிறுபான்மையின அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஆட்சியில் கடந்த 7-8 ஆண்டுகளாக இந்தியாவில் பெருமளவில் மதக் கலவரங்கள் ஏதும் நிகழவில்லை எனக் கூறியுள்ளார்.

‘ஆங்காங்கே சில நிகழ்வுகள் இருந்திருக்கலாம்; இவற்றிலும் ஜாதி, மத, சமூக பேதம் பார்க்காமல் தவறு செய்தவர்கள் மீது வலுவான நடவடிக்கையை மோடியின் அரசு எடுத்துள்ளது’ என்கிறார் நக்வி. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராகப் பெருகிவரும் கலவரங்கள் குறித்து ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் 108 பேர் 26.4.2022இல் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் குறித்து விசாரிக்க மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய யூனியனின் சிறப்புப் பிரதிநிதி ஏமான் கில்மோர் தலைமையிலான குழுவினர் வந்திருந்தனர். சிறுபான்மையினருக்கு சொந்தமான கட்டடங்களை இடித்துத் தள்ளும் ஆளுங்கட்சியின் சமீபத்திய நடவடிக்கை பற்றி அக்கடிதம் வருத்தம் தெரிவித்திருந்தது.

வன்முறையின் உதாரணங்கள்

நக்வி கூறுவது முற்றிலும் தவறு. இத்தகைய கலவரங்களின் முதல் உதாரணமாக 52 பேர் கொல்லப்பட்டு, 545 பேர் காயமுற்ற குடிமைத் திருத்த சட்டத்துக்கெதிராக வடகிழக்கு தில்லியில் 26.2.2020இல் வெடித்த கலவரத்தைக் கூறலாம். கலவரத்தில் அமிலம் பயன்படுத்தியதாக தில்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் மாநிலங்களவையில் அரசு தெரிவித்தது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் கண்பார்வை பாதிக்கப்படவில்லை.

மொத்தமாக 755 வழக்குகள் பதிவு செய்யப்பட, கலவரங்களுக்குக் காரணமான சதியைக் கண்டுபிடிக்க 62 தீவிர குற்ற வழக்குகளை காவல் துறை குற்றப்பிரிவின் சிறப்பு விசாரணைக் குழு புலன் விசாரணை செய்தது. மீதமுள்ள 692 வழக்குகளை வடகிழக்கு மாவட்டக் காவல் துறை விசாரணை செய்தது. 1,829 பேர் கைதாகி 353 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதாக முன்னாள் மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் 10.3.2021 அன்று பதிலளித்தார்

முகமது நபி பற்றிய தரக்குறைவான ஊடகப் பதிவின் காரணமாக 12.8.2020 அன்று பெங்களூரில் இரு தரப்பினரிடையே கடும் மோதல்கள் வெடித்தன. கலவரங்களில் மூவர் இறக்க, 60-க்கும் மேற்பட்டோர் கடும் காயமுற்றனர். வன்முறையைப் படம்பிடித்த ஊடகத்தினர் வன்முறையாளர்கள், காவல் துறையினர் ஆகிய இரு தரப்பினராலும் தாக்கப்பட்டனர்.

ஏப்ரல், 2022இல் நாடெங்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராமநவமி, ஹனுமான் ஜெயந்தி ஊர்வலங்களின்போது ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வெடித்த வகுப்புக் கலவரங்களில் இருவர் உயிரிழந்தனர்; பலர் காயமுற்றனர்.

இவ்வாறு தவறான அறிக்கையை நக்வி வெளியிடுவது இது முதல் முறை அல்ல. 2014 முதல் 2016 வர ‘பெரும் வகுப்புக் கலவரங்கள்’ எதுவும் நடைபெறவில்லை என்று நக்வி கூறியதை ஜூலை, 2018இல் FactChecker சரிபார்த்து, அவர் கூறியது தவறு என்பது அக்காலகட்ட நிகழ்வுகள் தொடர்பான அரசு ஆவணங்கள் மூலம் வெட்ட வெளிச்சமானது.

ஆவணங்கள் என்ன சொல்கின்றன?

இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 147-151இன் கீழ் பல்வேறு வழக்கு விவரங்களைப் பதிவு செய்துள்ள தேசிய குற்றவியல் பதிவு (NCB) விவரங்களின்படி 2014-2020 வரை நாட்டில் 5,415 வகுப்புக் கலவரங்கள் நடந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் மக்களவையில் 07.02.2017 மற்றும் 06.02.2018 அன்று தரப்பட்ட விவரங்களின்படி 2014-2017 வரை வகுப்புக் கலவரங்களில் 389 பேர் இறந்துள்ளனர்; 8,890 பேருக்கு காயமேற்பட்டுள்ளது. அப்போது முதல் கலவர இறப்புகள்/காயமுற்றோர் பற்றிய தகவல்கள் எப்போது கேட்கப்பட்டாலும், மத்திய அரசின் பதில் ஒரேமாதிரியாகத்தான் இருந்து வந்துள்ளது: ‘வகுப்புக் கலவரங்களின்போது சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதும் அவை தொடர்பான விவரங்களைப் பராமரித்து வரும் பொறுப்பு மாநிலங்களுடையதுதான்!’

ஆயினும், வகுப்புக் கலவரங்களால் இறந்தோர் பற்றிய விவரங்கள் NCBயின் பதிவுகளில் உள்ளன. 2015-2020 வரை கலவரங்களால் 5,875 பேர் இறந்துள்ளனர். 2019உடன் (593) ஒப்பிடும்போது 2020இல் (1,065) இறப்பு 79.5% அதிகரித்துள்ளது இதிலிருந்து தெரிய வருகிறது.

2014 (1227) முதல் 2020 (857) வரை வகுப்புக் கலவரங்கள் 30% குறைந்திருந்தாலும், 2019 (438) முதல் 2020 (857) இடையிலான ஓராண்டில் கலவர நிகழ்வுகள் 95.66% ஆக அதிகரித்தன. 2020இல் 520 கலவர நிகழ்வுகளுடன் தில்லி இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பிகார் (117), ஹரியானா (51) மற்றும் ஜார்க்கண்ட் (51) ஆகியவையும் பட்டியலில் உள்ளன. வகுப்பு/இனக் கலவரங்கள் மற்றும் தீவிரவாத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், குழந்தைகளுக்கு ரூ.1.22 கோடி நிதியுதவி தரப்பட்டதாக தனது 2020-21ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ‘சமூக நல்லிணக்கத்துக்கான தேசிய ஃபவுண்டேஷன் (NFCH) என்ற அமைப்பானது தனது பிரதான திட்டமான ‘Assist’இன் கீழ் வகுப்புக் கலவரங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி அளித்து வருகிறது. “2020-21இல் 687 பேருக்கு நிதியுதவிக்கு ஒப்புதல் தரப்பட்டு, 31.01.2021 வரை நிவாரணமாக ரூ.1.22 கோடி வழங்கப்பட்டது” என அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கம் கோரி மின்னஞ்சல் மூலம் நக்வியை தொடர்பு கொள்ள FactChecker முயற்சி செய்தது; ஆயினும் இக்கட்டுரை அச்சாகும் வரை அவரிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. அவ்வாறு பதில் கிடைத்தபின், அது பற்றி அப்டேட் செய்வோம்.

*

நிதி ஜேக்கப்

பத்திரிகையாளர், புகைப்படக்காரர், Scroll, IndiaSpend, Business Standard, Firstpost, The Quint, BOOM FactCheck ஆகியவற்றில் எழுதிக்கொண்டிருப்பவர். உண்மை சரிபார்ப்பவர் @FactCheckIndia.

நன்றி: ஸ்க்ரால்.இன்

தமிழில்: சுப்ரபாலா

திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர்: பாஜகவுக்கு பணிந்ததா திமுக? ...

8 நிமிட வாசிப்பு

திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர்: பாஜகவுக்கு பணிந்ததா திமுக?

குவாரி கொடூரம்: பின்னணி முகம்!

5 நிமிட வாசிப்பு

குவாரி கொடூரம்: பின்னணி முகம்!

சிறப்புக் கட்டுரை: இலங்கை: பெரும்பான்மைவாதம் என்ற தேசத்தின் ...

19 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: இலங்கை: பெரும்பான்மைவாதம் என்ற தேசத்தின் புதைகுழி!

ஞாயிறு 15 மே 2022