மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 மே 2022

திருவாரூர் தெற்கு ரத வீதி பெயர் மாற்றப்படாது: அமைச்சர்!

திருவாரூர் தெற்கு ரத வீதி பெயர் மாற்றப்படாது: அமைச்சர்!

திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கலைஞர் பெயரைச் சூட்டுவதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு 'டாக்டர் கலைஞர் சாலை' என்று பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பாஜகவினர் உட்பட இந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்ட பாஜகவினர் திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரனிடம் மனு கொடுத்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

அதில், "இறைநம்பிக்கையற்ற மனிதர் பெயரை எதற்காகத் திருக்கோயிலின் தேர் உலா வரும் தெருக்களில் ஒன்றுக்கு வைக்க வேண்டும். கலைஞர் சாலை என்று பெயர் சூட்ட விரும்பினால் திருவாரூரில் வேறு தெருக்கள் இல்லையா. தமிழர்களின் கடவுள் பக்தியை இறைநம்பிக்கையை உதாசீனப்படுத்தாதீர்கள். தெற்கு ரத வீதியில் பெயரை மாற்றாமல் அதே பெயர் தொடர்ந்து இருக்க ஆவன செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தெற்கு ரத வீதிக்குக் கலைஞர் பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாஜக சார்பில் அண்ணாமலை தலைமையில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய அண்ணாமலை, “தமிழகத்தின் நீண்டகால பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மாற்றுவதற்கான முயற்சியில் திமுக ஈடுபட்டு வருகிறது” என்று குற்றம்சாட்டினார்.

திருவாரூர் தெற்கு ரத வீதிக்குக் கருணாநிதி பெயரை வைக்க நினைப்பது ஒரு மனவியாதி என்று தெரிவித்த அவர், “குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்குத் தான் இந்த வியாதி வரும். திமுகவின் மன வியாதியைத் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் நிச்சயம் குணப்படுத்துவார். தமிழகத்தில் ஏராளமான கிராமங்கள் சாலை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. அங்குள்ள மக்கள் எல்லாம் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு மலைப்பகுதியில் சாலை வசதி இல்லாமல் மக்கள் அல்லல் படுகின்றனர். இதுபோன்ற ஊர்களில் சாலைகளை அமைத்து அவற்றுக்குக் கருணாநிதி பெயரை வைக்கலாம்.

திருவாரூர் தெற்கு ரத வீதியில் பெயரை மாற்ற மாட்டோம் என அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மீது நம்பிக்கை இல்லாததால் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறோம். இதையும் மீறி தெற்கு ரத வீதிக்குப் பெயர் மாற்றம் செய்ய நினைத்தால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படாத அளவுக்கு பாஜக முற்றுகைப் போராட்டம் நடத்தும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று(மே 14) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என் நேருவிடம் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “இன்னும் அந்தத் தெரு பழைய பேரில் தான் இருக்கிறது. வேற எந்தச் சமாச்சாராமும் கிடைக்கவில்லை என்று அண்ணாமலை தேவையில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார். எந்த தனி நபரும் அரசாங்கத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைக்க முடியுமா? அரசுப் பணியை, அரசு அலுவலர்கள் பணியை அப்படித் தடுத்தால் அதற்குரிய வழக்குகளை அவர்கள் சந்திக்க நேரிடும்" என்றார்.

இதனிடையே திருவாரூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் 41% மாநிலங்களின் பங்கு: ப.சிதம்பரம் ...

3 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் 41% மாநிலங்களின் பங்கு: ப.சிதம்பரம்

முள்ளிவாய்க்கால்: பெசன்ட் நகர் கடற்கரை நினைவேந்தலுக்கு திமுக ...

12 நிமிட வாசிப்பு

முள்ளிவாய்க்கால்: பெசன்ட் நகர் கடற்கரை நினைவேந்தலுக்கு திமுக அரசு தடை!

72 மணி நேரம்தான் கெடு: அண்ணாமலை எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

72 மணி நேரம்தான் கெடு:  அண்ணாமலை எச்சரிக்கை!

சனி 14 மே 2022