மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 மே 2022

அரசு பேருந்துகளில் சிசிடிவி: செயல்படுத்துவது எப்படி?

அரசு பேருந்துகளில் சிசிடிவி: செயல்படுத்துவது எப்படி?

சென்னையில் முதற்கட்டமாக 500 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

பேருந்துகளில் பயணம் செய்யும் போது நடைபெறும் திருட்டுச் செயல்கள், பாலியல் தொல்லைகள் ஆகியவை தினசரி நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும், சில ஆண் பயணிகளால் பெண் பயணிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதை தடுக்கும் வகையிலும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையிலும் சென்னை மாநகரில் உள்ள 2500 பேருந்துகளில் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிசிடிவி கேமரா, பேனிக் பட்டன் ஆகியவற்றை பொருத்த அரசு திட்டமிட்டது.

அதன் ஒருபகுதியாக முதல்கட்டமாக 500 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்ட அந்த பேருந்துகளின் செயல்பாட்டினை முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 14) தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுப்பது பற்றி அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதில், “நிர்பயா பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பேருந்துகளிலும் 2 சிசிடிவி கேமராக்கள், 4 பேனிக் பட்டன் மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் (MNVR) 4G GSM SIM வழியாக கிளவுட் அடிப்படையிலான கட்டளை மைய பயன்பாட்டுடன் இணைக்கப்படும்.

இம்முழு அமைப்பும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை வழியாகக் கண்காணிக்கப்படும். இதன் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கான தகவல் மையம் கிளவுட் உடன் இணையும்.

பயணம் செய்யும் பயணிகளுக்கு மற்றவர்களால் ஏற்படும் அசௌகரியங்களின் போதும், பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நிகழ்வுகளின் போதும், அவசர அழைப்பு பொத்தான்களை அழுத்தி, அந்நிகழ்வுகளைப் பதிவு செய்யலாம். அவ்வாறு செய்வதன் மூலம், கட்டளை மையத்தில், பேருந்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ பதிவின் சில வினாடி முன் தொகுப்புடன் ஒரு எச்சரிக்கை மணி ஒலிக்கும். இந்த ஒலி தூண்டுதலைக் கொண்டு, செயலியை இயக்குபவர் நிலைமையைக் கண்காணித்து, நிகழ் நேர அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆவன செய்வார். இதற்காகக் கட்டளை மையம், காவல்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் அவசரக்கால பதில் மையத்துடன் இணைக்கப்படும். இத்திட்டத்தின் செயல்பாட்டின் போது, நிகழ் நேர அவசர அழைப்புகள் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 31 பணிமனைகள் மற்றும் 35 பேருந்து முனையங்கள் முழுவதும் மைய கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது. இத்திட்டத்தில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வீடியோ பகுப்பாய்வு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், காணாமல் போனவர்களைக் கண்டறியவும், குற்றவாளிகள் என அறியப்பட்டவர்களை அடையாளம் காணவும் முடியும்” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 20,304 பேருந்துகள் 10,417 வழித்தடங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளை ஒரு கோடியே ஏழு லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாகப் பெண்களுக்கான இலவச பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பெண் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதத்திலிருந்து 62 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

சனி 14 மே 2022