மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 மே 2022

உயர்த்தப்படுகிறதா பேருந்து கட்டணம்?

உயர்த்தப்படுகிறதா பேருந்து கட்டணம்?

பொது மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்துவது தொடர்பாக முதல்வர் முடிவு எடுப்பார் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கு இந்த அரசு எந்தத் திட்டத்தையும் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை. ஏற்கனவே அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது பல்வேறு திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். ஆகவே இன்னும் கூடுதல் செலவாகும் என்பதால் விரைவில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாகச் சேலத்துக்கு வந்துள்ள நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பேருந்து கட்டணம் மின் கட்டணம் எல்லாம் உயரும் என்று ஈபிஎஸ் சொல்கிறாரே என்ற கேள்விக்கு, "இதுபோன்று அவர்தான் சொல்கிறார். நடக்கும் போதுதான் அதைப் பார்க்க வேண்டும். இவர்கள் காலத்தில் எந்த விலையும் ஏறவில்லையா. சிமெண்ட் விலை, ஜல்லி விலை, கம்பி விலை குறித்தெல்லாம் கேட்கிறார்கள். இவர்கள் ஆட்சியில்தான் இந்த பொருட்களின் விலை எல்லாம் பல மடங்கு உயர்ந்தது. சூழ்நிலைக்கு ஏற்ப விலைவாசியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. விலை உயர்வைப் பொறுத்தவரை மக்கள் பாதிக்காத வகையில் முதல்வர் முடிவெடுப்பார்” என்று தெரிவித்துள்ளார். இதனால், பேருந்து கட்டணம் உயருமோ என்ற அச்சம் சாமானிய மக்கள் இடத்தில் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்களை மக்களை பாதிக்காத வகையில் உயர்த்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மக்களை அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தும். இது தேவையற்றது; தவிர்க்கப்பட வேண்டும்.

பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று கடந்த வாரம் தான் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த வாரம் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் நேரு கூறுகிறார். ஏன் இந்த குழப்பம்?

வரலாறு காணாத பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இந்த நேரத்தில் பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டால் அதை மக்களால் தாங்க முடியாது. கட்டண உயர்வுக்கு பதிலாக சீர்திருத்தங்கள் மூலம் போக்குவரத்து கழகங்களை லாபத்தில் இயக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

வெள்ளி 13 மே 2022