மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 மே 2022

பிரதமர், தலைமை நீதிபதிக்கு முதல்வர் கோரிக்கை!

பிரதமர், தலைமை நீதிபதிக்கு முதல்வர் கோரிக்கை!

நீதிபதிகள் நியமனம் தொடர்பாகவும் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியும், பிரதமர், தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழ் மொழியை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கையைக் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு முதல்வர் ஸ்டாலின் முன்வைத்தார்.

இந்தச்சூழலில் நேற்று பிரதமர் மோடிக்கும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

நீதித்துறை தொடர்பான சில முக்கிய விஷயங்களைப் பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகவும், அவை விரைவில் கவனிக்கப்பட வேண்டுமென்றும் கடிதத்தில் கேட்டுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்,

“நாட்டின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் நீதிபதிகள் நியமிக்கப்படும்போதுதான், பன்முகத் தன்மையும், ஒட்டுமொத்த சமூகத்தின் கண்ணோட்டங்களும், உணர்வுகளும் பிரதிபலிக்க ஏதுவாக இருக்கும். அந்த வகையில், உச்ச நீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அமைய வேண்டும். எனவே, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் சமூகப் பன்முகத்தன்மையையும், சமூக நீதியையும் பேணும் வகையில், நீதிபதிகளை நியமிப்பதற்கான நடைமுறைக் குறிப்பில் அதற்கேற்ப உரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

நாடு முழுவதும் பல்வேறு உயர் நீதிமன்றங்கள் இருந்தாலும், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடுகளின் எண்ணிக்கை அதனைச் சுற்றியுள்ள மாநிலங்களிலிருந்து அதிகம் என்பதைத் தரவுகளிலிருந்து அறிய முடிகிறது . அரசியல் நிர்ணய சபையில் இது தொடர்பாக நடைபெற்றுள்ள விவாதங்களும், பாராளுமன்ற நிலைக்குழுக்களின் பரிந்துரைகளும், பல்வேறு சட்ட ஆணையங்களின் அறிக்கைகளும் உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை மாநிலங்களில் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றத்தின் நிரந்தரக் கிளைகளை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர், “ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் ஆகிய நான்கு உயர் நீதிமன்றங்களில், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழை ஆக்குவதற்கு ஏதுவாக, தமிழ் மொழியில் தரமான சட்ட நூல்களை வெளியிடுவதற்கு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. செம்மொழியாகவும், அதே சமயம் நவீன மொழியாகவும் உள்ள தமிழ் மொழியினை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகப் பயன்படுத்துவது முற்றிலும் பொருத்தமானதாக இருக்கும்.

சட்டத்தையும், நீதியையும் சாமானிய மக்களுக்குப் புரியவைப்பது நீதி வழங்கல் அமைப்பின் இன்றியமையாத கடமை. அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாநிலத்தின் அலுவல் மொழியை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக ஆக்குவதில் உள்ள சிரமங்களை நவீன தொழில்நுட்பத்தின்மூலம் எளிதில் சரிசெய்திட முடியும். எனவே, தமிழக அரசின் அலுவல் மொழியான தமிழை, ஆங்கிலத்துடன் சேர்த்து, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளையின் அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

வெள்ளி 13 மே 2022