மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 மே 2022

சிறப்புக் கட்டுரை: தகத்து எரியுதே தமிழ்ப் பகை !

சிறப்புக் கட்டுரை: தகத்து எரியுதே தமிழ்ப் பகை !

ஸ்ரீராம் சர்மா

வெந்தழலில் வீழ்ந்து கொண்டிருக்கின்றது இலங்கை !

மாபாரத காலத்தின் பாழ்த்த துரியோதன – துச்சாதனரின் மறு உருவங்கள் இலங்கை மண்ணெங்கும் கசையடிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

பேராசை, ஆணவம், பொறாமை என மொத்தக் கசடுகளையும் கொண்டு எப்படி எல்லாம் அன்றவர்கள் அசிங்கப்பட்டு, அவலப்பட்டு தங்கள் முடிவை தேடிக் கொண்டிருந்திருப்பார்கள் என்பதை இன்றைய இலங்கை உலகறிய செய்து ஓங்காரமிடுகிறது !

நரவாடை வீசும் மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே எனும் இரட்டை மிருகங்களின் ஒற்றைக் குடும்பம் தங்கள் தேசத்தின் மாண்பை குழி தோண்டி புதைத்து விட்டதாய் கொந்தளிக்கின்றது இலங்கை சமூகம்.

நல்லவர்களை நாடற்றவர்களாகச் செய்தது துரியோதனாதிகளின் வன்மை அல்ல. அது, சகுனித் தன்மையின் உருட்டல் மட்டுமே என்பதை தாமதமாய் உணர்ந்த இன்றைய இலங்கைக் குடிகள் அந்த பொய்மாய பிசாசங்களை போய் தொலையுங்கள் என்கிறது !

இருபத்தியிரண்டு மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை ஆரம்பத்தில் GO GOTA எனும் பதாகைகளை ஏந்தியபடி நாகரீகமாகத்தான் புறக்கணித்தது.

சுரணையற்ற மகிந்த குடும்பம் கொஞ்சமும் உணரவில்லை என்பதால், மே மாதம் ஒன்பதாம் தேதி முதலாக வீடு புகுந்து எரித்தாடுகின்றது ! அந்த மிருகங்களின் வாழிடங்கள் சொந்த மக்களாளாலேயே தீக்கிரையாகிப் போக - கூட்டாளிகளின் ஆடம்பர பங்களாக்களனைத்தும் தழல்பட்டழிந்து கருகிச் சிதைகின்றது.

மகிந்த ராஜபக்க்ஷே அரசியல் முகம் காட்டி நிற்க, அழிவின் முகம் காட்டி நின்றது கோத்தபய ராஜபக்க்ஷே அல்லவா ? கோத்தாவின் அழித்தொழிப்பு ஆட்டம் கோழைத்தனமானதல்லவா ?

அன்றந்த முள்ளிவாய்க்கால் நாளில்…

தமிழினத்தின் ஈரக்குலையினை அறுத்து குலப்பழி கொண்டு விட்டானே அந்தப் பாவி ! அந்த நாளின் நெஞ்சரிச்சல் இன்னுமெனக்கு அடங்கவில்லையே சாமி !

ஈழத்து பதுங்கு குழிகளிருந்து எழுந்தலறிய அந்த ஓலக் குரல்கள் இன்னமும் என் செவிப்பறைகளை சிதைத்துக் கொண்டிருக்கிறதே !

“அண்ணே.. அண்ணே..” என அந்த குஞ்சு குளுவான்கள் மன்றாடிய காட்சிகளை மனம் மறந்து தொலைய மாட்டேன் என்குதே ! கனவெலாம் துரத்துதே !

இசைப்பிரியா எனும் ஈழத்து மெல்லியளை – ஊடகவியலின் மானத் தமிழ் மகளை - கடற்கரையில் ஆடையின்றி அலறி ஓடச் செய்தவன் கோத்தா. அதனை, படம் பிடித்து உலகுக்கு காட்டி சுகம் கண்ட நபும்சகன் கோத்தா.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் நடுநாயகனாம் மேதகு பிரபாகரனை சூது மதி கொண்டு கொன்றதிலும் - அதை வெளிப்படுத்திக் காட்டியதிலும் கூட மனநலமற்ற கோத்தாவின் தரப்பை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், பாலசந்திரன் எனுமந்த பிஞ்சு மகனை - மேலுடையின்றி அமர வைத்துக் காட்டி - அதன்பின் அந்த அப்பாவி பாலகனை ஐந்து தோட்டாக்களால் துளைக்கப்பட்டதொரு சடலமாகவும் காட்டி - அந்தக் கோழை கோத்தா இந்த உலகுக்கு சொல்ல வந்த சேதியென்ன ?

ஆம், ஈழத்துப் பிஞ்சுகளையெல்லாம் இப்படியாகத்தான் கொன்றோம். உங்களால் என்ன செய்து விட முடியும் என உலக சமூகத்துக்கு அந்த மிருகத்தால் விடப்பட பகிரங்க சவால் அல்லவா அது ?

வெள்ளைக் கொடி ஏந்தி வரச் சொல்லி, நம்பி வந்தவர்களை கொத்துக் குண்டுகளால் கொன்றழித்தது பெட்டைத்தனமல்லவா ? அந்தப் போர் குற்றத்துக்கு இதுகாறும் பதிலுண்டா ?

அப்பாவி தமிழ் பெண்களை கொன்றொழித்தது மட்டுமல்லாது, மானத்துக்கு பேர் போன எமது மங்கையரின் ஆடையற்ற உடலங்களை ராணுவ வண்டிக்குள் வீசி எறிந்து - அதை படம் பிடித்தும் காட்டி கொக்கறித்து நின்றதே கோத்தாவின் கோழைப்படை!

பகையாடி நின்றது புலிகள்தானே ! புலிகளொடு மோதி வெல்வதுதானே அரசாண்மைக்கு அழகு ? கோத்தாவின் மரபணுவில் அரசாண்மை குறித்த செய்தியே இல்லையே !

அரக்க மனம் படைத்த அந்த ஆணவக்காரனுக்கு ஏவல் செய்த கூலிக் கூட்டத்தை ராணுவம் எனக் கூசாமல் கூறிக் கொண்டனவே கோத்தாவின் குற்ற மரபணுக்கள் !

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனை

குலத்தின் கண் ஐயப்படும்

என்பார் வள்ளுவப் பேராசான் !

கோத்தாவின் பிறப்பு சந்தேகத்துக்கிடமானது என நான் சொல்லவில்லை. சொந்த மக்களே சொல்கிறார்கள். ஆம், கோத்தாவின் பெற்றோர் சமாதியை இன்று கொத்திக் குதறிவிட்டார்கள் இலங்கை மக்கள் !.

புலிகளின் வீரதீர அரசாண்மைக்கு முகம் கொடுக்க அஞ்சி, அன்றந்த இறுதிப் போர் நாளில் கடல் கடந்து ஓடிப் போன அந்த மகிந்த மாமிச மலை உலக நாடுகளிடம் மண்டியிட்டு கெஞ்ச - அரசாண்மை கொண்ட நாடு ஒன்று மண்டியிட்டு கெஞ்சுகிறதே என வேறு வழியின்றி அவர்களும் களமிறங்கிக் கொடுக்க - அன்றைய இந்தியத்தின் பழிவாங்கலாட்டமும் சேர்ந்து கொள்ள…

சகலமும் முடிந்த பின் – இலங்கை மண்ணில் இறங்கி மடங்கி முத்தமிட்டு நாடகமாடிய அந்த போலி அரசியல் மிருகம் – தன் பொல்லாவினைக்கு எதிர்வினையாக இன்று தன் பதவியை ராஜினாமா செய்து அலரி மாளிகையிலிருந்து தப்பி ஓடியொளிந்து விட்டது. .

மகிந்த கேள் !

“ஊழ்வினை வந்து உறுத்து ஊட்டும்” என்பது இளங்கோவடிகளின் சிலம்பு ! செய்தவினை செவிட்டில் அறையாமல் விடாதென்பது முன்னோர் கூற்று..

காலக்குறியாக அந்த முள்ளிவாய்க்கால் முனையில் அமைந்த வற்றாப் பளையில்தான் எங்கள் கண்ணகியாளின் கொற்றம் அடங்கியுள்ளது. அது, தன் இனத்தின் ஓலத்துக்கு தீர்வு காணாமல் விடாது என்கிறது எனது ஆய்வும் - துணிபும் !.

போகட்டும், அது கடந்த காலம் !

“பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” எனும் தனித்த நாகரீகத்தைக் கொண்டது தமிழ்நாடு ! இன்றைய இலங்கையில் கண்ணீர் சிந்தும் சிங்கள மக்களுக்கும் சேர்த்தே எமது மனம் கசிந்து நிற்கிறது.

மகிந்த ராஜபக்க்ஷே தன் பெண்டு பிள்ளைகளோடு ஹெலிகாப்டர் ஏறி நாட்டை விட்டோட எத்தனிக்கும் செய்தி அரசல் புரலாகி வரும் இந்த நேரத்தில். எதிர்காலம் குறித்த அச்சத்தோடு இலங்கை மக்கள் செல்லுமிடமறியாது அல்லாடுவதை எமது நாகரீக சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது.

காலம் மாறிவிட்டது. அன்றைய உலக - ஒன்றிய அரசின் கடும் அழுத்தங்களால் கையறு நிலையில் மனங்குன்றியவராய் “விதியே. விதியே; என்செய நினைத்தாய் என் தமிழச்சாதியை ?” என கடற்கரையில் கிடந்தழுதார் முத்தமிழறிஞர் கலைஞர்.

அந்த நிலை இன்று இல்லை. இந்திய அரசு தன்னாலான உதவிகளை தாராளமாக செய்து வரும் இந்த நேரத்தில்….

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் இலங்கை சொந்தங்களுக்கு உதவிக் கரம் நீட்ட மனதார முனைந்துள்ளார். தமிழக சபாநாயகர் மாண்புமிகு அப்பாவு அவர்கள் முதல் காணிக்கையாக தன் ஒரு மாத சம்பளத்தை ஒப்படைத்துள்ளார்.

“இலங்கைக்கு கரம் கொடுங்கள் ; உறவுக்கு குரல் கொடுங்கள்” எனும் முதல்வரின் வேண்டுகோளை ஏற்று தமிழகமெங்கும் ஆதரவுக் கரங்கள் நீண்டபடியே இருக்கின்றது.

காலம் நிச்சயம் மாறும். மெல்ல உங்களால் மீண்டுவிட முடியும் !

சிங்கள உறவுகளே ! தமிழர்களின் பேரன்பை இனியேனும் உணருங்கள்.. ஈழத் தமிழர்களின் உரிமைக்கு முன் வந்து குரல் கொடுங்கள்.

அன்புதானே சிவ போதகம் ! அதன் அடுத்த பரிமாணம்தானே பௌத்தம் ! இரண்டும் ஒன்றென உணர்ந்து கொண்டால் மானுடம் வெல்லும் !

இறுதியாக ஒன்றை சொல்லி இந்த கட்டுரையை முடிக்கிறேன்.

இலங்கையின் விடிவு கோத்தபயவின் முடிவில்தான் உள்ளது.

எனதருமை இலங்கை மக்களே… அந்த நாசகாரனுக்கு புரியும் வகையில் கம்ப நாடகத்தில் இருந்தொரு காட்சியை எடுத்து வைக்கிறேன். நீங்கள் உங்கள் வழியில் அதை உணரச் செய்து விடுங்கள்.

அன்றந்த அவையில் இராவணன் புலம்பிய வரிகள் இவை…

சுட்டது குரங்கு எரி சூரையாடிட

கெட்டது கொடி நகர் கிளையும் நண்பரும்

பட்டனர் : பரிபவம் பரந்தது, எங்கெணும்

இட்டது ; இவ் அரியணை இருந்தது என் உடல் !

“ஐயகோ, என் பொன்னிலங்கை வெந்தழலில் வீழ, அதைக் காக்கும் வகையற்றவனாய் எனது அரியணையில் உயிரற்ற உடலாய் கிடந்தேனே” என அன்று மறுகி நின்றான் இராவணன்.

போலவே, அதிபர் என்னும் அரியணையில் இன்று கிடப்பது கோத்தாவின் உடல் மட்டுமே.

பரந்து சுடுவது குரங்கல்ல. கோத்தாவின் சூழ்வினை !

கோத்தா GO !

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

டெல்லி பயணம்: பன்னீரின் அடுத்த திட்டம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி பயணம்:  பன்னீரின் அடுத்த திட்டம்!

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட ...

7 நிமிட வாசிப்பு

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட அறப்போர்!

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ...

3 நிமிட வாசிப்பு

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ட்விஸ்ட்!

வியாழன் 12 மே 2022