கட்டபொம்மன் குலதெய்வ விழாவுக்குக் கட்டுப்பாடுகளா?

politics

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத் திருவிழாவுக்கான 144 தடை உத்தரவை தமிழக அரசு நீக்க வேண்டும் எனக் கோரிக்கை குரல்கள் எழுந்துள்ளன.
வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி அறிந்தவர்கள் அனைவருக்கும் ஜக்கம்மா என்கிற சக்கதேவி அம்மனைப் பற்றியும் தெரிந்திருக்கும். வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான சக்கதேவி என்கிற ஜக்கம்மா கோயில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள்ளேயே உள்ளது. எந்த செயலை முன்னெடுத்தாலும் ஜக்கம்மாவின் அருளோடுதான் முன்னெடுப்பார் கட்டபொம்மன்.
ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் ஜக்கம்மா கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் பாஞ்சாலங்குறிச்சியில் 13.05.2022 மற்றும் 14.05.2022 ஆகிய தேதிகளில் வீரசக்கதேவி ஆலயத் திருவிழா நடைபெற உள்ளது.
இந்தத் திருவிழாவை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும் 12.05.2022 மாலை 6.00 மணி முதல் 15.05.2022 காலை 6.00 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144இன் கீழ் தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்.

இந்த 144 தடை உத்தரவால் ஜக்கம்மா திருவிழாவின் பாரம்பரியம் ஒதுக்கப்பட்டு வீண் பதற்றம் திணிக்கப்படுவதாகக் கூறுகிறார் விடுதலைக்களம் அமைப்பின் தலைவர் நாகராஜன்.

“ஒவ்வொரு ஆண்டும் சக்கதேவி திருவிழாவையொட்டி பல்வேறு மாவட்டங்களில இருந்தும் இராஜ கம்பள – தொட்டிய நாயக்கர் சமூக மக்கள் ஜோதியை ஏற்றி வந்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கோயிலில் வழிபாடு நடத்துவார்கள். இந்த திருவிழாவுக்காகவே 15 நாட்கள் முன்பு காப்பு கட்டி கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வீரத்தின் அடையாளமான சக்கதேவியை வழிபட வருவார்கள்.
2012இல் ஏற்பட்ட சில அசம்பாவிதங்களை காரணமாக வைத்து தொடர்ந்து இந்த விழாவை முடக்கிப்போட்டு வருகிறது அரசாங்கம்.
இந்திய விடுதலைப் போருக்கு முதல் முழக்கமிட்ட ஒரு சுதந்திரப் போராட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம், வெள்ளையர்களுக்கு எதிரான போரில் தமிழ் வீரக்குடி மக்களைப் பலி கொடுத்த பாஞ்சாலங்குறிச்சி வரலாற்று சிறப்புமிக்க பூமியில், சுதந்திர வேட்கையில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்தி கொண்ட மக்கள் வணங்கி கொண்டாடக்கூடிய வீரசக்கதேவி ஆலயத் திருவிழாவுக்கு, கடந்த கால ஆட்சியில் செய்த தடை உத்தரவு எனும் மாபெரும் தவறு.
புதிய கோட்டை எழுப்பி பாஞ்சாலங்குறிச்சி மண்ணுக்கு புதிய முகவரி தந்த கலைஞர் வழியில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சியிலும், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொடர்கிற இந்த சம்பவம், சமூக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது.


அனைத்து சமூக மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கக்கூடிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு லட்சக்கணக்கான இராஜ கம்பள – தொட்டிய நாயக்கர் சமூக மக்கள் வழிப்படக்கூடிய பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத் திருவிழாவுக்கு, 144 தடை உத்தரவு போட்டு அவர்களின் உணர்வுகளில் வேல் ஈட்டி கொண்டு பாய்ச்சிடும் வலி போல் ஆன இத்தகைய ஏற்க முடியாத தடை உத்தரவை தமிழக அரசு நீக்கிட வேண்டும்.
எங்கள் சமூக மக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒரு பக்கம் அரசு விழா என அறிவித்துவிட்டு இன்னொரு பக்கம் 144 தடை உத்தரவு என்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேட்கிறார் நாகராஜன்.

**-வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *