மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 மே 2022

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அண்ணாமலையா? புறக்கணிக்கும் பிரமுகர்கள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அண்ணாமலையா? புறக்கணிக்கும் பிரமுகர்கள்!

2009 மே 17 18 தேதிகள் உலக மனித உரிமை வரலாற்றில் ரத்தத்தால் நனைக்கப்பட்ட பக்கங்கள். விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போரில் இலங்கை ராணுவம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ உதவிகளோடு விடுதலைப் புலிகளை அழித்து, தமிழ் மக்களையும் பெருமளவில் கொன்று குவித்த நாள்.

இதை ஒட்டி ஒவ்வொரு வருடமும் மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் தமிழ் உணர்வாளர்களால் நடத்தப்படும். அந்தவகையில் இந்த வருடம் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பாக வரும் மே 14 ஆம் தேதி

சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் 'முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை' நினைவேந்தல் - கருத்தரங்கு நடைபெற இருக்கிறது. இந்தக் கருத்தரங்கத்தை மாணவர் கூட்டமைப்போடு சேர்ந்து உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நடத்துகிறார் என்று தகவல்கள் வருகின்றன.

இதற்கான அழைப்பிதழில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த அழைப்பிதழ் இன்று மாலை முதல் சமூக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இலங்கை விஷயத்தில் காங்கிரஸின் கொள்கைக்கு எந்த விதத்திலும் மாறாத கொள்கை உடைய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கருத்தரங்கத்திற்கு அழைக்கப்பட்டு இருப்பதை அறிந்து... அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதாகக் கூறியிருந்த பலரும் தற்போது அண்ணாமலை பங்கேற்றால் தாங்கள் பங்கு பெற மாட்டோம் என அறிவித்து வருகின்றனர்.

மே பதினேழு இயக்கம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், " தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பாக, கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுவதற்கு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியிடம் ஒப்புதல் பெறப்பட்டிருந்தது. அதே வேளை, நிகழ்வில் பங்கேற்கும் பிற அழைப்பாளர்கள் குறித்த தகவல்கள் பகிரப்படவில்லை. அழைப்பிதழ் தரப்படாத நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் அழைப்பிதழின் பங்கேற்பாளர்கள் பட்டியலில், தமிழின விரோதமாக செயல்படும் பாஜகவின் மாநில தலைவர் பெயரும் நினைவேந்தல் உரையாற்றுபவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியாவில் 'இசுலாமியர்களை இனப்படுகொலை செய்வோம்' என பகிரங்கமாக அறிவித்து செயல்படும் பாஜகவோடு மே பதினேழு இயக்கம் கருத்தரங்கில் பங்கேற்பது இயலாத ஒன்று. இனப்படுகொலை எனும் மனித குலத்திற்கு எதிரான கொள்கைகளை தன்னகத்தே வைத்து போற்றும் பாஜக-ஆர்.எஸ்.எஸ். இந்துமதவெறிக்கூட்டத்தோடு எவ்வித சனநாயக கோரிக்கையையும் பகிர்ந்து கொள்வது என்பது அக்கோரிக்கையையே கொச்சைப்படுத்துவதாகும்.

காஷ்மீரிகளை இன்றளவும் ஈழத்தமிழர்களைப் போன்று உரிமையற்று, அதிகபட்ச இராணுவத்தையும், அடக்குமுறைச் சட்டங்களையும் கொண்டு அடக்கி ஆளும் பாஜக எவ்வகையிலும் இராஜபக்சே அரசின் பயங்கரவாதத்திற்கு குறைந்ததல்ல.

மேலும் ஈழவிடுதலையை மறுத்து 13-வது சட்ட திருத்தத்தின் மூலமாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு எனும் காங்கிரஸின் நிலைப்பாட்டை மேற்கொள்ளும் மோடி அரசின் நிலைப்பாடு என்பது விடுதலைப்புலிகளின் ஈகத்தை நிராகரிப்பதும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கொச்சைப்படுத்துவதுமாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றிலும் நிராகரித்ததே 13-வது சட்டத்திருத்தம் என்பதை தமிழர்கள் மறக்க மாட்டார்கள்.

ஆகவே பாஜக பிரதிநிதிகள் பங்கேற்கும் பட்சத்தில் இக்கருத்தரங்கில் எங்களால் பங்கேற்க இயலாது. இக்காரணங்களால், இக்கருத்தரங்கில் பாஜக பங்கேற்பதை வன்மையாக மே பதினேழு இயக்கம் கண்டிக்கிறது. பாஜக இக்கருத்தரங்கிலிருந்து வெளியேற்றப்படாவிடில் மே 17 இக்கருத்தரங்கை புறக்கணிக்கும்.

பாஜக பங்கேற்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்வார்களெனில், இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கப் போவதில்லை என்பதனை உறுதிபட அறிவிக்கின்றோம்" என்று கூறியுளளனர்.

இதேபோல திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள செய்தியில்,

"சென்னையில் வருகிற 14.5.2022 அன்று தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பாக நடக்க இருக்கிற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் நினைவேந்தல் கருத்தரங்கத்தில் என்னையும் கலந்து கொள்ளுமாறு அமைப்பாளர் கடந்த வாரம் கேட்டார். அந்த நாளில் 14.05.2022 அன்று தென்காசி மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மண்டல மாநாடு இருக்கிற காரணத்தால் என்னால் கலந்து கொள்ள முடியாது என்று அப்போதே நான் சொல்லியிருந்தேன் என்றபோதிலும் இப்போது எனது பெயரும் அந்த அழைப்பிதழில் இருக்கிறது.

யாரையேனும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக அனுப்பலாம் என்று கருதினாலும்,பட்டியலில் காணும் தலைவர்களில் சிலர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மீதோ,அதன் தொடர்ச்சியாக ஈழ மக்கள் படும் துயரம் குறித்தோ,அந்த மக்களுக்கு ஓர் நிரந்தர அமைதியான தீர்வைத் தேடித் தர வேண்டும் என்ற அக்கறையோ அற்றவர்கள் என்பதோடு,திதி திவசம் போல் கருதிக்கொண்டு அதில் கலந்து கொள்வதாகவே நான் புரிந்து கொள்கிறேன்.

இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் யாரும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்"என்று அண்ணாமலை பெயர் குறிப்பிடாமல் அறிவித்துள்ளார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தியில், "தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சென்னையில் மே 14 ஏற்பாடு செய்துள்ள முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கத்தில் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் பெயரும் அழைப்பிதழில் பதிவிட்டு இருப்பதால் அந்த கருத்தரங்க நிகழ்வில் நமது அமைப்பு சார்பில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம்"என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கருத்தரங்கு அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள மாணவர் கூட்டமைப்பு தொடர்பு எண்களில் ஒன்றுக்கு அலைபேசி செய்தோம்.

மறுமுனையில் பேசிய லயோலா மணி, "எனது பெயர் இந்தக் கருத்தரங்கின் வரவேற்புரை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை வருவது எனக்கே தெரியாது. நானும் இந்த கருத்தரங்கத்தை புறக்கணிக்கிறேன்" என்று நம்மிடம் தெரிவித்தார்.

"விடுதலைப்புலிகளால் வீரமிக்க காவலராக கருதப்பட்ட உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் சமீபகாலமாகவே ஒன்றிய பாஜக அரசின் துணையோடுதான் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பதை கருத்தில் கொண்டு பாஜக அரசோடு அனுசரணை போக்கில் செயல்பட்டு வருகிறார். இந்த வகையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கருத்தரங்கு கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்கிறார்கள் இந்த கருத்தரங்கை பற்றி அறிந்தவர்கள்.

ஆரா

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

செவ்வாய் 10 மே 2022