மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 மே 2022

இரவு ரோந்து பணிக்கு செல்பவர்களுக்கு சிறப்புப்படி: காவல்துறைக்கான அறிவிப்புகள்!

இரவு ரோந்து பணிக்கு  செல்பவர்களுக்கு சிறப்புப்படி: காவல்துறைக்கான அறிவிப்புகள்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று(மே 10) காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

முதல்வரின் துறையான காவல்துறை மீதான மானியக் கோரிக்கையின் போது பேசிய முதல்வர் ஸ்டாலின் 78 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

காவலர் நலன், காவல்துறை வாகனங்கள், குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

அதில்,

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களை கண்காணிப்பதும், மாநிலம் முழுவதும் 55 சுங்கச்சாவடிகள் மற்றும் அண்டை மாநில எல்லையில் அமைந்துள்ள 50 வாகன சோதனை சாவடிகளுடன் இணைந்து தானியங்கி நம்பர் பிளேட் கேமராக்களை நிறுவுவதன் மூலம் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் வெளிமாநில குற்றவாளிகள் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர் போன்றவர்களின் நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டுவர உதவிடும் வகையில் தேசிய அளவில் ஒரு முன்னோடி திட்டமாக ஒருங்கிணைந்த சுங்கச்சாவடி கண்காணிப்பு மையம் 9 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

நடமாடும் ஆளில்லா விமான (ட்ரோன்) அலகு காவல் படை பிரிவு ரூ.1.20 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படும். கள காவல் அதிகாரிகளுக்கு உதவும் வகையிலும், குற்றம் நிறைந்த பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளும் வகையிலும் ஒவ்வொரு மண்டலத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னை பெருநகர காவலில் 3 வழித்தடங்களில் போக்குவரத்து ஒழுங்குமுறை கண்காணிப்பு மண்டலம் அமைக்கப்படும்.

போதைப்பொருள் தடுப்பு , சைபர் க்ரைம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் சாலை விழிப்புணர்வு போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு என தொடர் செலவினமாக 2 கோடி ரூபாய் வழங்கப்படும்.

இளம் மற்றும் முதல் முறை குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ‘பறவை’ என்னும் முன்னோடி திட்டம் 1 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

இணையவழி குற்றங்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க இணைய எச்சரிக்கை செயலி மற்றும் இணைய பாதுகாப்பு முகப்பு 30 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க ‘பருந்து’ என்ற செயலி 33 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

காணாமல் போன வாகனங்களை கண்டறியும் வகையில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு அமைப்பு என்ற செயலி 2 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போதை பொருள் நுண்ணறிவு பிரிவுடன் இணைத்து போதை பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு மறு சீரமைக்கப்படும்.

சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி கல்லூரி வண்டலூர் அருகே உள்ள உயர் காவல் பயிற்சி வளாகத்திற்கு மாற்றப்படும்.

குற்ற வழக்குகள், மதுவிலக்கு வழக்குகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விடுதல் முறை எளிமையாக்கப்படும்.

காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரையிலானவர்களுக்கு இடர்படி தொகை 800 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாகவும், துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கு 900 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாகவும் உயர்த்தி கடந்த நிதி ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது காவல்துறையில் உள்ள தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் அனைத்து ஆளிநர்களுக்கும் வழங்கப்படும். இதற்கான தொடர் செலவினம் 63 லட்சம் ரூபாய் ஆகும்.

திட்டமிட்ட குற்றம் நுண்ணறிவு பிரிவு ஆளிநர்களுக்கும் 5 சதவிகிதம் சிறப்பு ஊதியம் வழங்கப்படும்.

காவல் துறையினருக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளதால் அவர்களுக்கு இழப்பு மற்றும் விபத்தின் காரணமாக ஏற்படும் நிரந்தர முழு உடல் உழைப்பிற்கு வருடாந்திரம் வழங்கப்படும் மொத்த காப்பீட்டு தொகையான ரூபாய் 30 லட்சம் ரூபாயிலிருந்து 60 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

காவலர்களுக்கான மகிழ்ச்சி என்ற செயலி திட்டம் 53 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையை திறம்பட மென்பொருள் மூலம் கண்காணிக்க 46 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

பெண் காவலர்களுக்கான பணி - வாழ்க்கை சமநிலை குறித்த பயிற்சியினை ‘ஆனந்தம்’ என்கிற திட்டத்தின் மூலமாக வழங்கப்படும். இதற்காக 34 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

தூத்துக்குடி, ஈரோடு மற்றும் ஓசூர் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள 20 காவல் நிலையங்களுக்கு 2 கோடி ரூபாய் செலவினத்தில் நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளில் உள்ள 278 காவல் நிலையங்களுக்கும் தலா ஒரு இருசக்கர ரோந்து வாகனம் 3 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

கடலோர ரோந்து பணிக்காக கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு வழங்கப்பட்ட இயந்திரம் மற்றும் விரைவு இடைமறிப்பு படகுகள் பராமரித்தல் செலவீனமாக 5 கோடி ரூபாய் வழங்கப்படும்.

நுண்ணறிவு பிரிவின் 4 அலகுகளில் கள பணியாற்றும் காவலர்களுக்கு 200 இருசக்கர வாகனங்கள் 3.92 கோடி செலவில் வழங்கப்படும்.

முதலமைச்சரின் தனிப் பாதுகாப்பு பிரிவிற்கு உடனடியாக ஜாமர் கருவி பொருத்தப்பட்ட இரண்டு வாகனங்கள் 4.48 கோடி ரூபாயில் கொள்முதல் செய்யப்படும்.

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை பராமரித்திட 2.50 கோடி ரூபாய் வழங்கப்படும்.

சென்னை பெருநகர காவல் போக்குவரத்து பிரிவிற்கு 6 நான்கு சக்கர மற்றும் 6 இரண்டு சக்கர வாகன இழுவை வாகனங்கள் 2 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும்.

மாநில காவல் தலைமையகத்தில் சமூக ஊடக மையம் 13 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

சேலம், திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் திருச்சி மாநகரங்களில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) பதவி ரூ.1.76கோடி செலவில் உருவாக்கப்படும்.

சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் கைப்பற்றிய சிலைகளை ஆய்வு செய்ய ஒரு காப்பாளர் பதவி 6 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

மாநிலத்தில் உள்ள 11 காவல் சரகங்களிலும் தலா ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் பதவி ரூ.3.70 கோடி செலவில் உருவாக்கப்படும்.

கீழ்ப்பாக்கம் துணை காவல் ஆணையருக்காக ரூ.3.16 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உயர் நீதிமன்ற காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும்.

கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் காவலர்களுக்கு 203 புதிய குடியிருப்புகள் 59.12 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் வளாகத்தில் புதிதாக 25 குதிரை லாயங்கள் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

காவலர் குடியிருப்புகளில் ஏற்பட்ட பழுதுபார்ப்பு பணிகளுக்காக சிறப்பு நிதியாக 20 கோடி ரூபாய் வழங்கப்படும்.

அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களிலும் இரு வாரங்களுக்கு ஒரு முறை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும்.

மாணவர்கள் மற்றும் காவலர்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் சமுதாயத்தில் மாணவர்களை செம்மைபடுத்தும் வகையில், ‘மாணவர் காவல் படை திட்டம்’ சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு 2 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படும்.

மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு கணினிகள் மற்றும் துணைக்கருவிகள் 23 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

மக்களுக்கு விரைவாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் கடவுச்சீட்டுகள் வழங்க பழைய கையடக்க கணினிகளுக்கு பதிலாக 1850 புதிய 6 அங்குல கையடக்க கணினிகள் 4.70 கோடி ரூபாய் செலவில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கப்படும்.

அவசர உதவிகளுக்காக 100/112 எண்ணை தொடர்பு கொள்ளும்போது பொதுமக்களின் அழைப்புகளுக்கு விரைவாக பதில் அளிப்பதற்காக SPMCR திட்டத்தின் கீழ் 1200 எண்ணிக்கையிலான சமீபத்திய ஸ்மார்ட்போன் அடிப்படையிலான சாதனங்களை வாங்கி மாவட்டங்கள் நகரங்களில் ரோந்து செல்லும் வாகனங்கள்/ காவல்துறை அதிகாரிகளுக்கு 2.01 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

இரவு பணிகளுக்குச் செல்லும் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இரவு ரோந்து பணிக்கு செல்லும் அனைத்து காவல் ஆளுநர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் வரையிலான அதிகாரிகளுக்கு சிறப்பு படியாக மாதம் 300 ரூபாய் வழங்கப்படும்.

ஏற்கனவே வார விடுமுறை அளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதைத் தொடர்ந்து தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும். இதனால் 10,508 பேர் பயன் அடைவார்கள்.

இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு பலரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்கான காரணங்களை அறியும் பொருட்டு மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்படும்.

தடய அறிவியல் துறை

கோயம்புத்தூர் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூபாய் 7.80 கோடி செலவில் தடயவியல் மரபணு ஆய்வு பிரிவுஉருவாக்கப்படும்.

தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு புதிய தடய அறிவியல் பிரிவு ரூ.1.07 கோடி செலவில் உருவாக்கப்படும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் தொடர்பான வழக்குகள் சம்பந்தப்பட்ட சான்று பொருட்கள் ஆய்வு செய்ய பிரத்யேக அலகு ஒன்று சென்னை தலைமை ஆய்வகத்தில் ரூ.3.71 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

சென்னை தலைமை ஆய்வகத்தின் ஆய்வு திறனை வலுப்படுத்த எல்சி-எம்எஸ் எனும் அதி நவீன ஆய்வு கருவி வழங்கப்படும்.

தீயணைப்பு துறை

தீயணைப்பு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடர்படி 200 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். உதவி மாவட்ட அலுவலர் மற்றும் மாவட்ட அலுவலர் நிலையில் உள்ள பணியாளர்களுக்கு 900 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

தீயணைப்பு பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மிகை பணி ஊதியத்தை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக 1.01 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

மாவட்ட தலைமையகத்தில் உள்ள நிலை அலுவலர் பதவிகளை உதவி மாவட்ட அலுவலர் தரத்திற்கு தரம் உயர்த்தப்படும்.

தீ ஆணையம் ஒன்று புதிதாக அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

அதுபோன்று வரும் காலங்களில் பாஸ்போர்ட் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை கட்டாயம் ஏற்படுத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

செவ்வாய் 10 மே 2022