மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 மே 2022

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்

வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம் ஆன்லைனில் வந்தது.

"திமுக ஆட்சி அமைந்து ஒரு வருடம் ஆகி விட்ட நிலையில் புழுக்கத்தில் இருந்த அமைச்சர்கள் எல்லாம் இப்போது சற்று புன்னகைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்" என்ற ஒரு குறிப்பை ஒரு ஸ்மைலி யோடு செண்ட் செய்திருந்தது.

இந்தக் குறிப்புக்கு உரை எழுதத் தொடங்கியது வாட்ஸ்அப்.

"மே 7-ஆம் தேதி திமுக ஆட்சி அமைந்து ஒரு வருடம் நிறைவு பெற்றுவிட்டது. நூறாண்டில் செய்த சாதனையை ஓராண்டில் செய்துவிட்டோம் என்று அமைச்சர்கள் வெளியே சாதனைச் சிந்து பாடிக்கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே புழுக்கத்தில் தான் இருக்கிறார்கள்.

கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு அமைச்சர்களும் அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் அமைச்சர்களின் அதிகாரம் என்ன என்பதை இந்த ஒரு வருடத்தில் அதிகாரிகள் ரொம்பவே சோதித்து விட்டனர்.

மாவட்ட கலெக்டர், எஸ்பி போன்ற அதிகாரிகள் சொன்னது தான் நடந்து கொண்டிருக்கிறதே தவிர அமைச்சர்கள் தங்கள் கட்சியினருக்காக, பொது மக்களுக்காக நியாயமான தலையீடு செய்தால் கூட அது நடந்தது இல்லை என்பதுதான் நிலவரம்.

'நமக்கு எதுக்கு வம்பு. மேல என்ன சொல்றாங்களோ அதை செஞ்சுட்டுப் போவோம்' என்று அமைச்சர்களில் ஒரு தரப்பினர் இதற்கு பழகிவிட்டனர். ஆனால் கலைஞர் காலத்தில் அமைச்சராக இருந்த முக்கியமான சீனியர்கள் அப்போது தங்களுக்கு இருந்த அதிகாரத்தையும் இப்போது தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தையும் நினைத்துப் பார்த்து வெளியில் சொல்ல முடியாமல் வெம்பிக் கொண்டி ருக்கிறார்கள்.

மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் தனக்குப் பொறுப்பு மாவட்டமாக நியமிக்கப்பட்ட மாவட்டத்தில் தனது துறை சார்ந்த ஒரு விஷயத்துக்காக தனக்கு கீழே இருக்கும் அதிகாரியிடம் பேசியிருக்கிறார். ஆனால் அமைச்சர் சொன்னது மூன்று மாதங்கள் ஆகியும் நடக்கவில்லை. 'கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போது என்னோட பார்வைக்கு பயந்து அதிகாரிகள் வேலை செய்வாங்க. ஆனா இப்போ வாய்விட்டு கேட்டா கூட செய்ய மாட்டேங்குறாங்க' என்று அந்த அமைச்சர் தனது பர்சனல் உதவியாளரிடமே புழுக்கத்தை கொட்டியிருக்கிறார். இந்த அளவுக்கு அதிகாரிகளுக்கு முதல்வர் சுதந்திரம் கொடுத்திருக்கிறார் என்பதுதான் அமைச்சர்களின் ஆதங்கம்.

இன்னொரு உதாரணம் ஓர் அமைச்சர் தனது கட்சி நிர்வாகி ஒருவரின் பிரச்சினைக்காக மாவட்ட எஸ்பியிடம் பேசியிருக்கிறார். கொஞ்ச நேரத்தில் அமைச்சருக்கு சென்னையிலிருந்து போன். 'கலெக்டர், எஸ்பி, ஐஜின்னு யாருகிட்டயும் நீங்க இதை செய் அதை செய் என்று சொல்லக்கூடாது. உங்களுக்கு ஏதாவது ஆகணும்னா இங்க சொல்லுங்க. இங்க இருந்து நாங்க சொல்றோம்' என்ற அந்த

சென்னை போனில் தகவல் சொல்ல ஆடிப் போய்விட்டார் அமைச்சர்.

இந்த சம்பவம் நடந்து சில நாட்களில் அந்த அமைச்சர் ஒரு அரசு விழாவில் போலீஸ் உயரதிகாரி ஒருவரை சந்தித்திருக்கிறார். அப்போது அந்தப் போலீஸ் அதிகாரி அமைச்சருக்கு சல்யூட் வைத்த விதமே அந்த அமைச்சரை ஜாடைமாடையாக இன்சல்ட் செய்வது போல இருந்தது. இதையும் அந்த அமைச்சரே தனக்கு நெருக்கமான ஒரு நண்பரிடம் மனம் விட்டு குமுறியிருக்கிறார்.

இப்படியாக கடந்த ஒரு வருடம் முழுவதுமே அமைச்சர்களுக்கு சோதனையான காலம்தான். இந்த நிலையில்தான் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவடைய இருக்கும் சூழ்நிலையில்... அனைத்து அமைச்சர்களுக்கும் முதல்வர் அலுவலகத்திலிருந்து ஒரு தகவல் சென்றுள்ளது.

'உங்கள் மாவட்டத்தில் கலெக்டர், எஸ்பி ஆக யாரை நியமிக்கலாம் என்று அதிகாரிகளின் பெயரை பட்டியல் கொடுங்கள்' என்பதுதான் அந்தத் தகவல்.

அதிகாரிகள் தங்களை மதிக்காதது பற்றி பல்வேறு அமைச்சர்களிடம் இருந்தும் முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்திற்கு தகவல்கள் சென்றுள்ளளன. அமைச்சர்களின் சாதாரண உத்தரவுகளை கூட அதிகாரிகள் நிறைவேற்றாத தன்மையால் கட்சியின் கீழ் நிலை நிர்வாகிகள் வரை அதிருப்தி நிலவுகிறது என்ற தகவலும் முதல்வருக்கு சென்றுள்ளது.

இந்த அடிப்படையில்தான் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்களுக்கு தோதாக இருக்கக்கூடிய அதிகாரிகளை நியமிக்கலாம் என்று முதல்வர் முடிவு செய்திருக்கிறார். இந்த நடவடிக்கை மூலம் அமைச்சர்களுக்கு கட்டுக்கடங்காத சுதந்திரம் கொடுக்கப்பட்டு விடக்கூடாது என்பதிலும் முதல்வர் எச்சரிக்கையாக இருக்கிறார். அதனால் அமைச்சர்களிடம் கேட்டு வாங்கப்படும் அதிகாரிகள் பட்டியல் போக, ஒவ்வொரு அமைச்சருக்கும் 3 அதிகாரிகள் அடங்கிய பட்டியலை கொடுத்து அவர்களில் தங்களுக்கு இணக்கமாக செயல்பட கூடிய அதிகாரிகள் யார் என்பதை அமைச்சர்களையே தேர்ந்தெடுக்கச் சொல்லி அவர்களை நியமிக்கலாம் என்ற ஆலோசனையும் முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

இந்தப் பின்னணியில் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் உள்ளிட்ட அதிகாரிகள்... அதேபோல சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் வரை மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல் கோட்டை வட்டாரத்தில் இருந்து கசிகிறது" என்ற மெசேஜுக்கு சென்று கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

செவ்வாய் 10 மே 2022