மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 மே 2022

வெளிமாநிலங்களுக்கு மின் விற்பனை: செந்தில் பாலாஜி

வெளிமாநிலங்களுக்கு மின் விற்பனை: செந்தில் பாலாஜி

தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவது தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று (மே 9) ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

செந்தில் பாலாஜி தலைமையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலகத்தில் இந்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர்கள், தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழகத்தில் உச்சபட்ச மின் தேவையான 17,563 மெகாவாட் 29.04.2022 அன்று எந்தவித மின் தடங்கலுமின்றி பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. அன்று மின் நுகர்வோர் உபயோகப்படுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவு மட்டும் 38.9 கோடி யூனிட்கள் ஆகும்.

தமிழகத்தில் நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவை. ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு இதுவரை நாளொன்றுக்கு 48,000 மெட்ரிக் டன் நிலக்கரி முதல் 50,000 மெட்ரிக் டன் நிலக்கரி வரை மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் முதல்வர் ஒன்றிய அரசுக்குக் கூடுதல் நிலக்கரி வேண்டி கடந்த மே 26ஆம் தேதி எழுதப்பட்ட கடிதத்தின் தொடர்ச்சியாக ஒன்றிய அரசால் தற்போது நாளொன்றுக்கு 57,000 மெட்ரிக் டன் அளவுக்கு நிலக்கரி கிடைக்கப் பெறுகிறது. இதுவும் தமிழகத்துக்குக் கிடைக்கக்கூடிய 72,000 மெட்ரிட் டன்னை விட 15,000 டன் குறைவாகும்.

இருந்த போதிலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்குச் சொந்தமான 4,320 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையங்களிலிருந்து 4,265 மெகாவாட் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி அன்று உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் 2020 -2021ஆம் ஆண்டில் கொரோனா காரணமாக 10694.3 கோடி யூனிட்டுகளாக இருந்த மின் நுகர்வு 2021- 22ஆம் ஆண்டில் 11626.7 கோடி யூனிட்டுகளாக அதிகரித்திருக்கிறது. இது 8.7 சதவிகிதம் அதிகமாகும்.

உதாரணத்துக்கு 2021 செப்டம்பர் 16ஆம் தேதி சென்னையில் மட்டும் 7.67 கோடி யூனிட்டுகளாக இருந்த மின் நுகர்வு 2022 மே 4ஆம் தேதியன்று 8.13 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இத்தகைய சவால்களை எதிர்கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு நாள்தோறும் தடையில்லா மின்சாரம் வழங்கியதோடு மட்டுமல்லாமல் கடந்த மே 1ஆம் தேதியன்று 1.44 லட்சம் யூனிட்டுகளையும், கடந்த மே 8ஆம் தேதி 4.5 லட்சம் யூனிட்டுகளையும் யூனிட்டுக்கு 12 ரூபாய் வீதம் வெளிமாநிலங்களுக்கு வெளிச்சந்தையில் விற்றிருக்கிறது.

மேலும் கூடுதல் சிக்கன நடவடிக்கையாகக் காற்றாலைகள் மற்றும் சூரிய ஒளியின் மூலம் கிடைக்கப்பெறும் மாசில்லா பசுமை மின்சாரத்தினை முழு அளவில் பயன்படுத்தும் பொருட்டு தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல்மின் நிலையங்களில் உள்ள மின் உற்பத்தி அலகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு மாலை மற்றும் இரவு நேர உச்சபட்ச மின் தேவையினை ஈடு கட்டுவதற்கு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.

இதனால் உபயோகிக்கப்படும் நிலக்கரியின் அளவு குறைக்கப்படுவதுடன் குறைந்த செலவில் மரபு சாரா எரிசக்தி ஆதாரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் மின்சாரத்தினை முழுமையாகப் பயன்படுத்த முடியும்.

எனவே தமிழகத்தில் மின்வெட்டு போன்ற மாய தோற்றத்தை பொது மக்களிடையே ஏற்படுத்துவது, உண்மைக்குப் புறம்பான செய்தி என்பதோடு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து தங்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

கடந்த இரு வாரங்களில் தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து இதர பகுதிகளில் பெய்த பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கடும் கோடை மழையினால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உள்கட்டமைப்பில் மிகுந்த சேதங்கள் ஏற்பட்டன.

இதுவரையிலும் 80 மின்னல் தடுப்பான்களும், 48 மின் விநியோக மின்மாற்றிகளும், 14 மின்சார மின்மாற்றிகளும், 76 மின்னழுத்த மின்மாற்றிகளும், 74 பிரேக்கர்களும், 24 காற்று திறப்பான்களும், 1,240 இடங்களில் இன்சுலேட்டர்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில் 370க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் சேதமடைந்தன.

இவை அனைத்தும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்குச் சீரான மின்சாரம் வழங்கப்பட்டது.

தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து தேர்வுகளும் முடிவடைந்தவுடன் பராமரிப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதற்குத் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த நிதியாண்டில் மறுசீரமைக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ் சுமார் 26,300 விநியோகம் மின்மாற்றிகளும், 1300 கிலோ மீட்டர் நீளத்திற்கு உயர்மின் அழுத்த மின் பாதை மற்றும் 3,000 கிலோமீட்டர் நீளத்திற்கு தாழ்வழுத்த மின் பாதைகளும் நிறுவப்பட உள்ளன. இதனால் கணிசமான மின் பாதைகளில் ஏற்பட்டுவரும் இழப்புகள் குறைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

-பிரியா

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

செவ்வாய் 10 மே 2022