மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 மே 2022

சிறப்புக் கட்டுரை: ஷவர்மாவுக்கு தடை - அவசியமா... அவசரமா?

சிறப்புக் கட்டுரை: ஷவர்மாவுக்கு தடை - அவசியமா... அவசரமா?

- விக்ரம், ஹாங்காங்

கேரள மாநிலத்தில் ‘ஷவர்மா’ சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கே ஷவர்மாவுக்கு தடை விதிக்கப்பட்டது, இது நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு இடங்களிலும் ஷவர்மா கடைகளில் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு கடைகள் உணவுப் பாதுகாப்பு FSSAI விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமல், தரமற்ற முறையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைகளுக்கு சீல் வைத்து இருக்கிறது அரசு.

“மேலைநாட்டு உணவு வகையான ஷவர்மா அந்த நாட்டின் மக்களின் தட்பவெப்ப நிலைக்குப் பொருந்தும்; பொதுமக்கள் ஷவர்மா போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் ஷவர்மா கடைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு அறிவுரை வழங்கி, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவைப் போன்று தமிழகத்திலும் ஷவர்மாவுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்று தமிழகத்தின் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

வீட்டின் சமையற்கட்டுக்கு வாரத்தில் ஒருவேளை விடுமுறை விட்டு வெளியே சாப்பிடுவதும் சினிமா செல்வதுமே மிக பெரிய பொழுதுபோக்காக 90களில் நம் சமூகத்தில் இருந்து வந்தது. பின்னர் குறிப்பாக 2000க்குப் பிறகு ஏற்பட்ட வணிக மற்றும் பொருளாதார வளர்ச்சி நம் வாழ்க்கை முறையையே மாற்றி போட்டது. இதே காலத்தில் ஏற்பட்ட கூட்டுக் குடும்பங்களின் சரிவு, ஆண் பெண் இருவரும் வேலைக்குச் செல்லும் நிலை, 90களின் தொடக்கத்தில் நம் வீட்டு நடு ஹாலில் வந்து ஆட்சி செய்ய ஆரம்பித்த டிவியின் ஆதிக்கம், குடும்பத்தில் குழந்தைகளின் அதிகாரம், அண்டை வீட்டார், சுற்றம் மற்றும் நட்புக்கு முன்னால் கெளரவம் காட்ட வேண்டும் என்று ஏற்பட்ட சமூக அழுத்தம் (சோஷியல் பிரஷர்) முதலியவற்றால் வீட்டில் உண்பதைவிட வெளியில் சென்று ஹோட்டலில் உண்பதும். `ஸ்விக்கி’, `ஸோமேட்டோ’ போன்ற வீட்டுக்கு உணவு விநியோகம் செய்யும் செயலிகளில் வாங்கியும் உண்ணும் பழக்கமும் நம் அன்றாட வாழ்க்கை முறையானது.

சில வருடங்களுக்கு முன்பு குளிர்பானத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட ரசாயனம் இருப்பதாகவும், ஒரு பிரபல நூடுல்ஸ் பாக்கெட்டுகளிலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட ரசாயனம் இருப்பதாகவும் சர்ச்சைகள் கிளம்பி மிக சர்ச்சையாகி, சில காலம் தடை விதிக்கப்பட்டு, பின்னர் அவை இப்போது கடைகளில் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன.

உணவைப் பாதுகாக்கும் விதிமுறைகள் பல ஆண்டுகளுக்கும் முன்பே வகுக்கப்பட்டு, அவை சுகாதார ஆய்வாளர்கள் கட்டுப்பாட்டில் நிர்வாகம் செய்யப்பட்டும் வந்தது. முன்பெல்லாம் உள்ளாட்சி அமைப்புகள் உணவகங்கள், தேநீர் கடைகள், சர்பத் மற்றும் ஐஸ்க்ரீம் கடைகள் போன்ற உணவுத் தொழில் செய்யும் கடைகளுக்கு உரிமம் வழங்கி, அனுமதி அளித்து அதைக் கண்காணித்தும் வந்தன.

2006இல் சர்வதேச நாடுகளில் உள்ளதுபோல் மருந்து கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் போல மிக முக்கியமான உணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்டம் Food Safety and Security Act 23 ஆகஸ்ட் 2006 ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்தது. முதலில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் பதிவுடன் தொடங்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் வந்தது. பின்னர் நிறுவனங்கள் படிப்படியாக தரம் மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டு கால அவகாசமும் அளிக்கப்பட்டது.

இதன் நோக்கமும் அதன் பின்னால் உள்ள விஞ்ஞானமும் புரியாமல் சான்றிதழ் மட்டுமே பெற்று ஒரு சடங்காக நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களால் உண்பவர்களின் உயிரையே அச்சுறுத்தும் நோய்களும் மரணமும் வர வாய்ப்புகள் உள்ளன.

மருந்துக்கடைகளில் படித்த மருந்தாளுநர் இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்வதைப் போல, உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களிலும், உணவு தரம் மற்றும் பாதுகாப்புப் பயிற்சி பெற்று இருப்பவர்களைக்கொண்டு மட்டுமே அனுமதி கோரும் முறையை நடைமுறைக்குக் கொண்டு வரலாம். இந்தப் பயிற்சியில் உணவு தயாரிப்பில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறையைச் சொல்லிக் கொடுக்கலாம். இதை ஏற்கனவே தொழிலில் உள்ளவர்களுக்கும் நினைவூட்டும் (Refresher Course) பயிற்சியாகவும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு (உதாரணத்துக்கு இரண்டு வருடங்களுக்கு) ஒருமுறை பயிற்சி கட்டாயம் என்றும் நடைமுறைப்படுத்தலாம்

வள்ளுவரின் வழி நடக்கும் இந்த அரசு,

`நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்ற குறளில் சொல்லியதுபோல், இந்தப் பிரச்சினைக்கான காரணம் என்ன... அதைத் தீர்க்கும் வழிகள் என்ன என்பதை ஆராய்ந்து செயல்படுவதை தவிர்த்து, ‘மதுரை விஞ்ஞானி’ போல “நம் தட்பவெட்ப நிலைக்கு ‘ஷவர்மா’ பொருந்தாது. இதைத் தவிர்க்க வேண்டும்; தடை செய்வோம்” என்று நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவசரமாக கருத்தும் அறிவுரை சொல்வதும் இதற்கு தீர்வாகாது.

இந்தப் பிரச்சினையை விஞ்ஞான முறையில் ஆய்வு செய்தால், இந்தப் பிரச்சினையின் மூலம் மாமிசம், குளிர்சாதனப் பெட்டியில் சரியான தட்பவெட்ப நிலையில் வைத்து பாதுகாக்கப்படாததே என்பது புலப்படும். இது மட்டுமல்ல... குளிர் சாதன வசதி தேவைப்படும் பால், வெண்ணெய், பனீர், தோசை கடைகள்... குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் கிடங்குகளை மின்சாரத்தை மிச்சம் செய்து லாபம் பார்க்க, அதைச் சரியாக இயக்குவது இல்லை என்பதும் நாடறிந்த ரகசியம்.

நடைமுறையில் இருக்கும் மேம்படுத்தப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்டம் Food Safety and Security Act 2021 கண்டிப்புடன் மருந்துக்கடைகளை அடிக்கடி ஆய்வு செய்வது போல உணவகங்கள், கடைகள், உணவு தயாரிக்கும் இடங்களில் அடிக்கடி சோதனைகள் நடத்தி மிக கண்டிப்புடன் நடைமுறையில் அமல்படுத்தி, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது மக்கள் நல்வாழ்வுத் துறையின் கடமை. இதை அவர்கள் ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்பதையே இந்த அரசிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

செவ்வாய் 10 மே 2022