மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 மே 2022

ஆர்.ஏ.புரம் மக்களுக்கு மயிலாப்பூர் மந்தைவெளியில் வீடு!

ஆர்.ஏ.புரம் மக்களுக்கு மயிலாப்பூர் மந்தைவெளியில் வீடு!

ஆர்.ஏ.புரம் பகுதி மக்களுக்கு மந்தைவெளி, மயிலாப்பூர் பகுதிகளில் வீடுகள் ஒதுக்க அரசு முடிவெடுத்திருப்பதாகச் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கோவிந்தசாமி நகர் உள்ளது. இங்கு உள்ள இளங்கோ தெரு பக்கிங்காம் கால்வாயை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி 259 வீடுகளை உடனடியாக அகற்ற நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. வீடுகள் இடிக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது. அப்போது நீர்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் அப்பகுதிகளில் நுழைய விடாமல் மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

இந்த சூழலில் தனது வீடு இடிக்கப்படுவதைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த கண்ணையா (60), நேற்று(மே 8) திடீரென மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றித் தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (மே 9) காலை உயிரிழந்தார்.

இதனைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கிரீன்வேஸ் சாலை ரயில் நிலையம் அருகே போராட்டம் நடத்தினர். வீடுகள் இடிப்பைக் கைவிட வலியுறுத்தியும் கண்ணையாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால், பாதுகாப்புப் பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். தடுப்பு வேலிகளை அமைத்து போராட்டக்காரர்களை போலீசார் கட்டுப்படுத்தினர். அதுபோன்று, உயிரிழந்த கண்ணையாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டது.

இந்தசூழலில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தை மதிமுக சார்பில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தேமுதிக சார்பில் பிரேமலதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் உள்ளிட்டோர் பார்வையிட்டதுடன் கண்ணையா குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில், "ஒரு தனி நபருக்காக, 60,70 ஆண்டுகளாக இருந்த குடியிருப்புகளை அகற்றுவது எந்த வகையில் நியாயம் என்று மக்கள் கேட்கிறார்கள். இங்கு ஒரு சேட்டு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடம் கட்டுகிறார். அவருக்கு என்ட்ரன்ஸ் வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காக, ஏற்கனவே உள்ள 250 வீடுகளை அப்புறப்படுத்துகிறார்கள் என்றால் எந்தவிதத்தில் நியாயம் இருக்கிறது.

ஓராண்டில் நூறாண்டு சாதனை என்கிறார்கள். அப்படி எந்த சாதனையை இந்த ஒரு வருடத்தில் மக்கள் பார்த்துவிட்டார்கள். ஒரே பேப்பரில் 100 விளம்பரத்தைத் தான் இவர்களது சாதனையாகப் பார்க்க முடிகிறது. தமிழ் மக்களே இன்று அகதிகள் போல் ரோட்டில் நிற்கிறார்கள். இது மிகவும் வேதனையாக உள்ளது. இது அரசு இடம், என்றால் ஏன் வீடு கட்ட அனுமதித்தீர்கள். இத்தனை வருஷம் அகற்றாமல் இப்போது அகற்றவேண்டியதற்குக் காரணம் என்ன.

நீர்நிலை ஆக்கிரமிப்பு இடம் என்று சொல்கிறார்கள், இதே நீர் நிலைக்கு எதிராக உள்ள பகுதிகளில் பட்டா கொடுத்திருக்கிறார்கள். இது மட்டும் நியாயமா?” என்று கேள்வி எழுப்பினார்

அதுபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷணன் கூறுகையில், "இங்கு வசிக்கும் மக்களை அனாதைகளைப் போல அகதிகளைப் போல நடத்தி இருக்கிறார்கள். நீதிமன்றம் உத்தரவிட்டு மக்களை வெளியேற்ற முடியும் என்றால் இங்கு அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.

இனி வீடுகள் இடிக்கப்பட்ட கோவிந்தசாமி நகரில் புதிதாகக் கட்டப்படும் தொழிலதிபர்களின் குடியிருப்பில் மக்களைக் குடியேற்றம் செய்வோம். இதனால் வரக்கூடிய விளைவுகளை சிபிஐ(எம்) எதிர்கொள்ளும்.

முதலமைச்சர் 10 லட்ச ரூபாய் அறிவித்தது போதுமானதல்ல 50 லட்ச ரூபாய் வழங்க வேண்டும். உயிரிழந்த கண்ணையாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்.ஏ.புரம் மக்களைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அரசின் செயல் தேவையற்றது. இடித்த வீடுகளுக்கு இழப்பீடு கொடுத்து மீண்டும் கட்டிக் கொள்ள வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இது ஆக்கிரமிப்பு கிடையாது. ஆக்கிரமிப்பு என்ற வார்த்தையையே அரசு பயன்படுத்தக்கூடாது. ஆக்கிரமிப்பு செய்தபோது என்ன செய்து கொண்டிருந்தீர்கள். முதல்வர் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்திச் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம். மாற்று இடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. என்ன தவறு செய்ததற்காக மக்களை மாற்று இடத்துக்கு மாற்றுகிறீர்கள். நீதிமன்றம் எது எதற்கோ உத்தரவு போடுகிறது. உடனே இதற்கு மட்டும் நடவடிக்கை எடுப்பதற்கான அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர்களும் கேள்வி எழுப்பினர்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “தீக்குளித்து இறந்தவர் குடும்பத்திற்கு அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மயிலாப்பூரில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்திருக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடிய பணியை மேற்கொள்ளும்போது முன்கூட்டி அந்த பகுதி மக்களுக்கு மறு குடியமர்வு செய்யக் கூடிய இடம் குறித்து அவர்களுடைய கருத்துகள் கேட்கப்படும் .

அவர்களுக்கான புதிய இடத்தில் தேவைப்படும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் மறு குடியமர்வு செய்யப்படுவார்கள். இதற்காக மறுகுடியமர்வு கொள்கை ஒன்று அனைத்து மக்கள் நலன் சார்ந்த அம்சங்களைக் கொண்டு விரைவில் அதற்கு உரிய விதிமுறைகள் வகுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், “தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மந்தைவெளி மயிலாப்பூர் பகுதிகளில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடுகளில் அவர்களுக்கு நிச்சயமாக வீடுகள் ஒதுக்கித் தர அரசு முடிவெடுத்து இருக்கிறது” என்று கூறினார்.

-பிரியா

வேல்முருகனுக்கு வீசிய வலை: பாஜகவில் இணைந்த முன்னாள் மனைவி!

4 நிமிட வாசிப்பு

வேல்முருகனுக்கு வீசிய வலை: பாஜகவில் இணைந்த முன்னாள் மனைவி!

ரெய்டு நடக்கும் நேரம்: சுட்டிக்காட்டும் ப.சிதம்பரம்

4 நிமிட வாசிப்பு

ரெய்டு நடக்கும் நேரம்: சுட்டிக்காட்டும் ப.சிதம்பரம்

ஹிஜாப்பை கழற்றச் சொன்ன தேர்வு அதிகாரி: நடந்தது என்ன?

5 நிமிட வாசிப்பு

ஹிஜாப்பை கழற்றச் சொன்ன தேர்வு அதிகாரி: நடந்தது என்ன?

திங்கள் 9 மே 2022