சட்டமன்றத்தில் சபரீசன்


முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று ஓர் ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி நேற்று மே 7ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.
சட்டமன்றத்தில் திமுக ஆட்சியின் நிறைவை ஒட்டி சில கருத்துக்களை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், சில புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
அவை உறுப்பினராக அல்லாதவர்கள் பாஸ் பெற்றுக்கொண்டு சட்டமன்றத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்க்க வழி உள்ளது. இந்த வகையில்
நேற்று சட்டமன்றத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மாப்பிள்ளை சபரீசன் அவை தொடங்கும் போதே வருகை தந்து விட்டார். சபரீசன் வருகிறார் என்றதும் அமைச்சர்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. காலை சபரீசன் கோட்டைக்குள் வந்ததும் உதயநிதி ஸ்டாலின் அவரை வரவேற்று சட்டமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்.
உதயநிதிக்கும் சபரீசனுக்கும் இடையே நெருடல்கள் இருப்பதாக கட்சியினர் மத்தியிலேயே பேச்சு எழுந்துவரும் நிலையில் அதை உடைக்கும் வகையில் சபரீசனை வாசலுக்கே வந்து அழைத்துச் சென்றார் உதயநிதி. அமைச்சர்களும் திமுக எம்எல்ஏ.க்களும் அவருக்கு வணக்கம் தெரிவித்து புன்னகைத்தனர்.
முதல்வர் ஸ்டாலினுக்கு முன்பக்கம் இருக்கும் மாடத்தில் சபரீசன் அமர்ந்து முதல்வரின் உரை மற்றும் உறுப்பினர்களின் பாராட்டுரைகளை கேட்டார்.
சரியாக 12.15 மணி அளவில் சபரீசன் சட்டமன்றத்தில் இருந்து புறப்பட்டார்.
வணங்காமுடிவேந்தன்