ஆயுதப்படை காவலர் தற்கொலை: ஆன்லைன் சூதாட்டம் காரணமா?

சென்னை அம்பத்தூர் பகுதியில் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். ஆயுதப்படை காவலரான இவர், அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில் உள்ள மத்திய தொலைத்தொடர்பு பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவர் திடீரென தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து சம்பவ இடத்துக்கு வந்த அம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரவணகுமாரின் உடல் மீட்கப்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தச்சூழலில் சரவணகுமார் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டம் விளையாட்டில் அதிகமாகப் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “இன்று (7.5.2022) ஆன்லைன் சூதாட்டத்தால் அம்பத்தூர் ஆயுதப்படை காவலர் சரவணக்குமார் தற்கொலை செய்து கொண்ட செய்தி நெஞ்சை உலுக்குகிறது. உயிரைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டம் குறித்த வழக்கில் கோட்டை விட்ட இந்த விடியா அரசு, உரியத் தடை சட்டத்தைக் கொண்டு வராதது ஏன்?. இன்னும் எத்தனை உயிர் போகும்வரை காத்திருக்கப் போகிறீர்கள்? ஓராண்டு சாதனையில் இதுவும் ஒன்றா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-பிரியா