திமுக ஆட்சி பெயில் ஆகிவிட்டது: ஓபிஎஸ்

politics

திமுகவின் ஓராண்டு ஆட்சி பாஸ் மார்க் வாங்கவில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.

தஞ்சையில் களிமேடு பகுதியில் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த தேர் விழாவின் போது மின் விபத்து ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து இன்று (மே 7) ஆறுதல் கூறினார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட தலா ரூ. 1 லட்சத்துக்கான காசோலையையும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களில் யாருக்காவது வீடு இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகளுக்கு கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தேர் செல்லும் போது அந்த பாதையில் உள்ள சாலை மேடு பள்ளங்களாக இருக்கிறதா என கண்காணிக்க வேண்டும். தேரோட்டம் முடியும் வரை மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். அப்படி எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. எனவே கவனக்குறைவாகச் செயல்பட்ட அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகுபாடு இல்லாமல் ஒரு நபர் குழு விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறினார்.

திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவு குறித்துப் பேசிய அவர், “இந்த ஓராண்டு ஆட்சியில் திமுக பெயில் ஆகி விட்டது. பாஸ்மார்க் வாங்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று கூறினர். ஆனால் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சி சிறப்பாக இருந்தது. கடந்த ஆட்சியில் சமூக பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால் திமுக அதனை படிப்படியாகக் குறைத்து ரத்து செய்து கொண்டிருக்கிறது.

முதல்வர் பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்வது எல்லாம் உலக மகா அதிசயம் இல்லை. அதுபோன்று திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு ஏற்படும் என்பது கடந்த கால வரலாறு” என்று விமர்சித்தார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *