மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 மே 2022

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவை கைப்பற்ற முடியாது -அதிர்ச்சி கொடுத்த தினகரன்

டிஜிட்டல் திண்ணை:  அதிமுகவை கைப்பற்ற முடியாது -அதிர்ச்சி கொடுத்த தினகரன்

வைஃபைஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம் சில புகைப்படங்களை அனுப்பியது. மேதினப் பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காரைக்குடியில் கலந்துகொண்டு பேசிய படங்கள் தான் அவை.

இந்தப் படத்தை இப்போது ஏன் அனுப்புகிறது இன்ஸ்டாகிராம் என்று கேள்விக்குறி எழுந்த நிலையில் அதற்கு வாட்ஸ்அப் விடையளிக்கத் தொடங்கியது.

"அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டபோது அதிமுகவை மீட்டு அம்மாவின் உண்மையான ஆட்சியை நிறுவுவதுதான் எங்கள் நோக்கம் என்று அறிவித்தார் தினகரன். அவருடன் ஆரம்பகட்டத்தில் தீவிர அபிமானத்தோடும் பிடிமானத்தோடும் இருந்த பல இரண்டாம் கட்ட தலைவர்களும் மெல்ல மெல்ல அக்கட்சியில் இருந்து விலகி கொண்டிருக்கின்றார்கள்.

மே 1ஆம் தேதி தினகரன் காரைக்குடியில் மே தினப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி அக்கட்சியின் சிவகங்கை மாவட்ட முக்கிய நிர்வாகியும் தலைமை நிலையச் செயலாளருமான திருப்பத்தூர் உமாதேவன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது ஆதரவாளர்களும் அவரைப் பின்பற்றி அமமுகவில் இருந்து விலகினார்கள்.

தன்னுடைய விலகல் அறிக்கையில் உமாதேவன், 'அதிமுகவை மீட்டெடுப்பதை விட அமமுகவை முன்னிறுத்துவதிலேயே தினகரன் அதிக ஆர்வம் காட்டுகிறார்' என்று தெரிவித்திருந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட கட்சி நிர்வாகிகளை கூட நேருக்கு நேர் சந்திக்காமல் பல மாதங்கள் இருந்த தினகரன் சமீபகாலமாகத்தான் ஆக்டிவாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார். அதுவும் ஒவ்வொரு மாவட்ட கட்சி அமைப்பை பற்றி ஆய்வு செய்ய மண்டல பொறுப்பாளர்களை நியமித்து அவர்களின் ஆய்வு அறிக்கையை முன்வைத்து தலைமைக் கழக அலுவலகத்தில் கடந்த சில வாரங்களாக விவாதங்களையும் நடத்தி வருகிறார் தினகரன்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட அமைப்பிலும் விடுபட்டுப் போன நிர்வாகிகளை நிரப்புவது உள்ளிட்ட பணிகளை செய்யுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் தினகரன். அதேநேரம் சசிகலாவை சந்திக்கும் கட்சி நிர்வாகிகளை வெளிப்படையாக ஓரங்கட்டும் நடவடிக்கைகளையும் எடுத்து வந்தார்.

இந்த நிலையில்தான் மே தின பொதுக்கூட்டம் முடித்துவிட்டு காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி உள்ளிட்ட சில நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தபோது தினகரன் கூறிய சில விஷயங்கள் கிட்டத்தட்ட கடந்த நான்கு தினங்களாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருந்த தினகரன், 'நம்ம கட்சி அமமுக தான். அதிமுகவை மீட்போம் என்று ஒருபக்கம் சொன்னாலும் நமது கட்சியை நாம் வலிமைப்படுத்தி தேர்தலில் வென்றாக வேண்டும். அதிமுக இன்னும் பத்து வருடங்களுக்கு எடப்பாடி கையில் தான் இருக்கும். அவர்கள் அவ்வளவு பண பலத்தோடு இருக்கிறார்கள். அதனால் நம் கட்சியான அமமுகவை வலுப்படுத்தும் வேலைகளில் இறங்குங்கள். அவர்களால் திமுக அரசை கடுமையாக எதிர்க்க முடியாது. எனவே நாம்தான் திமுகவை கடுமையாக எதிர்த்து மக்கள் மன்றத்தில் வலிமையான எதிர்க்கட்சியாக மாற வேண்டும். அதன் பிறகு தேர்தலில் நம் பலத்தை நிரூபிக்க வேண்டும்' என்று கூறியிருக்கிறார் தினகரன்.

சசிகலா சமீபத்தில் மேற்கொண்ட ஆன்மீக பயணத்தின் போது கூட அதிமுகவை விரைவில் மீட்டு சரி செய்வேன் என்று பகிரங்கமாக பேசியிருந்தார். ஆனால் தினகரனோ, சசிகலாவின் கருத்துக்கு முரண்பாடாக தனது கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை வளர்க்கும் பணிகளில் தீவிரமாக இறங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கையில் இருந்து இந்த தகவல் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளுக்கு செவி வழியாக சென்றுள்ளது. இதைக் கேள்விப்பட்ட அவர்கள் அதிர்ச்சியடைந்து, 'அப்போ நாம எதுக்கு இந்த கட்சியில் இருக்கணும்?' என்று தங்களுக்குள் விவாதிக்க ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே பலர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து

அதிமுக, திமுக, பாஜக என்று எதிர்க்கட்சிகளுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில்... டிடிவி தினகரனின் இந்த நிலைப்பாடு அவரை உறுதியாக நம்பும் நிர்வாகிகளிடத்திலேயே ஊசலாட்டத்தை உண்டுபண்ணி உள்ளது" என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

சனி 7 மே 2022