மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 மே 2022

ஓராண்டு நிறைவு: முதல்வரின் 5 அறிவிப்புகள்!

ஓராண்டு நிறைவு: முதல்வரின் 5 அறிவிப்புகள்!

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு இன்றுடன் நிறைவடையும் நிலையில் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டார்.

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று (மே 7) காலை சட்டப்பேரவையில் சிறப்புரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் ஓராண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றியும் அதன் மூலம் பயன் பெற்றவர்களின் எண்ணிக்கையையும் குறிப்பிட்டுப் பேசினார்.

தொடர்ந்து ஓராண்டு நிறைவு நாளை முன்னிட்டு ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில்,

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளிக்கூடத்திலேயே காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதல்கட்டமாக ஊராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடமிருந்து இத்திட்டம் தொடங்கப்பட்டு படிப்படியாக விரிவுபடுத்தப்படும். பள்ளி வேலை நாட்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

டெல்லியைப் போன்று தமிழகத்திலும் ஸ்கூல் ஆஃப் எக்சலன்ஸ் எனப்படும் தகைசால் பள்ளிகள் தொடங்கப்படும். 25 மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பள்ளிகள் உருவாக்கப்படும். இங்கு மாணவர்களுக்குக் கல்வியோடு கலை, இலக்கியம், இசை, நடனம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

21 மாநகராட்சிகளில், 63 நகராட்சிகளில் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் தொடங்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் நோயாளிகளுக்கு மருத்துவ வசதி வழங்கப்படும்.

கிராமங்களில் ஆரம்பச் சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் இருப்பது போல நகர்ப்புறங்களில் மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே இந்த மருத்துவ நிலையங்கள் அமையவுள்ளன. மொத்தம் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் ஏற்படுத்தப்படும். ரூ.180.45 கோடி ரூபாய் செலவில் இந்த மருத்துவ நிலையங்களுக்குச் சொந்தக் கட்டிடங்கள் கட்டப்படும். இங்கு ஒரு மருத்துவர் ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுநர் ,மற்றும் ஒரு உதவியாளர் ஆகிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மருத்துவ நிலையங்களிலும் ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்து 2030ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் நல்வாழ்வு என்னும் இலக்கை தமிழ்நாடு எட்டும்.

ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சையும் வழங்கப்படும்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சரின் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். நீண்ட காலமாக நடைமுறைப் படுத்தப்படாத திட்டங்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளின் பேரில் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தொகுதிக்குத் தேவையான 10 முக்கியமான திட்டங்களை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளிக்க வேண்டும். இந்த பணிக்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டம் முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என்று அறிவித்தார்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

சனி 7 மே 2022