விசாரணை கைதி மரணம்: இரு காவலர்கள் கைது!

விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கில் 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கெல்லீஸ் சந்திப்பில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி தலைமைச் செயலக காலனி காவல்துறை உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், ஊர்காவல் படையைச் சேர்ந்த தீபக் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ், மற்றும் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் வந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் கஞ்சா, மது பாட்டில்கள், கத்தி ஆகியவை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த சூழலில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று விக்னேஷுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு விக்னேஷை பரிசோதித்த மருத்துவர்கள் நாடித்துடிப்பு குறைவாக உள்ளதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர். இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் இறந்துவிட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டு உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் உள்ளிட்ட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த எதிர்க்கட்சியான அதிமுக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதையடுத்து இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் நேற்று (மே 6) விக்னேஷ் மரணம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.
அவர் பேசுகையில், “விக்னேஷின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே சட்டப்பேரவையில் கடந்த 26ஆம் தேதி கொடுத்த தகவலும், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கும் முரண்பாடு இருக்கிறது. எனவே இந்த வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்து சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “விக்னேஷ் மரணம் தொடர்பாக ஏற்கனவே நான் பதிலளித்துப் பேசிய நேரத்தில் அவரது இறப்பு குறித்து ‘சந்தேக மரணம்’ என முறைப்படி வழக்குப்பதிவு செய்து மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகிறது. விக்னேஷ் உடல் ஏப்ரல் 20ஆம் தேதியன்று மாஜிஸ்திரேட் முன்னிலையில் மருத்துவ குழுவினரால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இது வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிவுற்ற பின்னர் அன்றைய தினமே உறவினர்களிடம் முறைப்படி உடல் ஒப்படைக்கப்பட்டது என்ற விவரத்தைத் தெரிவித்திருந்தேன்.
இந்த சூழலில் தற்போது கிடைத்துள்ள விக்னேஷ் பிரேதப் பரிசோதனை முடிவுகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டதைப் போல விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
இதனடிப்படையில் இந்த வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டு காவலர்கள் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு விசாரணை தொடர்ந்து நடத்திட சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்.
எனினும் இந்த பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “இந்த வழக்கு நேர்மையாக நடக்கும் வகையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தினோம். வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடாத நிலையில் அவையிலிருந்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம்” என்று கூறினார்.
இந்த நிலையில் விக்னேஷ் மரணம் அடைந்த அன்று காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர்கள் புகழும் பெருமாள், கணபதி, காவலர்கள் பவுன்ராஜ், முனாப், தீபக், கார்த்திக் ,தலைமைக் காவலர் குமார், பெண் காவலர் ஆனந்தி, செந்தில்குமார் ஆகியோர் நேற்று சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
இந்த விசாரணையைத் தொடர்ந்து இரு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமைச் செயலக காலனி காவல் நிலைய எழுத்தர் முனாப் மற்றும் காவலர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-பிரியா