மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 6 மே 2022

தொழிலாளர் நலன் - திறன்மேம்பாட்டுத் துறையின் ஓராண்டு சாதனைகள்!

தொழிலாளர் நலன் - திறன்மேம்பாட்டுத் துறையின் ஓராண்டு சாதனைகள்!

சட்டமன்றத் தேர்தலில் திமுக வென்று ஆட்சியில் அமர்ந்ததும் பல அமைச்சகங்களின் பெயர்களை, காலத்தின் தேவைக்கு ஏற்பவும் புதிதாகச் செய்ய வேண்டிய பணிகளின் முக்கியத்துவத்துக்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றியமைத்தார். அவற்றில், முன்னர் தொழிலாளர் நலன் - வேலைவாய்ப்புத் துறை அமைச்சகமாக இருந்தது, தொழிலாளர் நலன் - திறன்மேம்பாட்டுத் துறை என மாற்றப்பட்டது. புதிதாக்கப்பட்ட துறைக்கு அமைச்சர் ஆனார் சி.வி.கணேசன்.

கொரோனா இடர் காலத்தில் சவால்களை எதிர்கொண்ட முக்கிய துறைகளில் ஒன்றான தொழிலாளர் துறையின் அமைச்சர் சி.வி.கணேசன், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடிப்படையான உணவுத் தேவையை நிறைவேற்றுவதில் கவனமாக இருந்தார்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, வேலையிழந்து சொந்த ஊருக்கும் போக முடியாமல் புலம்பெயர் தொழிலாளர்கள் தவித்தனர். வருவாய்த் துறை போன்ற பிற துறையினருடன் இணைந்து அவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, தொழிலாளர் நலன் துறை 6. 66 கோடி ரூபாயை செலவிட்டது. அதன் தொடர்ச்சியாக, அவர்கள் பணியாற்றும் இடங்கள், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பிற அரசுத் துறையினருடன் கூட்டாகவும் நல உதவிகள் வழங்கப்பட்டன.

கொரோனா காலத்தில் நிறுவனம் சார்ந்த, நிறுவனம் சாராத, அமைப்புசாரா உள்ளூர்த் தொழிலாளர்களுக்கு நலவாரியத்தின்படியும் அரசின் சிறப்பு அறிவிப்பின்படியும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

கடைகள், நிறுவனங்களில் நின்றுகொண்டே பணியாற்றும் பணியாளர்களுக்கு ரத்தக்குழாய்ச் சுருட்டல், இதயக்கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இது குறித்த சட்டம் நிறைவேற்றுமாறு கோரிக்கைகள் எழுப்பப்பட்ட நிலையில், அதைச் செயலில் காட்டுவதில் இறங்கினார் அமைச்சர் சி.வி.கணேசன். முதலமைச்சரின் வழிகாட்டலுடன், பணி நேரத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கு ஏதுவாக இருக்கை வசதியை அமைத்துத் தர வேண்டும் என சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

வேலையின்மை பெருகிவரும் சூழலில், மாணவர், இளைஞர்கள் 5 லட்சம் பேருக்கு அவர்களின் கல்வி, அறிவு, திறனை உயர்த்த வேண்டும் என்கிற முதலமைச்சரின் கனவுத் திட்டத்தை, இந்தத் துறையின் திறன்மேம்பாட்டுக் கழகம் முக்கியப் பங்காளராக ஏற்றுக்கொண்டு செயல்பட்டுவருகிறது.

கொரோனாவால் அனைத்துத் தொழில்களும் சீர்குலைந்த நிலையில், மாநில அளவில் தீர்க்கப்படாமல் இருந்துவந்த 2,055 தொழில் தாவாக்கள் முடித்து வைக்கப்பட்டன. அத்துடன், 794 வழக்குகளில் சுமுகத் தீர்வு காணப்பட்டதும் முக்கியமானது.

தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கென இப்போது 18 நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் 1,85,660 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.247.49 கோடி அளவுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு வீட்டு மனை இருந்தால், அதில் வீடு கட்டிக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என கடந்த ஆண்டு முதல் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி செயல்முறைகள் தொடங்கப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சமையல் தொழிலாளர் நல வாரியத்தில் உணவக ஊழியர்களும் சேர்ந்து பயன் பெறும்படியாக அந்த வாரியத்தின் பெயர் இரு பிரிவினரையும் சேர்த்ததாகவும், அமைப்புசாரா ஓட்டுநர் நலவாரியத்தில் தானியங்கி பழுது பார்ப்போரும் சேர்ந்து பயன்பெற வசதியாக அதன் பெயரும் மாற்றியமைக்கப்பட்டது. அதற்கான அரசாணைகள் உடனே அறிவிக்கப்பட்டு, உரிய செயல்பாடுகளும் தொடங்கப்பட்டன.

உச்ச நீதிமன்ற ஆணையின்படி, அனைத்து மாநிலங்களும் இ-சிரம் எனும் ஒன்றிய அரசின் இணையதளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரத்தைப் பதிய வேண்டும். அதன்படி, தமிழ்நாட்டில் 70 லட்சத்து 48 ஆயிரத்து 529 பேர் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தி விதி மீறும் வகையில் பட்டாசு ஆலை நிர்வாகத்தினர் பலரும் நடந்து கொள்கின்றனர். அப்படியானவர்களுக்கு எதிராக 409 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கில், அவர்களிடமிருந்து ரூ.22.24 லட்சம் நீதிமன்றத்தால் அபராதமாக விதிக்கப்பட்டது. இப்படி தண்டனையும் அபராதமும் ஒருபக்கம் இருக்க, விபத்துகள் நடக்காமல் தடுப்பதற்கும் அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

கடந்த ஓராண்டில் மட்டும் பட்டாசு பாதுகாப்பு விழிப்பூட்டலுக்காக 32 முகாம்கள் நடத்தப்பட்டன. பட்டாசு ஆலை பயிற்சி மையம் மூலம் 61 ஒருநாள் பயிற்சியும், 7 ஒரு மாதப் பயிற்சிகளும் நடத்தப்பட்டன.

பொதுத் துறை நிறுவனங்களில் பணியில் சேர விரும்பும் பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகளில் ரூ.50 லட்சத்தில் இலவச வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டயம் படித்தவர்களுக்கான தனித்தனி தொழில் வாய்ப்பு குறித்த கையேடுகள் வெளியிடப்பட்டது. அவை துறையின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.

அரசின் வேலைகளில் மட்டுமின்றி தனியார் துறையிலும் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஓராண்டில் இப்படியான 419 முகாம்கள் மூலம் 68,014 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, தமிழ்நாடு அரசின் தனியார் துறை வேலை இணையத்தில் 35,515 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர்.

பெருகிவரும் நவீன தொழில் தேவைகளை முன்னிட்டு திறன்மேம்பாட்டுக் கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. 30 வகையான தொழில்களில் கடந்த ஓராண்டில் 79 ஆயிரத்து 34 பேருக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

என்னதான் நவீன தொழில் மயமான சூழல் பெருகினாலும், குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதும் ஆங்காங்கே கண்டறியப்படுகிறது. இப்படி, கடந்த ஓராண்டில் 291 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

சாதனைகள் தொடரும்...

விளம்பர பகுதி

.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வெள்ளி 6 மே 2022