மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 மே 2022

தமிழில் அர்ச்சனை: அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் திட்டம்!

தமிழில் அர்ச்சனை: அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் திட்டம்!

தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்கச் சிறப்புக் கட்டணச் சீட்டுகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

நான்கு நாட்கள் விடுமுறையைத் தொடர்ந்து நேற்று (மே 4) தமிழக சட்டப்பேரவை கூடியது. நேற்றைய தினம் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. கேள்வி நேரம் முடிந்ததும் துறை அமைச்சர் சேகர்பாபு 165 அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புக் கட்டணச் சீட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இந்த அர்ச்சனை கட்டணத்திலிருந்து 60 சதவிகிதம் அர்ச்சகர்களுக்குப் பங்கு தொகையாக வழங்கப்படும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் தொன்மையான 80 திருக்கோயில்கள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு நிதி மூலம் புனரமைப்பு செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்.

நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே ஐந்து திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படும்.

பழனிக்குப் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு வழித்தடங்களில் கோயில் சார்பில் 20 நாட்களுக்கு நாளொன்றுக்கு 10 ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

121 திருக்கோயில்களில் பராமரிக்கப்பட்டு வரும் கோசாலைகள் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

திருக்கோயில்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கான குளியல் தொட்டிகள் ஏற்கனவே 18 திருக்கோயில்களில் உள்ள நிலையில் மேலும் எட்டு கோயில்களில் புதிதாகக் குளியல் தொட்டிகள் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

திருக்கோயில்களில் இறைப் பணியில் ஈடுபட்டு இறைவனடி சேர்ந்த யானைகளைச் சிறப்பிக்கும் வகையில் முதல் கட்டமாக 10 திருக்கோயில்களில் நினைவு மண்டபங்கள் அமைக்கப்படும்.

கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கட்டணம் ஏதுமின்றி, கோயில் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு வாடகையும் இன்றி நடத்திட அனுமதிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள திருமணங்களுக்கு மணமகளுக்குப் புத்தாடைகள் திருக்கோயில் சார்பாக வழங்கப்படும்.

ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் நிதி வசதியற்ற 12,959 திருக்கோயில்கள் பயன்பெறுகின்றன. இத்திட்டம் இந்த ஆண்டு மேலும் இரண்டாயிரம் திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படும் திருக் கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத உதவித்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும்.

நடப்பாண்டு முதல் ஐந்து சிவாலயங்கள் மூலம் மகா சிவராத்திரி விழா நடத்தப்படும்.

ராமநாதபுரம் ராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து, காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயிலுக்கு இவ்வாண்டில் 20 நபர்கள் ஆன்மீக பயணம் அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான செலவின தொகை ரூபாய் 50 லட்சத்தை அரசே ஏற்கும்.

48 முதுநிலை திருக்கோயில்களிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக திருக்கோயில் வளாகத்தில் மரத்திலான சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படும்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் அமைக்கப்படும்.

ஐந்து திருக்கோயில்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.

21 திருக்கோயில்களில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகங்கள் கட்டப்படும்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கட்டணமில்லா காலை சிற்றுண்டி வழங்கப்படும்.

1000 திருக்கோயில்களில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி பராமரிப்பு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் கிழக்குப்பகுதி கடற்கரையில் கடல் அரிப்பு தடுப்பு பணி 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 5 மே 2022