மீண்டும் டீனாக ரத்தினவேல்

மதுரை மருத்துவ கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமிக்கப்பட்டுள்ளார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வைட் கோட் செரிமனி நடைபெற்றது. அப்போது மாணவர்கள் சமஸ்கிருத உறுதி மொழியான மகரிஷி சரக்கா சபதம் உறுதிமொழியை ஏற்றனர். இது சர்ச்சையான நிலையில் தவறுதலாக எடுக்கப்பட்டுவிட்டது என மாணவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த சூழலில் மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு நேற்று மதுரை மருத்துவக் கல்லூரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சூழலில், , இன்று காலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை டீன் ரத்தினவேல் சந்தித்து சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை குறித்து விளக்கத்தை அளித்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், கொரோனா காலத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி டீன் சிறப்பாக செயல்பட்டார். நடந்த தவறுக்கு அவர் மன்னிப்பு கேட்டு விட்டதால் முதல்வரின் உத்தரவுபடி மீண்டும் அவர் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
அதுபோன்று சமஸ்கிருத உறுதிமொழியால் பிற்காலத்தில் மொழி பிரச்சினை ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சையை தொடர்ந்து டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.