மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 மே 2022

மே 10: பேரறிவாளன் விடுதலை- உச்ச நீதிமன்றம் கெடு!

மே 10: பேரறிவாளன் விடுதலை- உச்ச நீதிமன்றம் கெடு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது பிணையில் இருக்கும் பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும் தன்னை வழக்கிலிருந்து விடுதலை செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

'தான் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. சட்டமன்றத்தில் ஒருமனதாக இந்த தீர்மானத்தை தமிழக அமைச்சரவையும் வழிமொழிந்து அந்த முடிவை தமிழக ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் எங்கள் விடுதலை விஷயத்தில் தமிழக ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தார். இது அரசியல் சாசனத்தை மீறிய செயல்" என்று பேரறிவாளன் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பேரறிவாளன் தனக்கு முன் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் இந்த மனு மீது உச்சநீதிமன்றம் முக்கியமான கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

பேரறிவாளனின் இந்த மனு கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து சரமாரியாக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்த சூழலில் இன்று மே 4ஆம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக எழுத்துப் பூர்வமான வாதங்கள் இருந்தால் அவற்றை தாக்கல் செய்யுமாறு ஏற்கனவே தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநரின் பங்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி தனது அறிக்கையை தமிழக அரசு மூலம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அமைச்சரவையின் முடிவு சட்ட சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தால் அதை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும் என்று ஒன்றிய அரசின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சட்ட பின்னணியில் இன்று மே 4ஆம் தேதி இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு ஒன்றிய அரசை நோக்கி கடுமையான கேள்விகளை எழுப்பியது.

"பேரறிவாளன் விடுதலை விஷயத்தில் ஒன்றிய அரசு வரும் மே 10ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றமே முடிவெடுத்து அறிவிக்கும். குடியரசுத் தலைவரின் முடிவுக்காக இனி நாங்கள் காத்து இருக்க மாட்டோம்.

இந்த விவகாரத்தில் மாநில அமைச்சரவை ஒரு முடிவு எடுத்து ஆளுநருக்கு அனுப்பும் போது அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதை முதலில் தெளிவு படுத்துங்கள்.

அமைச்சரவையில் தீர்மானம் மீது ஆளுநர் ஏன் முடிவெடுக்கவில்லை? குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க இந்த விவகாரத்தில் தேவை எழவில்லை.

25 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் சிறையில் இருந்த நிலையில் அவரது நடத்தை அடிப்படையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. பேரறிவாளன் விவகாரத்தில் ஒன்றிய அரசு முடிவெடுத்து மே 10ஆம் தேதிக்குள் தெரிவிக்க வில்லை என்றால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும்" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

மே 10ஆம் தேதி பேரறிவாளன் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் திருப்பம் நிறைந்த ஒரு முடிவு எட்டப்படும் என்கிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள்.

வேந்தன்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

புதன் 4 மே 2022