மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 மே 2022

ஜெயக்குமாருக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்!

ஜெயக்குமாருக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்!

ஈசிஆர் சாலைக்குக் கலைஞர் பெயர் சூட்டுவது பொதுமக்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தாது என்று பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

மே 1 ஆம் தேதி சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் 75ம் ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், ஈசிஆர் சாலைக்குக் கலைஞர் பெயர் சூட்டப்படும் என்று தெரிவித்தார். கிழக்கு கடற்கரைச் சாலை இனி முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று அழைக்கப்படும் என்று கூறினார்.

இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துப் பேசினார். அவர் கூறுகையில், ”சென்னை கிழக்கு கடற்கரைச் சாலைக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரை சூட்டுவதைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. இந்தியா முழுவதும் இருப்பவர்களுக்குக் கூட ஈசிஆர் என்றால் தெரியும். அந்த அளவுக்குப் பிரசித்தி பெற்ற சாலையின் பெயர் மாற்றப்படுவதை பொது மக்கள் விரும்ப மாட்டார்கள். கூடிய விரைவில் தமிழ்நாட்டைக் கூட கருணாநிதி நாடு என்று பெயர் மாற்றம் செய்தாலும் செய்வார்கள்” என்று விமர்சித்திருந்தார்.

இந்த சூழலில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எவ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அமைச்சர் எ.வ.வேலுவிடம் ஜெயக்குமாரின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதில் அளித்த அவர், “ஜெயக்குமாரை பற்றி அதிகம் சொல்ல விரும்பவில்லை. ஈசிஆர் பெயரை மாற்றினால் மக்கள் எல்லாம் குழம்ப மாட்டார்கள். மக்கள் தெளிவாகத் தான் இருப்பார்கள். சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரை உள்ள சாலைக்கு மட்டும்தான் கலைஞர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலை என்ற பெயர் தொன்றுதொட்டு இருந்ததல்ல. ஈசிஆர் சாலைக்குப் பெயர் வைத்ததே கலைஞர்தான். ஒரு வழிச் சாலையாக இருந்த அந்த சாலையை இரு வழி சாலையாக்கிப் பெயர் வைத்தது அவர்தான். நெடுஞ்சாலைத் துறையைத் தனித் துறையாக மாற்றியதும் அவர்தான். அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தான் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது. இதில் எந்த குழப்பமும் கிடையாது. ஜெயக்குமாருக்கு வேண்டுமானால் குழப்பம் இருக்கலாம்” என்று கூறினார்.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

செவ்வாய் 3 மே 2022