மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 மே 2022

டீன் மீதான நடவடிக்கையை ரத்து செய்க: மருத்துவ சங்கம்!

டீன் மீதான நடவடிக்கையை ரத்து செய்க: மருத்துவ சங்கம்!

மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவர்கள் சங்கம் முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளது.

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் விழாவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சமஸ்கிருத உறுதிமொழியான மகரிஷி சரக்கா சபதம் வாசிக்கப்பட்டது.

சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்த சூழலில் கடைசி நேரத்தில் விழாவிற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இந்த தவறு நடந்து விட்டதாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூறினர்.

இந்த சூழலில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், சரக்கா சபதம் என்னும் உறுதிமொழியைத் தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வந்த உடனேயே அந்த உறுதிமொழியை முழுவதுமாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் எதிர்த்தது.

பின்வரும் காரணங்களுக்காக இந்த உறுதிமொழியை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று தேசிய மருத்துவ ஆணையத்துக்குச் சங்கம் தெரிவித்திருந்தது.

சரக்கா சபதம் மூல ஆவணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை மேன்மைப்படுத்தி கூறியது. பசுக்களை மேன்மைப்படுத்தி கூறியது. ஆண் பெண் நோயாளிகள் பேதங்களைக் கூறி அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க நிபந்தனைகள் விதித்தது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஹிப்போகிரெடிக் உறுதிமொழியை இந்தியாவிலும் பயன்படுத்த வேண்டும் ஆகிய காரணங்களைக் கூறி சரக்கா சபதம் மருத்துவர்களும் மாணவர்களும் பயன்படுத்தக் கூடாது என்பதைத் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் உறுதியாகக் கூறுகிறது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி நடந்த தேசிய மருத்துவ ஆணைய எம்பிபிஎஸ் சேர்க்கை குறித்த ஆன்லைன் கூட்டத்தில் அதனுடைய தலைவர் அருணா, அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் முதலாமாண்டு மாணவர்களுக்கு வைட் கோட் செரிமனி என்பதனை இந்த வருடம் முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அந்த விழாவில் சரக்கா உறுதிமொழியை அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் பிரமாணம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

இந்த சூழலில் தேசிய மருத்துவ ஆணையத்திலிருந்து அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை வழங்கப்பட்டிருந்தது.

அதில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விழா வைட் கோட் செரிமனி நடத்தப்படவேண்டும் என்றும் அதில் சரக்கா சபதம் உறுதிமொழி மருத்துவ மாணவர்களால் ஏற்கப்பட வேண்டும் என்றும் அனைத்து முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பல்வேறு கல்லூரி முதல்வர்களுக்கும், மருத்துவர்களுக்கும், மருத்துவ சங்கத்துக்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றறிக்கை குறித்து மாறுபட்ட கருத்து இருந்தாலும் இது குறித்து வேறு சுற்றறிக்கையோ அறிவுறுத்தல்களோ தமிழக அரசிடமிருந்தோ மத்திய அரசிடமிருந்தோ வராத நிலையில் பெரும்பாலான தனியார், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் இந்த சுற்றறிக்கையைப் பின்பற்றி சரக்கா சபதத்தை மருத்துவ மாணவர்களை எடுக்க வைத்தனர்.

இதுபோலவே ஏப்ரல் 30ஆம் தேதி மதுரை மருத்துவக் கல்லூரியிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆனால் சமஸ்கிருதம் மற்றும் பிற மாநில மொழிகளைப் பயன்படுத்தி எந்தவித உறுதி மொழியோ அல்லது பேச்சுகளோ நடைபெறவில்லை. ஆங்கிலத்தில் தான் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ஆனால் தவறுதலாகத் தினசரி மற்றும் தொலைக்காட்சிகளில் மருத்துவ மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தார்கள் என்று செய்தி வெளியானது. அன்றைய தினம் உறுதிமொழி எடுக்கப்பட்ட விவகாரத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை.

எனவே மருத்துவமனை டீன் ரத்தினவேலுவை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வராக பணியமர்த்தி ஆணையிடும் படி வேண்டுகிறோம். தமிழக அரசில் பணிபுரியும் அனைத்து கல்லூரி முதல்வர்களும், மருத்துவர்களும், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கமும் தமிழக அரசின் ஆணைகளுக்கும், கொள்கைகளுக்கும் விதிகளுக்கும் மாறாகச் செயல்பட மாட்டோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-பிரியா

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா? ...

4 நிமிட வாசிப்பு

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா?  ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கேள்வி

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

4 நிமிட வாசிப்பு

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

திங்கள் 2 மே 2022