மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 மே 2022

ஸ்டாலின் உத்தரவை மதிக்காத அஞ்சாநெஞ்சன்: திமுகவின் போஸ்டர் சர்ச்சை!

ஸ்டாலின் உத்தரவை மதிக்காத அஞ்சாநெஞ்சன்: திமுகவின் போஸ்டர் சர்ச்சை!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகரில் இன்று மே 1 காலை ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை பார்த்து திமுகவினர், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பிரமுகர்களும் ஆச்சரியப்பட்டனர்.

இதில் ஆச்சரியத்தோடு அதிருப்தியும் அடைந்த விடுதலை சிறுத்தைகள் அந்த போஸ்டர்களை படமெடுத்து தங்களது மாவட்ட மாநில நிர்வாகிகளுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார்கள்.

அப்படி என்ன போஸ்டர்கள்? அதற்கு முன் ஒரு பிளாஷ் பேக்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் திமுக உறுப்பினர் ஆன ஜெயந்தி ராதாகிருஷ்ணன் நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டார். துணைத்தலைவர் பதவியாவது தங்களுக்கு கிடைக்கும் என சிறுத்தைகள் காத்திருக்க இந்தப் பதவிக்கு நெல்லிக்குப்பம் திமுக நகர செயலாளர் மணிவண்ணனின் மனைவி ஜெயபிரபா போட்டியிட்டு வென்று விட்டார்.

நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜெயந்தியின் கணவர் ராதாகிருஷ்ணன் உள்ளாட்சித் தேர்தலில் கோடிக்கணக்கில் செலவு செய்தவர். அவர் கடலூர் மாவட்ட அமைச்சர் கணேசன் உள்ளிட்டோரை சரிக்கட்டி பதவியைப் பெற்று விட்டார் என அப்போதே பேச்சு எழுந்தது.

இந்த நிலையில்தான் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுகவினரை ராஜினாமா செய்யச் சொல்வாரா முதல்வர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார். அதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றிய திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், 'கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினரால் நான் கூனிக் குறுகி நிற்கிறேன். அவ்வாறு வெற்றி பெற்றவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு என்னை வந்து சந்திக்க வேண்டும்' என்று அறிக்கை வெளியிட்டார்.

முதல்வரின் வார்த்தைகள் தங்களை நெகிழ் வைப்பதாக

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டார்.

ஸ்டாலின் இவ்வளவு கண்டிப்போடு சொல்லியும் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியைக் கைப்பற்றிய ஜெயந்தியின் கணவர் ராதாகிருஷ்ணன் பதவியை விட்டுக்கொடுக்க முற்றிலும் மறுத்துவிட்டார். ராதாகிருஷ்ணன் கோடிக்கணக்கில் செலவு செய்தவர் என்பதால் அவரை அதற்குமேல் வற்புறுத்த விரும்பாத மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கணேசன், திமுக நகர செயலாளர் மணிவண்ணனை அழைத்து சமரசம் பேசி அவரது மனைவி ஜெயித்த துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு சொல்லி அதை, விடுதலை சிறுத்தைகளுக்கு கொடுத்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நெல்லிக்குப்பத்தில் இன்று ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் களுக்கும் இந்த ஃபிளாஷ்பேக் சம்பவங்களுக்கும் சம்பந்தம் உள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டும் தனது மனைவியின் சேர்மன் பதவியை விட்டுக்கொடுக்காத ராதாகிருஷ்ணனுக்குதான் இன்று பிறந்தநாள். அவரை அஞ்சாநெஞ்சன் என்று அடைமொழி கொடுத்து போஸ்டர்கள் அடித்து ஒட்டி இருக்கிறார்கள் திமுகவினர்.

இந்தப் போஸ்டர்களிலேயே ஸ்டாலின் உத்தரவை எதிர்த்து துணைத் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்த நகர செயலாளர் மணிவண்ணனுக்கு மாவீரன் என்ற பட்டமும் சூட்டப்பட்டுள்ளது. திமுகவின் நகரப் பொருளாளர் ஜெயசீலன் பெயரில்தான் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

திமுக தலைவரின் முதல்வரின் உத்தரவை மதிக்காதவருக்கு அஞ்சாநெஞ்சன் பட்டத்தை திமுகவினரே அளித்திருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் புகைப்படங்கள் எடுத்து தங்கள் கட்சி மேலிடத்திற்கு அனுப்பி வருகிறார்கள்.

நெல்லிக்குப்பம் நகரத்தில் இருக்கும் திமுகவினர் சிலரும் கூட கட்சித் தலைவருக்கே அஞ்சாதவர் என்பதை போஸ்டர்கள் மூலம் காட்டுகிறாரா ராதாகிருஷ்ணன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாவட்டச் செயலாளருக்கும் திமுக தலைமைக்கும் இந்த போஸ்டர்கள் விஷயம் சென்றுள்ளது.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு கிலோ என்ன விலை என்று கேட்கிறார்கள் நெல்லிக்குப்பம் உடன் பிறப்புகள்.

வேந்தன்

நள்ளிரவில் முடிந்த நெல்லிக்குப்பம் பிரச்சனை: அமைச்சரின் அசத்தல் மூவ்!

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

ஞாயிறு 1 மே 2022