மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 மே 2022

சிறப்புக் கட்டுரை: உத்தரப்பிரதேச கச்சடா!

சிறப்புக் கட்டுரை: உத்தரப்பிரதேச கச்சடா!

ஸ்ரீராம் சர்மா

‘ஹிந்தி தெரியாது போடா’ எனும் வாசகமடங்கிய மேலுடையினை அணிந்தபடி சில பிரபலங்கள் சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டபோது…

“போடா’ எனும் அந்த ஒருமை விளிப்பு தேவைதானா ? நாகரீகத்துக்கு பெயர் போன நம் தமிழ் மண்ணுக்கு அது பொருந்துமா ? மெல்ல சொல்லியியிருக்க வேண்டாமா என்றெல்லாம் எண்ணி மறுகியதுண்டு.

இன்று அந்த எண்ணம் மாறி மலையேறிவிட்டது.

அந்த மேலுடையை எனக்கும் கொடுங்கள். நானும் அணிந்து கொண்டு இன்னும் உரக்க சொல்கிறேன் என்னுமளவுக்கு என்னையும் தள்ளி விட்டதே அந்த நச்சரவப் பேச்சு !

சஞ்சை நிஷாத் என்னும் உத்திரப்பிரதேச அமைச்சர் பல் துலக்காத வாயில் பாம்பின் விஷத்தை குதப்பிக் கொப்பளித்தவராய் பன்மையே வடிவான பாரத மண்மேல் புளிச்சென உமிழ்ந்து விட்டாரே !

“இந்தி தெரியாத மக்களுக்கு இந்தியாவில் இடமில்லை. அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம்…“

அட, அற்ப அமைச்சனே…

யாரை வெளியேற சொல்கிறாய் ? எவர் தந்தார் உனக்கந்த உரிமையை ?

இந்தியம் என்பது உன்னோடு மட்டுமா ? உன் மண்ணோடு மட்டுமாகுமா ?

ஜான்ஸி ராணியை தெரிந்த உனக்கு , அவருக்கு 77 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி விடுதலை கண்ட வேலுநாச்சியாரை தேசத்துக்கு தெரிவிக்காமல் விட்டதால் வந்த கேடா ? எங்கள் வரலாற்றை உனக்கு போதிக்க ஆளில்லை எனும் நினைப்பா ?

இன்றளவும் பனி படர்ந்த மலையில் எல்லை காத்து நிற்கும் எம் தமிழர் வீரத்தை – அவர்தம் தியாகத்தை நீ அறிவாயா ? சொல், உன்னை ஒருமையில் விளிப்பதில் தவறேதும் உண்டா ? என்றெல்லாம் ஏக வசனமாக எழுத வைத்து விட்டாரே அந்த மாண்புமிகு உத்தரபிரதேசத்து அமைச்சர் !

இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுள் ஹிந்தியைப் போல தமிழும் ஒன்று. ஆக, தமிழ் தெரியாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என அதிரச் சொல்லும் உரிமை தமிழுக்கும் - தமிழருக்கும் உண்டல்லவா ?

தமிழர்களுக்கு மட்டுமல்ல, மலையாளம் பேசும் கேரளம், கன்னடம் பேசும் கர்நாடகம், தெலுங்கு பேசும் ஆந்திரம், ஒரியா பேசும் ஒடிஷா, வங்க மொழி பேசும் வங்காளம், அஸ்ஸாமி பேசும் அஸ்ஸாம், கொங்கணி பேசும் கோவா, குஜாரத்தி பேசும் குஜராத், மராத்தி பேசும் மகாராஷ்டிரா , பஞ்சாபி பேசும் பஞ்சாப் என சகலருக்கும் அந்த உரிமை உண்டென்பதை மறுக்கலாகுமா ?

எவரும் சொல்லத் துணியாத ஒன்றை உத்திரப் பிரதேசம் சொல்கிறது எனில் அதனை அறியாமை என்பதா அல்லது அழுகிய சஞ்சை நிஷாத்தின் மொழி வெறித் திமிர் என்பதா ?

நிஷாத் என்பது அந்த அற்ப மனிதன் தனக்கு கேடையமாக்கி கொண்ட சாதிய அடைமொழி. அதில், மாநிலத்தின் எளிய மீனவப் பெருங்குடிகளில் பதினேழு உட்பிரிவுகள் அடங்கி நிற்க - எளியவர்களை அவமானப்படுத்த தமிழர் நாகரீகம் இடம் கொடுக்காது என்பதால், இனி அந்தப் பதரை சஞ்சை என்று மட்டுமே அழைப்பேன்.

சஞ்சைக்கு தாய் மொழி ஹிந்தி என்பதால் உணர்வு மேலிட அப்படி பேசி விடலாம் எனில், இந்தியப் பெரு மண்ணில் பலவிதமான தாய் மொழிகள் உண்டல்லவா ! அவரவர்களுக்கும் தாய் மொழி உணர்வு உண்டல்லவா !

அனைத்தவரெலாம் உணர்வு மேலிட ஒன்று கூடி எச்சரித்தால் சஞ்சையின் ஹிந்தி மொழி என்ன கதியாகும் என எண்ணிப் பார்த்திருக்க வேண்டாமா ?

இந்திய ஒருமைப்பாட்டின் மீது கந்தகம் வீசிய சஞ்சையை கண்டித்திருக்க வேண்டும் அந்த மாநிலத்தின் மாண்புமிகு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் !

“ஒற்றுமை விரும்பும் இந்திய மக்களிடம் மன்னிப்பு கேள், இல்லாவிட்டால் எனது அமைச்சரவையை விட்டு வெளியேறு” என உறுதியாக உத்தரவு இட்டிருக்க வேண்டும் அந்த மாண்பமை முதலமைச்சர். செய்தாரா ? செய்வாரா ?

அரசியல் பித்தலாட்டங்களுக்காக சுயலாபம் கருதி சஞ்சை கக்கிய அந்த நஞ்சின் வீரியம் ஒன்றியம் எங்கும் வீரித் துளைக்கும் என்பதை யார் உணர்வாரோ இல்லையோ மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் உணர்வார் என நம்புகிறேன்.

ஒன்றியம் என தமிழகத்தார்கள் விளித்தழைப்பது தேசத்துக்கு எதிரான உணர்வல்ல.

மாறாக, இதுபோன்று வெறிகொண்ட - தறிகெட்ட அரசியலாளர்களுக்கான எதிர்வினைதான் அது என்பதை ஏற்று - தன்வசம் உள்ள தற்குறிகளை அடங்க சொல்லி - இந்திய பன்மைத்துவத்தை இனிதே நிலைநிறுத்த ஆவன செய்து அரசாள்வார் என மனதார நம்பி மேலும் எழுதுகிறேன்

ஹிந்தி வெறி கொண்ட திருவாளர்களுக்கு ஒன்று சொல்வேன்.

ஐயன்மீர்…

மொழிப்பற்று என்பது வேறு . மொழி வெறி என்பது வேறு என்பதை அறிக !

என் தாய் அழகானவள் என்பதற்கும், அயலானின் தாயை விட என் தாயே மேலானவள் என அழிச்சாட்டியம் செய்வதற்குமுண்டான வேறுபாட்டையும் அறிக. ஐயோ, அது அநாகரீகத்தின் உச்சம் என உணர்ந்து வெட்கிக் கொள்க.

நிற்க.

மொழிப்பற்றுக்கான மெய்யழகை தமிழர்களிடமிருந்து உங்களால் கற்றுக் கொள்ள முடியும் !

தொல்காப்பியமும் அதற்கு ‘முந்துநூல்’ எனப்படும் அகத்தியமும் தமிழ் மண்ணின் ஈடற்ற இலக்கண நூல்களாக எழுந்தநின்ற போதிலும்…

ஆயிரமாண்டுகளான வழிவழி மொழிப் புழக்கத்தில் தமிழ்ப் புலவர்கள் வட மொழியையும் தமிழோடு கலந்தே புனைந்தார்கள்.

எந்த மொழி மாச்சரியமும் இன்றி அதனை தமிழ் சமூகம் உளமார ஏற்றுக் கொண்டது. இன்றளவும் ஏற்றுக் கொள்கிறது. காரணம், அது இயல்பாக நிகழ்ந்தது.

இயல்பாக நிகழும் எதுவொன்றும் காலம் கடந்து நிற்கும். திணிக்கப்படும் எதுவொன்றும் எந்த காலத்திலும் எதிர்க்கப்படும்.

இன்றைய தமிழக அரசாங்கத்தின் அலுவல் மொழி பயன்பாட்டில் - உருது மொழி உட்பட பல மொழிகளும் கலந்துள்ளன எனினும் அதனை தமிழுலகம் ஏற்றுக் கொண்டதற்கு காரணம் உண்டு.

அது, ஓசை !

மொழிக்கு அழகு சேர்க்க பத்துவகை சூத்திரம் சொல்லும் நன்னூல் இலக்கணம் அதன் நடுமத்தியாக ஓசை என்பதை நிறுவி வைத்தது !

சுருங்க சொல்லல், விளங்க வைத்தல்

நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்

ஓசை யுடைமை ஆழமுடைத் தாதல்

முறையின் வைப்பே உலகமலை யாமை

விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்து

ஆகுதல் நூலிற்கு அழகெனும் பத்தே !

ஆம், ஓசையின் அவசியத்தை நடுநாயகமாக குறித்தது நன்னூல் !

“அகண்டமண்டலாகாரம் வ்யாப்தம் யேன சராசரம்” எனும் வடமொழியும், - “முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண” எனும் திருப்புகழும் - ஓசையின் பாற்பட்டே இன்றளவும் உயிர்த்திருக்கின்றது !

செவிக்கு அழகு சேர்க்குமெனில் அதனை மொழி மாச்சரியம் ஏதுமின்றி முன்னோர் வழிகொண்டது தமிழுலகம் !

தமிழினத் தலைவர் கருணாநிதி என்கிறீர்களே அவரது பெயரே வட மொழியில்தானே இருக்கிறது எனக் கூப்பாடு போடுபவர்களுக்கு இதுவே பதிலாகும்.

உதாரணமொன்று சொல்வேன் தயவுசெய்து கவனியுங்கள்…

பொறியாளர் ஒருவர் தன் உயரிய உபகரணங்களைக் கொண்டு மிகச் சரியானதொரு நேர்கோட்டை ஒரு தாளில் இட்டுக் காட்டுகிறார். அதே தாளில் ஓவியர் ஒருவரும் ஒரு நேர் கோட்டை வரைந்து காட்டுகிறார்.

பூதக்கண்ணாடி வைத்து இரண்டையும் பாருங்கள். பொறியாளர் இட்ட கோடு மிகச் சீராக இருக்கும். ஓவியர் வரைந்த கோட்டில் சிலபல நெளிவுகள் இருப்பதை பூதக்கண்ணாடி காட்டி நிற்கும்.

பூதக்கண்ணாடி அகற்றி – இயல்பாக கண் கொண்டு பாருங்கள்…

பொறியாளர் இட்ட கோடு நம் கண்ணை அறுக்கும். மாறாக, ஓவியர் வரைந்த கோடு நம் கண்ணுக்கு இனிமை தரும்.

அந்த இனிமைக்கு காரணம், இலைமறை காயாக அதில் இருக்கும் நெளிவு சுளிவுகளே ! அதுபோல்தான் மொழியும் !

சற்றே வடமொழி கலந்த தமிழ் மொழிக்குதான் சுவை அதிகம் என்பதை திருவாய்மொழி முதலான சோழ கால படைப்புகள் யாவும் பறைசாற்றி நிற்கின்றன. இன்றளவும் அதனை மக்கள் மனப்பாடமாக மொழிகிறார்கள்.

‘மணிபிரவாள நடை’ என அதற்கு பெயர் சூட்டிக் கொண்டாடுகின்றது தமிழ் பேருலகம் ! ஆம், மொழியின் வளர்ச்சி மக்களின் பாட்டே !

சமஸ்கிருதத்தில் இருந்து கிளைத்த மொழியே ஹிந்தி என்பார்கள். சமஸ்கிருதமே இருந்திருக்கலாமே. அதில் இருந்து ஹிந்தி ஏன் கிளைத்து எழுந்திருக்க வேண்டும் ?

எனில், எந்த மொழியும் மண்ணின் மக்களால் வாழும் காலத்துக்கேற்ப நைய சமைத்துக் கொள்ளப்படும் என்பதே அதற்கான பதிலாகும். மொழி வரலாறு படித்தவர்களுக்கு அது புரியும்.

உலகின் செம்மொழியான தமிழ் மொழியே அதற்கான உதாரணமாகிறது !

அப்படியாக ஆயிரமாயிரமாண்டு காலமாக மொழிகளுள் ஊடாடி தன்னை வளர்த்தாடும் தமிழ் மொழிக்கு முன்பு வெட்கித் தலை குனிந்தாக வேண்டும் உத்தரப்பிரதேச சஞ்சையின் ஹிந்தி வெறி.

ஆதங்கம் அடங்கவில்லை.

இறுதியாக சொல்லி முடிக்கிறேன்

மக்கள் தொகையில் மூன்று மடங்கு அதிகம் என்ற போதிலும், கல்வியில் தமிழகத்தை விட தாழ்ந்து இருக்கும் உத்தரபிரதேசத்தில் இருந்து இப்படி ஒரு குரல் எழுந்தது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனினும், அது அபத்தமானது. ஆபத்தானது என்பேன்.

ஜிடிபி - தனி நபர் வருமானம் மட்டுமல்ல சகலத்திலும் உத்தரப் பிரதேசத்தை விட உயர்ந்து நிற்கும் தமிழகத்துக்கு அதை தட்டிக் கேட்கும் உரிமை உண்டு எனத் துணிந்து முரசரைவேன்.

அந்த சஞ்சை வாழும் உத்தரப்பிரதேசத்தை விட, எமது தமிழ்நாட்டில் பத்து சதவிகிதம் அதிகமாகவே இந்துக்கள் வாழ்கிறார்கள் எனினும். மத மாச்சரியம் ஏதுமில்லாமல் நல்ல பொழுதாகவே நாளும் விடிகின்றது.

அந்த விடியல் இந்தியப் பெருநிலமெங்கும் பரந்துபட வேண்டும் என்றுதான் தமிழுலகின் அறிவுலகம் விழைகிறது !

பாழரசியல் செய்து பல கட்சி மாறி - அப்பாவி மீனவ சாதி மக்களின் வயிற்றிலடித்து - பாஜக துணையோடு பச்சைக் கரைகண்ட சஞ்சைக்கு அது புரிபடாது எனில்…

தட்டிப் புரிய வைத்து விடும் தமிழர் இனம் !

தொட்டால் சீறும் எங்கள் முதலமைச்சருக்கு அது பிறவிக் குணம் !

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

ஞாயிறு 1 மே 2022