இளங்கோவன் மாவட்டச் செயலாளரா? பதவி விலகிய ஒன்றிய செயலாளர்- எடப்பாடி கோட்டையில் ஆட்டம்!


முதல்வராக இருக்கும்போது கூட அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வந்த எடப்பாடி பழனிச்சாமி, கடந்த வாரம் நடந்த மாவட்டச்செயலாளர் தேர்தலில் தான் வகித்த பதவியை தனது வலது கரமான ஆத்தூர் இளங்கோவனுக்கு கொடுத்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சித் தேர்தல் நிறைவு கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் நிலையில்... விரைவில் பொதுக்குழு கூட்டப்பட்டு அதற்கு ஒப்புதல் பெறப்பட இருக்கிறது.
இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பத்து வருடங்களுக்கு மேலாக சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் என்ற பதவியில் இருந்து வந்தார். இந்த முறைதான் மாவட்ட செயலாளர் பதவியை தான் வைத்துக் கொள்ளாமல் தனது நெருங்கிய நண்பரான ஆத்தூர் இளங்கோவனிடம் கொடுத்திருக்கிறார்.
எடப்பாடியே மீண்டும் மாவட்ட செயலாளராக வருவதற்கு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் இளங்கோவனுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டது சேலம் மாவட்ட அதிமுகவில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதன் விளைவாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான சேலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வையாபுரி தனது ஒன்றிய செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எடப்பாடியை மீறி சேலம் மாவட்ட அதிமுகவில் எதுவும் நடக்காது என அதிமுகவினர் கூறி வரும் வேளையில் எடப்பாடி எடுத்துள்ள இந்த முடிவுக்கு எதிராக தனது ஒன்றிய செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் வையாபுரி.
இதுகுறித்து சேலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வையாபுரியிடம் மின்னம்பலம் சார்பாக உரையாடினோம்.
"கட்சித் தேர்தலில் எடப்பாடி அண்ணன் தான் முதலில் நாமினேஷன் பண்ணினார். அவர்தான் மாவட்ட செயலாளராக வருவார் என்று நாங்கள் எல்லாம் வாழ்த்து சொல்லி விட்டு வந்தோம். ஆனால் சம்மந்தமில்லாமல் இளங்கோவன் பெயர் மாவட்ட செயலாளராக வருகிறது.
இளங்கோவன் ஏற்கனவே இந்த மாவட்டத்தில் 4 தொகுதிகளில் கட்சியை அழித்தவர், கட்சிக்கு துரோகம் செய்தவர். ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு, வீரபாண்டி ஆகிய 4 தொகுதிகளும் ஏற்கனவே இளங்கோவன் பொறுப்பில்தான் இருந்து வருகின்றன. அங்கே கட்சியினருக்கு பல தொந்தரவுகளை கொடுத்து வருகிறார் இளங்கோவன். இந்த நிலையில் அவருக்கு எட்டு தொகுதிகளை கொடுத்து மாவட்ட செயலாளர் ஆக்கிவிட்டார்கள். இனியும் இளங்கோவனின் சித்திரவதைகளை தாங்க முடியாது என்பதால் நான் ஒன்றிய செயலாளர் பதவியை விட்டு விலகி விட்டேன்" என்ற வையாபுரியிடம்....
"சேலம் அதிமுக எடப்பாடியின் கோட்டை என்கிறார்கள். அவரது முடிவை எதிர்த்து நீங்கள் ராஜினாமா செய்திருப்பது அதைப் பொய்யாக்குமா?" என்று கேட்டோம்.
"சேலம் இன்னும் எடப்பாடியின் கோட்டை என்பது உண்மை. மண்ணின் மைந்தர் முதல்வரானார் என்பதால் அவரை நாங்கள் ஆதரித்தோம். ஆனால் இளங்கோவனை நியமித்ததன் மூலம் எடப்பாடிக்கு கெட்ட பெயர்தான் ஏற்பட்டுள்ளது. என்னைப் போன்ற பல நிர்வாகிகள் இளங்கோவன் மாவட்ட செயலாளர் ஆனதால் மன உளைச்சலில் தான் இருக்கிறார்கள். கஷ்டத்தில் தான் இருக்கிறார்கள். என்னைப் போன்று தெளிவாக முடிவெடுக்க இன்னும் பலர் முன்வரலாம். அதுவும் குறிப்பாக ஆத்தூர் கெங்கவல்லி ஏற்காடு வீரபாண்டி பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இளங்கோவனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இளங்கோவனுக்கு இன்று பல அரசியல் நெருக்கடிகள் இருக்கின்றன. இந்த நிலையில் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுத்திருப்பது சேலம் அதிமுகவினரை காயப்படுத்தியுள்ளது. இதன் விளைவுகள் அடுத்தடுத்து வெளிப்படலாம்" என்கிறார் ஒன்றிய செயலாளர் பதவியை விட்டு விலகிய வையாபுரி.
எடப்பாடிக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் பலரும் இளங்கோவன் நியமனத்தால் அவருக்கு எதிரான நிலைப்பாடு எடுக்க தொடங்கி விட்டார்கள். இந்த நிர்வாகிகளை சசிகலா ஆதரவாளரான எடப்பாடி சுரேஷ் தொடர்புகொண்டு ஒருங்கிணைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேந்தன்