தமிழினத்தைச் சாதி மதத்தால் பிரிக்க முயற்சி: ஸ்டாலின்

politics

திருவான்மியூர், ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நேற்று (ஏப்ரல் 24) மாலை நடைபெற்ற ரமலான் இஃப்தார் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அவரை சிறுவர், சிறுமியர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் ரமலான் இஃப்தார் நிகழ்வைத் தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

அஸ்ஸலாமு அலைக்கும் என தனது உரையை தொடங்கிய முதல்வர், இப்தார் நோன்பு திறக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டுள்ள சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெருமக்களுக்கும் மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் என கூறினார்.

தொடர்ந்து சிறுபான்மை இயக்கத்திற்கும், திமுகவுக்கும், கலைஞருக்குமான நட்பு பற்றி பல்வேறு உதாரணங்களைப் பட்டியலிட்ட திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், `நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானத்தை நான்தான் – கலைஞருடைய மகன்தான் – “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான்” கொண்டு வந்து நிறைவேற்றினேன். முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது என்பதுதான் உண்மை. இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

மாநிலங்களவையில் சிஏஏவிற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்தான் அதிமுக உறுப்பினர்கள்.இந்தப் பத்து பேரும் ஆதரித்ததால்தான் அந்தச் சட்டமே நிறைவேறியது.

நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் – மக்களவையிலும் இதனை எதிர்த்து, மக்கள் மன்றத்தில் கையெழுத்து இயக்கம் நடத்திய கட்சி திமுக. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சி தி.மு.க. – என்பதை யாரும் மறுக்கவோ – மறைக்கவோ முடியாது` என்றார்.

மேலும், இசுலாமியச் சிறுபான்மையினர் சமுதாயத்திற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், `மதம் என்பதும், சமய நம்பிக்கைகள் என்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள் ஆகும். ஆனால் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு செயல்பட வேண்டும். அப்படிச் செயல்பட்டால் கிடைக்கும் நன்மையும் அதிகம், பலமும் அதிகம்.

தமிழினத்தைச் சாதியால் – மதத்தால் பிரிக்கச் சிலர் முயற்சி செய்கிறார்கள். அவ்வாறு செய்தால்தான் தமிழினத்தை அழிக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.

நம்மைப் பிளவுபடுத்துவதன் மூலமாக – நமது வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். அதற்குத் தமிழினம் பலியாகிவிடக் கூடாது. அதற்குப் பின்னால் இருக்கும் சதியை உணர்ந்து – தெளிந்து – புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் அமைதி நிலவ வேண்டும், அமைதியான – நிம்மதியான நாடுதான் அனைத்துவிதமான வளர்ச்சியையும் பெறும். அத்தகைய வளர்ச்சிக்கான சூழ்நிலையைக் கடந்த ஓராண்டுக் காலத்தில் நம்முடைய அரசு உருவாக்கி உள்ளது.

அதனால்தான் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் வளர்ச்சியானது தமிழ்நாட்டை இந்தியாவின் சிறப்பான மாநிலங்களில் முதலிடத்தைப் பெறும் அளவிற்கு முன்னோக்கி நகர்த்தி வருகிறது.

இத்தகைய வளர்ச்சிக்கு அனைத்துத் தரப்பினரும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சொல்லி – இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இப்தார் வாழ்த்துகளை நான் சொல்ல விரும்புகிறேன்` என தனது உரையை நிறைவு செய்தார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *