~கொரோனா நான்காவது அலை: மீண்டும் கட்டுப்பாடுகள்?

politics

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ள நிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
2019 இறுதியில் தொடங்கி உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்ட்டாக்ரான், ஒமிக்ரான் என உருமாற்றம் அடைந்து பரவிக்கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். தற்போது உலக முழுவதும் ஒமிக்ரான் கலவையின் XE பரவிக் கொண்டிருக்கிறது.
இந்த வகை பாதிப்பு இந்தியாவிலும் பரவியுள்ளது. குறிப்பாக டெல்லியில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கியுள்ளது. தற்போது டெல்லியில் தினசரி பாதிப்பு 1000த்தை கடந்து பதிவாகி வருகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் சிலரின் மூலக்கூறுகளை ஆய்வு செய்ததில் ஒமிக்ரானில் இருந்து உருமாற்றம் அடைந்த கொரோனா BA.2.12 (52 சதவிகித மாதிரிகள்) , BA.2.10 (11 சதவிகித மாதிரிகள்) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர BA.2.12.1 டெல்லியில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குக் காய்ச்சல், சளி, உடல் சோர்வு, தலைவலி, வாசனை, சுவையிழப்பு உள்ளிட்டவை அறிகுறிகளாக இருந்தன.
இந்தச் சூழலில், புதிய மாறுபாடுகளின் அறிகுறி பட்டியலையும் தேசிய சுகாதாரம் சேவை மையம் வெளியிட்டுள்ளது. அதில் மூச்சுத் திணறல், சோர்வு , உடல்வலி, தலைவலி, தொண்டைப் புண், மூக்கு அடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல், பசியின்மை, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை எடுத்துக்கொண்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி, மும்பை, கேரளா உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா நான்காவது அலையாகப் பரவுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியிலிருந்து வருகிறது.
ஆனால் தமிழகத்தில் இன்னும் XE போன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா பரவவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் கூறினாலும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக மே மாதம் முதல் பொதுத் தேர்வு தொடங்குகிறது, அதைத்தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கும் நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருவது பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதார அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இதில், கட்டாயம் மாஸ்க் அணிவது, தடுப்பூசி போடும் பணியைத் தீவிரப்படுத்துவது, வெளிமாநிலம், வெளிநாட்டிலிருந்து வருபவர்களைக் கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
அதேசமயத்தில் கொரோனா பரவி வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ, வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்ற ஓர் அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *