மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 ஏப் 2022

டிஜிட்டல் திண்ணை: உட்கட்சித் தேர்தல்: ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட் உத்தரவுகள்!

டிஜிட்டல் திண்ணை:  உட்கட்சித் தேர்தல்: ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட் உத்தரவுகள்!

வைஃபை ஆன் செய்ததும் திமுக உட்கட்சி தேர்தல் பற்றிய செய்திக் குறிப்புகளை இன்ஸ்டாகிராம் அனுப்பியது.

அதைப் பார்த்த வாட்ஸ்அப் தனது செய்தியை டைப் செய்யத் தொடங்கியது. "திமுகவில் உட்கட்சி தேர்தல்கள் தொடங்கி நடந்து வருகின்றன. பேரூர், நகரம், மாநகர வட்டச் செயலாளர்கள் தேர்தல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களின் அறிவுறுத்தல் படி தலைமை கழக நிர்வாகிகளால் அந்தந்த நகர, பேரூர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து ஏப்ரல் 23, 24 தேதிகளில் அந்தந்த மாவட்ட கட்சி அலுவலகங்களில் கொடுத்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

பேரூராட்சி நகராட்சிகளில் 22 ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை வட்ட அவைத்தலைவர், வட்டச்செயலாளர்,வட்ட துணைச் செயலாளர்கள், பொருளாளர், வட்ட மேல் அமைப்புப் பிரதிநிதி ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சிகளில் ஏப்ரல் 29, 30, மே 1 தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் அக்கட்சியின் அமைப்பு தேர்தல் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துவதாகவே இருக்கும். கொண்டாட்டங்கள் முதல் கொலை வரை திமுக உட்கட்சித் தேர்தல் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. திமுக தலைவராக கலைஞர் இருந்தபோது அவர் விரும்பாதவர்கள் கூட தேர்தலில் ஜெயித்து மாவட்ட செயலாளர் ஆகவே வந்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு செஞ்சி ராமச்சந்திரன் மாவட்ட செயலாளர் தேர்தலில் வெற்றி பெற வேண்டாம் என்று கலைஞர் கருதினார். ஆனால் தொண்டர்களின் ஆதரவு நிர்வாகிகளின் ஆதரவு செஞ்சி ராமச்சந்திரனுக்கு இருந்ததால்

மாவட்ட செயலாளர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். கட்சி ஜனநாயகத்துக்கு மதிப்பு கொடுத்து அவரை மாவட்ட செயலாளராக வரவேற்றார் கலைஞர். இப்படிப்பட்ட ஜனநாயக கட்டமைப்பு நிறைந்ததாக திமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்றது உண்டு.

இந்த நிலையில் தற்போதைய கட்சித் தேர்தலில் அமைச்சர்களாக இருக்க கூடிய மாவட்ட செயலாளர்கள் தங்கள் பலத்தை பயன்படுத்தி தங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்கள் யார் பதவிக்கு வர வண்டும் யார் யார் வரக்கூடாது என்று சட்டமன்ற இடைவெளியான சனி ,ஞாயிறு தினத்தில் தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள்.

ஏற்கனவே பேரூர், நகர மற்றும் மாநகரங்களில் பகுதி செயலாளராக இருப்பவர்கள் தாங்கள் மீண்டும் தொடர்வதற்கு அமைச்சர்களை சந்தித்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இப்போது பதவியில் இருப்பவர்களுக்கு எதிராக அவர்களின் கடந்த பத்தாண்டு நிர்வாக குளறுபடிகள், அதிமுகவோடு தொடர்பில் இருந்து கடந்த பத்தாண்டுகளில் கட்சிக்கு எதிராக செயல்பட்டு சம்பாதித்தது என்பதையெல்லாம் குறிப்பிட்டு புதியவர்களும் கட்சிப் பதவிகளை கைப்பற்ற தீவிர முனைப்பில் இருக்கிறார்கள்.

இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் பேரூர், நகரம், பகுதி, ஒன்றியம் ஆகியவற்றை கட்சி அமைப்பு ரீதியாக பிரித்தது சரியாக இருக்கிறதா, அதில் புகார்கள் உள்ளனவா என்பது பற்றியெல்லாம் ஆராய்வதற்கு முதன்மைச் செயலாளர் கே. என். நேரு, துணைப் பொதுச்செயலாளர் ஆ ராசா, மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் அடங்கிய ஒரு குழுவை நியமித்துள்ளார் தலைவர் ஸ்டாலின். இவர்கள்தான் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நிலவிவரும் இது தொடர்பான புகார்களை கேட்டு பரிசீலித்து முடிவு எடுப்பதற்கு பரிந்துரை செய்வார்கள் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

இந்த பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட அமைப்புகளும் மறு வரையறை செய்யப்பட வாய்ப்பு இருக்கின்றன. கோவை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்ற நிலை இருக்கிறது. இதனால் பல மாவட்ட செயலாளர்கள் உருவானாலும் மாவட்ட செயலாளர்களின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படுகிறது என்ற குறை இருந்து வந்தது. இதை மாற்றி 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற நிலையை ஏற்படுத்த நினைக்கிறார் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின். நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த அமைப்பு முறை பயன்படும் என்று கருதுகிறார் ஸ்டாலின். அந்த வகையில் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக புதிய மாவட்டங்களை உருவாக்க வரையறை செய்வதற்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார் ஸ்டாலின்.

திமுக உட்கட்சி தேர்தலை பொறுத்தவரை ஸ்டாலின் பிறப்பித்துள்ள இன்னொரு முக்கியமான உத்தரவு கட்சிக்குள் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும். திமுக கட்சி பதவி என்பது வலிமையானதாக இருக்கும் நிலையில் அதற்காக போட்டியிடலாம், ஆனால் சண்டை போடக் கூடாது என்பதுதான் ஸ்டாலினின் முக்கிய உத்தரவு. மிக அமைதியாக கூடுமானவரை போட்டி இல்லாமல் பேசி முடித்து நிர்வாகிகளை சுமுகமாக தேர்வு செய்ய வேண்டும் என்பதையும் உத்தரவாகவே பிறப்பித்துள்ளார் ஸ்டாலின்" என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து வாட்ஸ்அப் ஆஃப்லைன் போனது.

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

ஞாயிறு 24 ஏப் 2022