கொடநாடு: சசிகலா விசாரணை - அடுத்த சம்மன் மூன்று பேருக்கு!

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதன் முக்கிய அம்சமாக கடந்த 21, 22 தேதிகளில் கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளரான சசிகலாவிடம் இவ்விவகாரத்தை விசாரிக்கும் தனிப்படை போலீஸார் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.
சென்னை தியாகராய நகரில் இருக்கும் சசிகலாவின் வீட்டுக்கே சென்று போலீஸார் அவரிடம் இந்த இரு நாட்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஒட்டுமொத்த விசாரணையின் விவரம் என்ன... இதன் பிறகு போலீஸாரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்விகள் எழுந்து நிற்கின்றன.
தனிப்படை போலீஸ் வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தோம்.
"இரண்டாம் நாள் விசாரணையில் சசிகலாவிடம் கொடநாடு எஸ்டேட் யார் யாருக்கு சொந்தமானது, யார் நிர்வாகம் செய்து வருகிறார்கள், யாருக்கு பங்கு உள்ளது என்று கேட்டிருக்கிறார்கள். சசிகலா பதில் சொல்லி முடித்ததும்,
'கொலை, கொள்ளைக்குப் பிறகு அங்கே விவேக் சென்றுள்ளாரே! ஏன்?' என்று கேள்வி கேட்டனர். 'ஜெயலலிதா இருக்கும்போதே விவேக் மீது மிகவும் பாசமாக இருப்பார். அவருக்கு விவேக் என்றால் ஒரு ஸ்பெஷல் அன்புதான். இந்த அடிப்படையில் அவர் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று வந்துகொண்டிருந்தார். இந்த சம்பவத்தின்போது நாங்கள் சிறையில் இருந்ததால் என்ன நடந்திருக்கிறது என்பதை அறிந்து வருவதற்காக விவேக் அங்கே சென்று வந்தார்" என்று பதிலளித்திருக்கிறார் சசிகலா.
'இந்தக் கொலை கொள்ளை சம்பவங்களை இன்னார்தான் செய்திருப்பார்கள் என்று யாரையாவது நீங்கள் சந்தேகப்படுகிறார்களா?' என்று போலீஸார் கேட்டுள்ளனர்.
அதற்கு சசிகலா, "நான் யாரை சந்தேகப்பட முடியும்? நீங்கள் போலீஸார்தான் இதை சொல்ல வேண்டும். தமிழ்நாடு போலீஸ் உலகத்திலேயே சிறந்த போலீஸ் என்பதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். எனவே போலீஸாராகிய நீங்கள்தான் இந்த விவகாரத்தில் குற்றம் செய்தவர்களை கண்டுபிடித்துத் தர வேண்டும். உங்களால் அது முடியும்" என்று தன் மீது போலீஸ் வீசிய பந்தை போலீஸிடம் திருப்பிவிட்டார் சசிகலா.
அடுத்ததாக, 'கொடநாடு எஸ்டேட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் பொருட்கள் பற்றிய பல்வேறு கருத்துகள் உள்ளன. அங்கே என்னன்ன டாக்குமென்ட்கள் இருந்தன என்று உங்களுக்குத் தெரியுமா?' என போலீஸார் கேட்க,
"ஜெயலலிதா இருக்கும்போது கட்சிப் பிரமுகர்கள் கட்சிக்காக பலர் தங்கள் சொத்துகளை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பத்திரங்கள் எஸ்டேட்டில்தான் இருந்தன" என்று பதிலளித்துள்ளார் சசிகலா.
'சென்னையில் ஒரு தனியார் அப்பார்ட்மென்ட்டில் கொடநாடு எஸ்டேட்டில் இருந்த சொத்து பத்திரங்கள் கைப்பற்றப்பட்டது உங்களுக்கு தெரியுமா?' என்று அடுத்த கேள்வியை வீசியுள்ளது போலீஸ்.
"அதெல்லாம் என்ன டாக்குமென்ட் என்று எனக்குத் தெரியவில்லை" எனப் பதில் அளித்துள்ளார்.
இந்த விசாரணையின்போது சசிகலா, "கொடநாடு எஸ்டேட் என்பது ஒரு கோயில் போன்றது. அங்கே இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து இருப்பது யாரோ வகுத்துக் கொடுத்த சதித் திட்டமாக இருக்கலாம். சிசிடிவி கேமராக்களைப் பொறுத்தவரை அதன் இயக்கங்கள் பற்றி எஸ்டேட் மேனேஜருக்குத்தான் முழுமையாக தெரியும்" என பதில் அளித்துள்ளார் சசிகலா.
ஆக இந்த இரண்டு நாட்கள் விசாரணையில் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்தில் இன்னார் மீதுதான் சந்தேகம் என சசிகலா போலீஸாரிடம் தெரிவிக்கவில்லை.
அதேநேரம் ஏற்கனவே எஸ்டேட் மேனேஜர் நடராஜன், விவேக் ஆகியோரிடம் நடத்தப்பட்ட பல மணி நேர விசாரணை விவரங்கள், தற்போது சசிகலாவிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் போலீஸாருக்கு ஏதோ ஒரு விஷயத்தை கோர்வையாகக் கொண்டு வருகின்றன.
இந்த மூவரின் விசாரணை விவரங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்ததாக மிக முக்கியமான இன்னொரு மூன்று பேரை இந்த வழக்கு விவகாரத்தில் போலீஸார் விசாரிக்க இருக்கிறார்கள்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, எடப்பாடியின் வலதுகரம் என்று சேலம் மாவட்டத்தில் சொல்லப்படும் முன்னாள் மாநிலக் கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகிய மூவரிடமும் கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் போலீஸார் விசாரணை நடத்த உள்ளார்கள். அவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும்" என்கிறார்கள் விசாரணை வட்டாரங்களில்.
வணங்காமுடி