மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 ஏப் 2022

தொடர் மின்வெட்டு: செந்தில் பாலாஜியை எச்சரிக்கும் திமுகவினர்

தொடர் மின்வெட்டு: செந்தில் பாலாஜியை  எச்சரிக்கும் திமுகவினர்

சேர்ந்தே இருப்பது திமுக ஆட்சியும் மின்வெட்டும் என்று திருவிளையாடல் வசனத்தையே திருத்தும் அளவுக்கு தமிழ்நாட்டில் இப்போது மின்சார பிரச்சனை எரிந்து கொண்டிருக்கிறது.

சில மாதங்களாகவே கிராமப்புறங்களில் மின்சாரம் வருவதும் போவதுமாக இருக்க... கடந்த இரண்டு மூன்று நாட்களாக நகர கிராம பேதமின்றி தமிழ்நாடு முழுவதும் மின்சார விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரும் அளவிற்கு மின்வெட்டு முக்கிய பிரச்சனையானது. மத்திய தொகுப்பில் இருந்து வரவேண்டிய மின்சாரம் வராததே இந்த திடீர் மின்வெட்டுக்கு காரணம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.

நேற்று ஏப்ரல் 22 ஆம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர நுகர்வோர் மின் சேவை மையம் மின்னகம், மாநில மின் பகிர்தளிப்பு மையம் மற்றும் சென்னை மின் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,

"கோடை காலத்தில் ஏற்படும் மின் பற்றாக்குறையை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஏற்கனவே முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கென 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்படவில்லை.

இதன் காரணமாகவே 41 இடங்களில் மட்டும் மின் தடை ஏற்பட்டது.

கடந்தகால அதிமுக ஆட்சியின் போதும் இதுபோன்ற மின்வெட்டு 68 முறை நடைபெற்றுள்ளது.

இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சீரான மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், மத்திய அரசு தினசரி வழங்க வேண்டிய நிலக்கரியை யும் போதிய அளவு வழங்கவில்லை. இதனால் தமிழகத்திற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

விரைவில் இந்த நிலக்கரி பெறப்படும்.

குஜராத் மகாராஷ்டிரா உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு தொழிற்சாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அரசின் நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் அதுபோன்ற சூழல் ஏற்படவில்லை. தமிழகத்திற்கு தேவையான மின் உற்பத்தியை நாமே உற்பத்தி செய்யும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 5 சதவீத மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகாலம் முடிவடையும் போது கண்டிப்பாக தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழும்" என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசின் மின் தொகுப்பிலிருந்து மின்சாரம் வரவில்லை காரணத்தையும் திமுக அரசு நிர்வாகத்தில் திறமையாகத்தான் இருக்கிறது என புள்ளி விவரங்களையும் செந்தில் பாலாஜி அடுக்கினாலும் மக்களின் தேவை மின்சாரம் மட்டுமே.

திமுகவினரே கூட செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளில் திருப்தி அடையாமல், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கள யதார்த்த உண்மைகளை பதிவிட்டு வருகின்றனர்.

அவற்றில் சில பதிவுகள்...

தினேஷ் கே.வி.

இப்படி மின்வெட்டு ஆனால் கழக உடன்பிறப்பு எனக்கே இவ்வளவு கோவம் வருதே பொதுமக்களுக்கு எத்தனை கோவம் வரும்? அ தி மு க ஆட்சி இருக்கும் போது இப்படி மின்வெட்டு ஆகலைனுதான் பேசுறாங்க. தி மு க ஆட்சிக்கு வந்ததும் மின்வெட்டு ஆகிறது என்று கிராமத்தில் பேசும் அளவில் நமது கழக ஆட்சி நடை பெறுகிறது.

பாபுஜி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதி பரங்கிப்பேட்டை ஒன்றியம்... அண்ணன் தயவு செய்து விரைவில் மின்சாரத்தை சரி செய்யுங்கள். திமுக ஆட்சி வந்தாலே மின்சாரத்தை நிறுத்திவிடுவார்கள்பா என ஊர் பொதுமக்கள் எங்கள் பகுதியில் பேசிக்கிறாங்க. ரொம்ப தலைகுனிவா இருக்கு. வருகின்ற பாராளுமன்றத்திற்கு அவர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என்று பொதுமக்கள் பேசிக் கொள்கிறார் அண்ணா. அந்த கெட்ட பெயர் நம் கழகத்துக்கு ஏற்படாமல் விரைவில் முடித்து விடுங்கள் 🙏

எஸ்.கே.எம். மணி

தஞ்சை மாவட்டத்தில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது அமைச்சரே!!! பாட்டு வேற போட்டு நம்ம ஆட்சியை கலாய்க்கிறார்கள். என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அமைச்சரே.... தக்க நடவடிக்கை எடுங்கள்.

ஏபிஎஸ் அருண்

பல்வேறு இடங்களில் இன்று மிகக் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது குழந்தைகளின் அழுகை சத்தம் மிக வேதனை அளிக்கிறது விரைவில் விரைவில் தீர்வு காண்போம்

செந்தில் குமார்

அண்ணா நான் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன் மீண்டும் மின்வெட்டு அதிகமாக உள்ளது சீக்கிரம் சரி செய்யவும் நமது அரசுக்கு கெட்ட பெயர் வந்து கொண்டிருக்கிறது.

ஜீவா ஆனந்த்

மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்

உணவின்றி ஏற்படும் பசிக்கொடுமையை விட தற்போது மின்சாரத்தடையையே மக்கள் கொடுமையாக நினைக்கிறார்கள். கடந்த 2011ல் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்தமைக்கு சீரான மின் வினியோகம் இல்லாததுதான் காரணமாய் அமைந்தது. மக்களின் நேரடி விமர்சனத்திற்கும் எரிச்சலுக்கும் உள்ளாகும் . ஆகவே மாண்புமிகு முதல்வரின் தலைமையில் அனைத்து துறைகளும் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதை மக்கள் பாராட்டுகின்றனர். தங்களின் நிர்வாக திறமையில் நம்பிக்கை வைத்து கடினமான துறையை தங்களிடம் ஒப்படைத்துள்ளார்கள்.ஆகவே மின்தடையற்ற மாநிலமாக உருவாக்குவீர்கள் என்ற வகையில் தங்களின் மேலான கவனத்திற்கு இந்த பதிவினை பதிவிடுகிறேன்.நன்றி.

ஏ.துரை

மத்திய தொகுப்பில் இருந்து வழங்குவது தடை பட்டாலும் மின் தடை என்று மாநில அரசைத்தான் குறை சொல்வார்கள். மத்திய தொகுப்பில் தடை ஏற்படுவது ஒன்றிய அரசு போதுமான நிலக்கரி வழங்காமல் காலங்கடத்துவது இதெல்லாம் வேண்டும் என்றே மாநில அரசின் நற் பெயருக்கு களங்கம் உண்டாக்கும் செயல்.

பழனி

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு துணை மின்நிலையத்தில் தொடர்ந்து மின்வெட்டு நிகழ்கின்றது. இன்று இரவு 10.30க்கு நின்ற மின்சாரம் அதிகாலை 1.33க்கு மின்சாரம் வந்தது. அதேபோல் காலை 6 30க்கு நின்றுவிட்டது‌.

,நமது ஆட்சியில் கிராமங்கள் அதிகளவு மின்சாரம் இல்லாமல் மிகவும் பாதிப்படைகிறோம். விரைந்து சரிசெய்ய வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்

கோவை தம்பி ராஜ்

இன்றுமட்டுமல்ல தொண்டாமுத்தூர் தொகுதியில் தினமும் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை மின் வெட்டு.

இதனால் மக்களின் பொதுவான கருத்து திமுக அரசியல் இது தான் என்றாகிவிட்டது. தொண்டாமுத்தூர் தொகுதியை சற்று கூர்ந்து கவனிக்க வேண்டுகிறேன்.

மகாதேவன் மகா

பழையபடி ஆளுமை அற்ற பிற்போக்கு சக்திகள் அரசியல் ஆதாயம் தேட மின்சார தடையை பயன்படுத்த நாமே அனுமதிக்கிறோம். மக்கள் அரசின் நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு அல்லாத காரணம் எனவே தகுந்த விரைவான நடவடிக்கை மூலம் மின்சார பற்றாக்குறை நீங்கும் படி இருக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

தமிழன் ஏ.எஸ். தமிழன்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில்

இன்று மட்டும் காலை முதல் இரவு

8மணி வரை 8 முறை தடை.

இதில் என்ன மன வேதனை

என்றால், பெரும்பான்மை மக்கள் கூறுவது தி.மு.க.ஆட்சி வந்தாலே

இப்படித்தான் இருக்கும். இது நமது முதல்வர் நல்லாட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில்

அமைந்து விடும். அதுவும் பழனி நகரில் மின் தடை என்பது தொடர்

கதையாக இருந்து வருகிறது.

இது போன்ற நிகழ்வு இனி எப்போதும் ஏற்படா வண்ணம்

நிர்வாகத்தை சீர்படுத்துங்கள்

அண்ணா.

சம்பத்

மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு... கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திருநாவலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார் குப்பம் மின் பகிர் துணை மின் நிலையம் உள்ளது. இங்கு இருக்கும் பன்னாடைகள் மின் புகார் எண் எழுதிவிட்டு கால் செய்தால் இது வரையில் ஒரு நாள் கூட கால் எடுப்பது இல்லை.

இங்கு பணியில் இருக்கும் அனைத்து பணி மாற்றம் செய்திட வேண்டும். இப்போது தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த பதிவு இடும் போதும் மின்சாரம் இல்லை 5மணி நேரம் மேல் ஆகிறது. இவண் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் திருநாவலுர் மேற்கு ஒன்றியம் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம்

ஈஸ்வரன் தங்கவேல்

மிகக் கொடுமையானது ஆயிரம் நல்ல விசயம் செய்தும் பலனில்லை,

இன்னும் கரன்ட் வரவில்லை குழந்தைகள் வயதானவர்கள் அவதி.

ஜோசப் சாம்ராஜ்

மாண்புமிகு அமைச்சர் அவர்களே 2006-2011 வரை ஆற்காடு வீராச்சாமி அவர்கள் மின்துறை அமைச்சராக இருந்தபோது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்ததால் நாம் (திமுக)ஆட்சியை இழந்தோம் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் சொந்தமாக தயாரிப்பீர்களோ தனியாரிடம் வாங்குவீர்களோ மின்தடை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.அதேபோல் மும்முனை மின்சாரம் அடிக்கடி தடைபடுகிறது அதையும் சரிசெய்யவும்.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஃபேஸ்புக் பதிவில் இடப்பட்ட திமுகவினரின் சில பின்னூட்டங்கள் தான் மேலே நாம் பார்த்தது. இன்னும் கோபமாக இன்னும் கடுமையான பல கருத்துக்களை திமுகவினரே தங்கள் பதவிகளை குறிப்பிட்டு பதிவிட்டு வருகிறார்கள்.

வேந்தன்

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

சனி 23 ஏப் 2022