மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 22 ஏப் 2022

மக்கள் தூங்க முடியவில்லை: எடப்பாடி பவர்கட் அட்டாக்

மக்கள் தூங்க முடியவில்லை: எடப்பாடி பவர்கட் அட்டாக்

கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினை குறித்து இன்று ஏப்ரல் 22 ஆம் தேதி சட்டமன்றத்தில் அதிமுக பிரச்சனையை கிளப்பியது.

அதற்கு மின்சார அமைச்சர் செந்தில்பாலாஜி விரிவாக பதில் அளித்தார்.

இருந்தும் அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,

"தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மின்வெட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் கவனத்துக்கு இதை நாங்கள் கொண்டு சென்றோம்.

தமிழகத்தில் இன்று 16,500 மெகாவாட்டில் இருந்து 17 ஆயிரத்து 500 மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் மின் உற்பத்தி 12,800 மெகாவாட்டில் இருந்து 13,100 மெகா வாட்டாக தான் இருக்கிறது.

இதற்கு காரணம் தமிழ்நாடு மின்சார வாரியம் நிலக்கரியை முறையாக கொள்முதல் செய்யவில்லை. மத்திய தொகுப்பிலிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நிலக்கரியை பெறாத காரணத்தினாலும் இன்றைக்கு அனல் மின் நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரி கிடைக்காமல் அவை முழுமையாக செயல்படாததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால்தான் மின்தடை ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு முழுமையான காரணம் அரசாங்கத்தின் தவறான முடிவுகள் தான். கோடைகாலம் வருகின்ற போது மின்சாரத்தின் தேவையும் அதிகரிக்கும். அதிமுக ஆட்சியில் கோடைகாலம் வருவதற்கு முன்பே தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் இருந்தும் தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்து இருப்பில் வைத்து இருந்தோம். கோடைகாலம் வருகின்றபோது தடையில்லாமல் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கினோம். அதனால் கடந்த 10 ஆண்டுகளாக மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. அதற்கு முன்னர் 2006- 11 திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு தமிழ்நாட்டிலிருந்து தொழிற்சாலைகள் எல்லாம் வெளியேறின.

மீண்டும் இப்போதைய திமுக ஆட்சியிலும் மின்வெட்டு ஏற்படத் தொடங்கிவிட்டது.

2011 இல் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் இன்னும் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என்று சொன்னார். அவரது கடும் முயற்சியின் காரணமாக தமிழகத்திலே தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பிறகும் அதிமுக அரசு தொடர்ந்து மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கி கொண்டிருந்தோம். மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கி கொடுத்தோம். அதனால் புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வந்தன.

ஆனால் இன்றைய நிலை? இன்றைய அரசு சரியான முறையில் செயல்படாத காரணத்தால் கோடை காலத்திற்கு ஏற்ற வகையில் மின் உற்பத்தி செய்யத் தவறிய காரணத்தால் இன்றைக்கு அனல் மின்நிலையங்கள் முழுமையான உற்பத்தி செய்ய முடியாமல் மக்களுக்கு கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரம் இல்லை. தேர்வு சமயத்தில் இந்த மின்வெட்டால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.

விவசாயிகள் கோடைகாலத்தில் பம்பு செட்டுகளை இயக்க வேண்டும். தேவையான மின்சாரம் வேண்டும். ஆனால் தேவையான மின்சாரம் இல்லாததால் வேளாண் பணிகள் பாதிக்கின்றன.

இவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் இரவில் தூங்குவதற்கு மின்விசிறியை தான் பயன்படுத்துகிறார்கள். மின்சாரம் இல்லாததால் புழுக்கத்தில் மக்களால் நிம்மதியாக தூங்க கூட முடியவில்லை.

மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழவேண்டும் என்பதற்காக சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தமிழகம் வரை ஆறாயிரம் மெகாவாட் மின்சாரத்தைக் கொண்டு வருவதற்கு மின் பாதை அமைக்கப்பட்டது. அதிலே 4,000 மெகாவாட் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். கேரளாவுக்கு 2000 மெகாவாட் செல்கிறது.

அதிமுக ஆட்சி இறுதியில் இந்த மின் பாதை அமைக்கப்பட்டது. மின்பற்றாக்குறை ஏற்படுவதை அறிந்து அரசாங்கம் வெளி மாநிலத்தில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்து வழங்கியிருக்கலாம். அதையும் செய்யத் தவறிவிட்டது.

காற்றாலை மின்சாரம் இருந்தும் இப்போது மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது என்று சொன்னால் அது நிர்வாகக் கோளாறுதான்.

திமுக அரசு தடையில்லா மின்சாரத்தை அரசு வழங்காததை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்" என்ற எடப்பாடி பழனிசாமியிடம், "மத்திய மின் தொகுப்பிலிருந்து

மின்சாரம் வழங்குவதும் நிலக்கரி வழங்குவதும் குறைக்கப்பட்டு விட்டதால் தான் இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டு" என்று அமைச்சர் சொல்கிறாரே என கேள்வி கேட்டனர்.

"அதிமுக ஆட்சியில் 50,000 டன் நிலக்கரி கொடுத்தார்கள். அதேதான் இப்போதும் கொடுக்கிறார்கள்" என்று பதில் கூறினார் எடப்பாடி பழனிச்சாமி.

வேந்தன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வெள்ளி 22 ஏப் 2022