மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 ஏப் 2022

கொடநாடு வழக்கு: சசிகலாவிடம் நாளையும் விசாரணை?

கொடநாடு வழக்கு: சசிகலாவிடம் நாளையும் விசாரணை?

கொடநாடு கொலை வழக்கில் சசிகலாவிடம் நடத்தப்பட்ட விசாரணை இன்று நிறைவடைந்த நிலையில் நாளை காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அடுத்தடுத்து விபத்துகளில் உயிரிழந்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் கொடநாடு பங்களாவிற்குச் சென்று வந்த சசிகலாவிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு, சம்மன் அனுப்பினர்.

“கொடநாடு எஸ்டேட் குறித்து சசிகலாவுக்கு முழுமையான விவரங்கள் தெரியும். முன்னாள் முதல்வர் எடப்பாடி ஆட்சியில் இந்த கொலை கொள்ளை வழக்கு பற்றிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அப்போது பல விஷயங்கள் தவிர்க்கப்பட்டு விட்டதாக சந்தேகங்கள் எழுந்தன. மேலும் கொடநாடு எஸ்டேட்டில் திருடு போன பொருள்கள் என்ன அவற்றின் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி சசிகலாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது” என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

“சசிகலாவிடம் கொடநாடு எஸ்டேட் பற்றியும் அதில் கொள்ளை போன பொருட்கள் பற்றியும் விசாரித்து முழுமையாகத் தெரிந்து கொண்டபின் எடப்பாடி பழனிசாமியை விசாரித்தால்தான் அவரிடம் கிடுக்கிபிடி கேள்விகளைக் கேட்க முடியும் என்று போலீசார் கணக்குப் போட்டுள்ளார்கள்” என்று வழக்கறிஞர்கள் வட்டார தகவல்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக மின்னம்பலத்தில் கொடநாடு சசிகலாவுக்குச் சம்மன் எடப்பாடி டென்சன் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த சூழலில் இன்று காலை 10.30 மணி அளவில் தி.நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் அவரிடம் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான 8 போலீசார் விசாரணை நடத்தினர். நீலகிரி எஸ்பி ஆசிஷ் ராவத் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். கொடநாடு எஸ்டேட் எப்போது வாங்கப்பட்டது? அங்கு பணிபுரிந்தவர்கள் விவரம், எஸ்டேட்டில் இருந்த ஆவணங்கள், சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

காலை 10.30 மணிக்குத் தொடங்கப்பட்ட விசாரணை காலை, பிற்பகல் என 6 மணி நேரம் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இன்று நடைபெற்ற விசாரணை வீடியோவிலும் எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டதாகவும், சசிகலா விசாரணக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும்,நாளையும் அவரிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

-பிரியா

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

வியாழன் 21 ஏப் 2022